நேர்காணல்: Senior Consultant Oncology டாக்டர் எஸ்.ஜி. ரமணன் - பெருங்குடல் புற்று நோய்க்கு நவீன சிகிச்சை இருக்கா?

Modern medicine for colon cancer!
Colon cancerImage credit - gastrosurgeonindia.com
Published on

சென்னை அப்பாலோ மருத்துவமனையின் புற்றுநோய் நிபுணர், சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant –Oncology) மருத்துவர் எஸ்.ஜி. ரமணன் அவர்களிடம் உரையாடிய தொகுப்பு:

தமிழ்நாட்டில், சுமார் 30 வருடங்களுக்கு முன்பு வரை, மனிதருக்கு வரும் புற்றுநோய்களில், Colon cancer அல்லது Colorectal cancer என்னும் பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய் அதற்கான கணக்கெடுப்பின் படி முதல் 10 இடங்களுக்குள் இல்லை. ஆனால் இன்று, இரண்டும் ஐந்தாவது இடத்தில் இருக்கின்றன. ஏன், எதனால்…?

இந்த நோய் வரக்காரணம், சிகிச்சை முறைகள், குணமாகும் வாய்ப்பு குறித்து எழுந்த சந்தேகங்களுடன் சென்னை அப்பலோ மருத்துவமனையின் புற்று நோய் மருத்துவர், சீனியர் கன்சல்டன்ட் (Senior Consultant –Oncology) டாக்டர் ரமணன் அவர்களை அணுகினோம். உரையாடினோம். அந்த சந்திப்பிலிருந்து கிடைத்த பல விழிப்புணர்வு தகவல்கள் இதோ உங்களுக்காக...

டாக்டர் ரமணன் Senior Consultant –Oncology
டாக்டர் ரமணன் Senior Consultant –Oncology

பெருங்குடல் மற்றும் மலக்குடல் எவ்வாறு இயங்குகின்றன டாக்டர்?

நம் ஜீரண மண்டலத்தின் கடைசிப்பகுதி பெருங்குடல் (Large intestine) நாம் உண்ணும் உணவு, இரைப்பை, சிறுகுடல் இவற்றில் செரிமானம் ஆன பிறகு இன்னும் செரிமானம் ஆகவேண்டிய மீதமுள்ள உணவு, பெருங்குடலுக்கு வருகிறது. அதிலிருக்கும் நீர் முழுவதும் அங்கே பிரிக்கப்படுகிறது. பின்னர் திடக்கழிவுப் பொருளாக மலக்குடலுக்குள் வருகிறது. இந்தப் பகுதி பொதுவாக கொலோன் (Colon) எனப்படும்.

ரெக்டம் (Rectum) என்பதுதான் மலக்குடலா..?

ஆம். மலக்குடல் என்பது பெருங்குடலின் கடைசிப்பகுதி. ஆசனவாய் வழியாக வெளியேற்றப்படுவதற்கு முன், மலக்குடல் மலத்தை தற்காலிகமாக சேமிக்கிறது.

இந்தப் பகுதிகளில் எவ்வாறு புற்றுநோய் ஏற்படுகிறது டாக்டர்?

இன்னதென்று குறிப்பிட்டுச் சொல்லமுடியாது. என்றாலும் பொதுவாக வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல், உணவு முறை, காய்கறிகள், பழங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாமல் இருத்தல், அதிக உடல் எடை, உடற்பயிற்சி இல்லாதது, ரெட் மீட் (red meat) எனப்படும் மாமிசம், மது அருந்துதல் போன்ற பல காரணங்கள் உள்ளன.

ஏன் வருகிறது என்பதைக் கண்டறியவும் சிகிச்சை முறைகளுக்கும் தொடர்ந்து ஆராய்ச்சிகள் உலகளவிலும் நம் நாட்டிலும் நடைபெற்று வருகின்றன. ஒரு ஐந்து சதவீதம் பரம்பரையில் யாருக்காவது இருந்தால் வர வாய்ப்பு உண்டு.

பெருங்குடல் புற்றுநோய்க்கும், மலக்குடலில் வருவதற்கும் என்ன வேறுபாடுகள் டாக்டர்?

பொதுவாக மலக்குடலுக்குள் இருக்கும் புற்றுநோயும் பெருங்குடலுக்குள் இருக்கும் புற்றுநோயும் ஒன்றாக பெருங்குடல் புற்றுநோய் Colorectal cancer என்று குறிப்பிடப்படுகின்றன. இரண்டும் உருவாகும் இடத்தைப் பொறுத்து (location) முதல் வேறுபாடு. மலக்குடலில் உருவாகும் கட்டிகள் ரெக்டல் கேன்சர் என்றும் பெருங்குடலுள் உருவாகும் கட்டிகள் கொலோன் கேன்சர் என்றும் சொல்லப்படுகின்றன.

