
நோய்களில் புற்றுநோய் மிக மோசமான நோயாக கருதப்படுகிறது. காரணம் இந்த நோய் வந்த ஒருவர் பிழைப்பது அரிதாக உள்ளது. அதை விட அவர் பிழைத்தாலும் முன்பை போல இருக்க முடியவில்லை. புற்று நோய்க்கு உண்டான சிகிச்சைகள் அனைத்தும் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளது. அதிலும் பெண்களை மட்டுமே பாதிக்கும், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் ஒரு கொடிய நோயாக உள்ளது. இந்த நோய் பாதிப்பினால் ஒவ்வொரு ஆண்டும் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான பெண்கள் இறக்கின்றனர்.
இந்தியாவில் ஒவ்வொரு 1000 பெண்களில் 17.7 பேர் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் பாதிக்கப்படுவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. உலக சுகாதார நிறுவனத்தின் தரநிலைகளின்படி, இந்த புள்ளிவிவரங்கள் 4 சதவீதமாகக் குறைக்கப்பட வேண்டும். இந்தியாவில் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் பாதிப்புகள் கொஞ்சம் குறைந்து கொண்டிருக்கும் நிலையில், அவற்றைக் முழுமையாக கட்டுப்படுத்த 2062 ஆம் ஆண்டு வரை ஆகும்.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு HPV எனப்படும் மனித பாப்பிலோமா வைரஸ் காரணமாக உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள பெண்களுக்கு இந்த புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. சிறுநீர் கழிக்கும் போது திடீர் வலி அல்லது சிரமம் ஏற்படுவதும் இதன் முதல் அறிகுறிகளாகும்.
மாத சுழற்சி காலத்திற்கு இடையில் இடையில் இரத்தப்போக்கு ஏற்படுதல், ஆணுடன் இணைதலுக்கு பிறகு இரத்தப்போக்கு, துர்நாற்றம் மற்றும் கீழ் முதுகு அல்லது அடிவயிற்றில் வலி ஆகியவை இதன் முக்கிய அறிகுறிகளாக உள்ளது. இந்த வைரஸ் பெரும்பாலும் ஆண்களிடமிருந்து பெண்களுக்கு உடல் சார்ந்த இணைதலின் மூலம் பரவுகிறது. இருப்பினும், இந்தப் புற்றுநோய் வேறு பல காரணங்களாலும் ஏற்படுகிறது.
இப்போது இந்தியாவில் இந்த கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதாக ICMR மற்றும் எய்ம்ஸ் மருத்துவர்கள் கூறியுள்ளனர். மகளிருக்கு இது மகிழ்ச்சியான செய்தி ஆகும். இந்த செய்தி தேசிய மருத்துவ அறிவியல் அகாடமியிலிருந்து (NAMS) வந்துள்ளது.
கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் அரசாங்க முயற்சிகளின் மூலம் நாட்டில் பெருமளவில் கர்ப்பப்பை புற்றுநோய் குறைந்துள்ளது. ICMR (இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்) இல் பதிவு செய்யப்பட்ட கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயைத் தடுப்பதற்கான தடுப்பூசியை பெண்கள் போட்டுக் கொள்வதால் பெருமளவில் குறைந்துள்ளது.
குளோபகன் 2020 ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, இந்தியாவில் 123,907 புதிய கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்கள் கண்டறியப்பட்டன. மேலும் இந்த நோயால் 77,348 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வகைப் புற்றுநோயால் நாட்டில் தினமும் சுமார் 200 பெண்கள் இறக்கின்றனர். தற்போது புற்றுநோயை முன் கூட்டியே கண்டறியும் பேப் ஸ்மியர் அல்லது HPV பரிசோதனைகள் மூலம் , புற்றுநோய்க்கு முந்தைய புண்களைக் கண்டறிய முடியும். இதனால் முன்கூட்டியே நோயாளிக்கு சிகிச்சையை தொடங்கி குணப்படுத்த முடியும். அதனால் இப்போது பெண்களை பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் வழக்குகள் பதிவாகுதல் முன்பை விட குறைந்து வருகின்றன.