உணவு என்று வரும்போது ஒன்றுக்கும் மேற்பட்ட வகையான உணவுகளை சேர்த்து உண்ணும்போது அவை, செரிமானம் ஆகும்போதும், சத்துக்கள் உறிஞ்சப்படும்போதும் ஒன்றுக்கொன்று துணையாய் நின்று சக்தியை வெளிக்கொண்டுவர உதவ வேண்டும். அவ்வாறு சேர்ந்து செயல்பட முடியாமல் இரண்டு உணவுகள் வேறுபட்ட இயல்பைக் கொண்டிருந்தால், அப்போது அந்த காம்பினேஷனை தவிர்த்து விட வேண்டும். அப்படித் தவிர்க்க வேண்டிய காம்பினேஷன் எவை என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
பால் மற்றும் பால் சார்ந்த பொருள்களை சிட்ரஸ் பழ வகைகளுடன் சேர்த்து உண்பது நல்லதல்ல. ஏனெனில், சிட்ரஸ் பழங்களிலுள்ள அசிடிட்டி பால் பொருட்களிலுள்ள புரோட்டீனை கெட்டுவிடச் செய்யும். இதனால் ஜீரணக் கோளாறும் ஊட்டச்சத்துக் குறைபாடு உண்டாகும் அபாயமும் வரும்.
பாஸ்தா அல்லது பிரட் போன்ற மாவுச் சத்து அடங்கிய உணவுகளை புரோட்டீன் சத்து அதிகமுள்ள உணவுகளோடு சேர்த்து உண்பது நன்மை தராது. ஏனெனில், ஜீரணமாகும் செயலில் மந்த நிலை ஏற்பட்டு வயிற்றில் உப்புசம் போன்ற கோளாறுகள் உண்டாகும் வாய்ப்பு உருவாகும்.
அதி பயங்கரமான ஜீரணக் கோளாறுகளை உண்டுபண்ணும் ஃபுட் காம்பினேஷன் என்றால் அது பாலுடன் மீனை சேர்த்து உண்பது எனலாம். காரணம், இவை இரண்டிற்கும் ஜீரணமாவதற்கு வெவ்வேறு என்சைம்கள் தேவைப்படுகின்றன.
பாலுடன் வாழைப் பழத்தை சேர்த்து உண்ணுவதும் நல்ல காம்பினேஷன் ஆகாது. ஏனென்றால், இது செரிமானக் கோளாறுகளை உண்டுபண்ணி நச்சுக்கள் உருவாக வழி வகுக்கும்.
காஃபின் அடங்கிய உணவையும் அதிகளவு சர்க்கரை சேர்ந்த உணவுகளையும் சேர்த்து உண்பது அபாயகரமான விளைவுகளை உண்டுபண்ணும். இரண்டிலிருந்தும் வெளிப்படும் சக்தியானது ஒன்றோடொன்று மோதிக்கொள்வதால் இரத்த சர்க்கரை அளவைப் பராமரிப்பதில் இடையூறு உண்டாகும்.
தயிருடன் வெங்காயம் சேர்த்து உண்பதும் நல்ல காம்பினேஷன் ஆகாது. ஏனென்றால் வெங்காயம் செரிமானக் கோளாறுகளை உண்டுபண்ணவும், வயிறு வீக்கமடையவும் காரணியாகும். வெங்காயம் வாய்வு உற்பத்தி செய்யக்கூடிய உணவு. இது அதிகளவு புரோட்டீன் அடங்கிய தயிருடன் சேரும்போது அஜீரணமும் அசௌகரியமும் உண்டாவது சகஜம்.
எனவே, இரண்டு வகை உணவுகளை சேர்த்து உட்கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்படும்போது அவற்றில் அடங்கியிருக்கும் ஊட்டச் சத்துக்களின் தரமறிந்து அதற்கேற்றாற்போல் முடிவெடுப்பது நலம் தரும்.