அறிகுறிகள் ஓரளவு ஒரே மாதிரி இருக்கும். கொலோனொஸ்கோபி, ரத்தம், மலம் சோதித்தல் போன்ற சோதனைகளும் இரண்டுக்கும் பொதுதான். ஆனால் மலக்குடல் கேன்சருக்கு சிகிச்சை வேறுபடும்.

மலக்குடல் அல்லது பெருங்குடல் புற்று நோய்க்கான அறிகுறிகள் என்ன டாக்டர்?

வயிறு சம்பந்தப்பட்ட Bowel habits ஒவ்வொருவரின் தனிப்பட்ட (பிரைவேட்டாக நினைக்கும்) குறிப்பாக மலம் கழிக்கும் வழக்கம். சிலர் ஒருமுறை அல்லது சிலர் பலமுறை என்று செல்வார்கள். இதைப் பற்றி அதிகம் விவாதிக்க விரும்பமாட்டார்கள்.

பத்து வயதில் இந்த வழக்கம் செட் ஆகிவிடும். அனேகமாக ஒருவருக்கு மலம் கழிக்கும் முறையில், இடைவெளியில், திடத்தன்மையில் (consistency) மாற்றம் இருக்காது. அப்படி மாற்றம் ஏற்படுவது முதல் அறிகுறி.

மலத்தில் ரத்தம் கலந்து வரும். ஆனால் இது ஹீமோக்ளோபின் குறைபாடு காரணமாகவும் இருக்கலாம். வயிற்றில் வலி, உப்புசமாக இருப்பது, வாந்தி, எடை குறைவு, களைப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டாலும் அவை, பெருங்குடல் புற்று நோயால்தான் என்று தீர்மானிக்க முடியாது. அதற்கெல்லாம் பல காரணங்கள் இருக்கலாம்.

இதற்கான சோதனைகள் என்னென்ன டாக்டர்?

மருத்துவர் ஸ்க்ரீனிங் சோதனைகள் (Screening Tests) செய்யும் போது தான் கண்டுபிடிக்க முடியும்.

அவை:

1. Colonoscopy மூலம் பெருங்குடல், மலக்குடல் இவற்றை நேரடியாகப் பார்த்து சோதிக்க முடியும்.

2. மலம் ரத்தம் இவற்றை சோதனை செய்தல்

3. Flexible Sigmoidoscopy, Colonoscopy இவையெல்லாமே நவீன சோதனை முறைகள்.

பெருங்குடலின் சுவற்றில் பாலிப்ஸ் (polyps) என்னும் சிறு கட்டிகள் உருவாகும். இவையே பின்னர் புற்றுநோய் ஆகலாம் அல்லது சாதாரணக் கட்டிகளாக, மருத்துவத்தில் குணமாகலாம்.

Colonoscopy செய்வதன் மூலம் கட்டிகளையும் அவற்றின் தன்மையையும் அறிய முடியும். ரத்தம், மலம் இவற்றை சோதனை செய்வதன் மூலமும் கண்டறிய முடியும்.

Colon cancer
Colon cancerImage credit - mountsinai.org

பெருங்குடல் புற்றுநோயிலும் ஸ்டேஜ்கள் உண்டா டாக்டர்? அது எப்படித் தெரியும்?

அறுவை சிகிச்சை செய்து கட்டிகளை அகற்றிவிடலாம் . அப்புறம் அவற்றை சோதனை செய்தால்தான் அதுவும் ஒரு பத்து நாளுக்குப் பிறகு தான் எந்த நிலையில் புற்றுநோய் இருக்கிறது என்பது தெரியவரும்.

முதல் ஸ்டேஜ் என்றால் கட்டிகளை அகற்றியதோடு சிகிச்சை முடிந்துவிடும். அப்புறம் எந்த சிகிச்சையும் தேவையில்லை.

இரண்டாவது ஸ்டேஜ் வரும்போது அதில் லோ ரிஸ்க் மற்றும் ஹை ரிஸ்க் ஸ்டேஜ் (Low Risk and High Risk இரண்டு வகைகள் உண்டு. லோ ரிஸ்க் நிலையில் அறுவை சிகிச்சைக்குப் பின் தொடர் கண்காணிப்பு (Follow up) அவசியம். ஹை ரிஸ்க் நிலை வரும்போது, மீண்டும் கட்டிகள் உருவாகாமல் தடுக்க கீமோ (Chemotherapy) சிலமுறை செய்யவேண்டி வரும்.

மூன்றாம் ஸ்டேஜில், ஆறுமாதங்கள் வரை கீமோதெரபி அவசியப்படும்.

