
நம்மில் பலரும் அனுபவிக்கும் ஒரு கொடுமையான வலி, சியாட்டிகா (Sciatica). இடுப்பில் ஆரம்பித்து, தொடையின் பின்புறம் வழியாக கெண்டைக்கால் வரை 'சுள்'ளென்று ஒரு மின்சாரம் பாய்ந்தது போல வலி பரவும்.
இதனால், சிலருக்கு கால் மரத்துப்போகும், சிலருக்கு ஊசி குத்துவது போல இருக்கும், இன்னும் சிலருக்கு கடுமையான எரிச்சல் உண்டாகும். இது ஏன் வருகிறது, இதை எப்படி நிரந்தரமாக சரி செய்வது என்று இந்தப் பதிவில் விரிவாகப் பார்ப்போம்.
நமது முதுகுத்தண்டில் உள்ள தண்டுவட எலும்புகளுக்கு இடையில் 'டிஸ்க்' எனப்படும் ஜவ்வு போன்ற ஒரு மென்மையான அமைப்பு உள்ளது. இது ஒரு ஷாக் அப்சார்பர் போல செயல்படுகிறது. நாம் அதிக நேரம் தவறான நிலையில் உட்காரும்போது, அதாவது கூன் போட்டு உட்கார்வது, சேரில் சாய்ந்து நெளிந்து உட்கார்வது, பைக் ஓட்டும்போது குனிந்து ஓட்டுவது போன்ற செயல்களால், இந்த டிஸ்க் அதன் இடத்திலிருந்து லேசாக பிதுங்கி, அதன் அருகில் செல்லும் 'சியாட்டிகா' நரம்பை அழுத்த ஆரம்பிக்கிறது.
இந்த நரம்புதான் இடுப்பிலிருந்து கால் முழுவதும் செல்கிறது. எனவே, அந்த நரம்பு அழுத்தப்படும்போது, அதன் வழித்தடம் முழுவதும் வலி, மரத்துப்போதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆரம்பத்தில் இது ஒரு சாதாரண இடுப்பு வலியாகத் தோன்றினாலும், கவனிக்காமல் விட்டால் நாட்கள் செல்லச் செல்ல கடுமையான சியாட்டிகா வலியாக மாறி, அன்றாட வேலைகளைக் கூட செய்ய முடியாத நிலைக்குத் தள்ளிவிடும்.
1. உட்காரும் நிலையை மாற்றுங்கள்: முதல் மற்றும் மிக முக்கியமான தீர்வு, நம்முடைய உட்காரும் முறையைச் சரி செய்வதுதான். வேலை செய்யும் இடத்திலோ, வீட்டிலோ, பயணம் செய்யும்போதோ முதுகுத்தண்டை எப்போதும் நேராக வைத்து நிமிர்ந்து உட்காரப் பழக வேண்டும். இதுவே அந்த டிஸ்க் மீது ஏற்படும் தேவையற்ற அழுத்தத்தைக் குறைத்து, பாதிப் பிரச்சனைக்குத் தீர்வாக அமையும்.
2. உணவுமுறையில் கவனம்: இது வாதம் சம்பந்தப்பட்ட பிரச்சனை என்பதால், வாதத்தை அதிகரிக்கும் உணவுகளைத் தவிர்ப்பது மிக அவசியம். புளிப்பான உணவுகள், புளிப்புச் சுவையுள்ள பழங்கள் குளிர்ச்சியான பதார்த்தங்கள், ஐஸ் வாட்டர், வாயுவை உண்டாக்கும் கொண்டைக்கடலை, பட்டாணி, மொச்சை போன்றவற்றைத் தவிர்ப்பது வலிகளைக் குறைக்கப் பெரிதும் உதவும்.
3. வெளிப்புற சிகிச்சைகள்: சியாட்டிகா வலிக்கு வெளிப்புற சிகிச்சைகள் மிகச் சிறப்பாகப் பலனளிக்கும். சித்த மருத்துவத்தில் உள்ள வர்ம சிகிச்சை, இந்த நரம்பு அழுத்தத்தைச் சரிசெய்ய அற்புதமாக உதவுகிறது. அத்துடன், வாத நாராயணத் தைலம் போன்ற மூலிகை எண்ணெய்களை வலி உள்ள பகுதிகளில் தடவி, நொச்சி, தழுதாழை, ஆமணக்கு போன்ற இலைகளை வெதுவெதுப்பாக வதக்கி ஒத்தடம் கொடுப்பதன் மூலம் வலியும், தசை இறுக்கமும், வீக்கமும் வெகுவாகக் குறையும்.
4. படுக்கை மற்றும் பயணம்: மெத்தென்று குழி விழும் படுக்கைகளைத் தவிர்த்து, சற்று கடினமான படுக்கைகளைப் பயன்படுத்த வேண்டும். முடிந்தால், தரையில் ஒரு பாய் விரித்துப் படுப்பது இன்னும் நல்லது. இருசக்கர வாகனங்களில் அதிகம் பயணம் செய்பவர்கள், வண்டியின் ஷாக் அப்சார்பர் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.
சியாட்டிகா வலி என்பது ஆரம்பத்திலேயே கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த வலியை அலட்சியப்படுத்தாமல், ஆரம்பத்திலேயே அதற்கான தீர்வுகளை மேற்கொண்டால், இந்த நரம்பு வலியிலிருந்து எளிதாக விடுபட்டு, ஆரோக்கியமான வலியற்ற வாழ்க்கையை வாழலாம்.