நான்காம் நிலையில், அறுவை சிகிச்சை, கீமோ ரேடியேஷன் எல்லாமே தேவைப்படும்.

இவை தவிர நவீன சிகிச்சை தேவைப்படுமா டாக்டர்?

இப்போது புதிய சிகிச்சை முறையில் குறிப்பிட்ட இலக்கை குணப்படுத்தும் மருந்துகள், (Newer targeted special medicine for Colon Cancer), (IV –Intravenus ) ட்ரிப்ஸ் மூலம் செலுத்தப் படுகிறது. இது பெருங்குடல் புற்று நோய்க்கான நவீன மருத்துவம்.

இதையும் படியுங்கள்:
இந்தியாவில் குறைந்து வரும் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்பு!
Modern medicine for colon cancer!

மலக்குடல் புற்றுநோய்க்கு என்ன சிகிச்சை தரப்படுகிறது?

இதற்கான சிகிச்சை கொஞ்சம் வித்தியாசப்படும். இதற்கு முதலில் அறுவை சிகிச்சை கிடையாது. சோதனைகளில், மலக்குடலில் புற்று இருப்பது தெரிந்தால் கீமொதெரபி, ரேடியேஷன் செய்யவேண்டும். இதற்கு முன்பாக குடும்பத்தினரிடம் பேசி புரியவைக்க வேண்டும். அவர்களது ஒப்புதல் வேண்டும்.

மலக்குடலில் கட்டிகள் இருக்கும் இடத்தை துல்லியமாக கண்டுபிடித்து ரேடியேஷன் தரவேண்டும். இது மிகவும் நுட்பமாக செய்ய வேண்டிய சிகிச்சை என்பதால் இதில் தேர்ந்த மருத்துவர் குழு மட்டுமே செய்ய முடியும் என்பது மிக மிக அவசியம்.

கீமோ ரேடியேஷன் சிகிச்சை அனேக நோயாளிகளுக்கு பலனளிக்கும்.

ஆனால் மிகச்சிலருக்கு, மலக்குடலை அகற்ற வேண்டிய நிலை ஏற்படலாம். அப்போது வயிற்றுப் பகுதியில் துளையிட்டு மலப் பை ஒன்றைப் பொருத்த நேரிடும்.

கீமோ சிகிச்சை பெற்று குணமானாலும் மூன்று முதல் ஐந்து வருடங்கள் வரை மருத்துவர்களின் கண்காணிப்பில் தொடர்ந்து இருக்கவேண்டும்.

நோய் மீண்டும் வர வாய்ப்பு இருப்பதால், மூன்று மாதத்திற்கு ஒருமுறை சோதனைகள் அவசியம். முடி கொட்டுதல், எடை குறைவு போன்ற பக்க விளைவுகள் ஏற்படும் என்பதால், மன அளவிலான கவுன்சலிங் தேவைப்படும்.

ஆண்களுக்கா பெண்களுக்கா யாருக்கு, பெருங்குடல் மலக்குடல் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம்? மற்றும் எந்த வயதில் வரும் வாய்ப்பு உண்டு?

பெண்களை விட ஆண்களுக்கு வரும் வாய்ப்பு சற்றே அதிகம். பாதிக்கப்படுபவர்கள் பொதுவாக 40 வயதிலிருந்து 70 வயது வரை இருப்பார்கள்.

இதில் சிகிச்சைக்குப் பின்னர் உயிர் வாழும் சாத்தியக் கூறு எவ்வாறு இருக்கும் டாக்டர்?

கட்டிகள் மீண்டும் வராமல் இருந்தால் வாழ்நாள் அதிகரிக்கும். அது அவரவர் உடல் நிலையைப் பொறுத்தது.

இந்த நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் டாக்டர்?

உடற்பயிற்சி, சரியான உணவுப்பழக்கம், நிறைய நார்ச்சத்து மிக்க பழங்கள், கறிகாய்கள் எடுத்துக் கொள்ளுதல், ரெட் மீட் மாமிசத்தைத் தவிர்த்தல் இவையெல்லாம் நடைமுறைப்படுத்தும்போது ஓரளவு பலன் கிடைக்கும்.

ஆனால் நான் முதலில் சொன்ன மாதிரி இதற்கான சரியான காரணங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்யப்பட்டு வருகின்றன.

வெளிநாடுகளில், நோய் வந்திருக்கிறதா என்று கண்டுபிடிக்க, Colonoscopy செய்து கொள்கிறார்கள்.

நம் நாட்டில் இருக்கும் ஜனத்தொகைக்கு ஒவ்வோருவருக்கும் செய்வது கொஞ்சம் கடினம்.

ஆனால் 45 வயதுக்கு மேல் அனைவருமே மாஸ்டர் செக் அப் எனப்படும் உடல் பரிசோதனை செய்வது மிக மிக அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com