40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு முடி உதிர்வு, மூட்டுகளில் வலி, சர்க்கரை நோய், உடல் சோர்வு, மாதவிலக்கு தொந்தரவுகள் போன்றவை அதிகம் பாதிக்கக்கூடும். அதிலும், மெனோபாசிற்குப் பிறகு பெண்களுக்கு உடல் பருமன், வளர்சிதை மாற்ற நோய்க்குறி, இதய நோய்கள் உள்ளிட்ட பல வகையான நோய்கள் தாக்கக்கூடிய அபாயங்கள் உள்ளன. அதனால் அவர்கள் சரியான ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு தேவையான ஏழு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள்:
1. கால்சியம்: 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வலுவான எலும்புகள் மற்றும் பற்களை பராமரிக்க போதுமான கால்சியம் தேவைப்படுகிறது. வயது ஏற ஏற எலும்பு அடர்த்தி குறைகிறது. எலும்பு ஆரோக்கியத்திற்கு கால்சியம் முக்கியமானது. எனவே, பெண்கள் பால் பொருள்கள், இலைக் கீரைகள், கேழ்வரகு போன்றவற்றை தினமும் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளைக்கு குறைந்தது 1200 மில்லி கிராம் கால்சியம் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.
2. வைட்டமின் டி: வைட்டமின் டி சத்து, உடல் கால்சியத்தை உறிஞ்சவும் எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வைட்டமின் டி சத்து குறைவாக இருக்கும். இவர்களது தசைகள் நகர்வதற்கும் நரம்புகள், மூளைக்கும் உடலுக்கும் இடையே செய்திகளை அனுப்புவதற்கும் வைட்டமின் டி அவசியம். இது நோய் எதிர்ப்பு அமைப்பு, பாக்டீரியா மற்றும் வைரஸ்களை எதிர்த்து போராட உதவுகிறது. இவர்கள் சூரிய ஒளி வெளிப்பாடு, கொழுப்பு நிறைந்த மீன் மற்றும் வலுவூட்டப்பட்ட உணவுகளை உண்ண வேண்டும்.
3. மெக்னீசியம்: தசை மற்றும் நரம்பு செயல்பாடு, இரத்த சர்க்கரைக் கட்டுப்பாடு மற்றும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம் இன்றியமையாதது. தசைப்பிடிப்பு சோர்வு மற்றும் உயர் இரத்த அழுத்தத்திற்கு மெக்னீசியம் குறைபாடு வழிவகுக்கும். பெண்களுக்கு தினமும் 320 மில்லி கிராம் மெக்னீசியம் தேவை. கொட்டைகள், விதைகள், முழு தானியங்கள் மற்றும் பச்சை இலைக் காய்கறிகளில் மெக்னீசியம் காணப்படுகிறது.
4. ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்: இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியம். 40 வயதிற்கு பிறகு பெண்கள் வாரத்திற்கு குறைந்தது இரண்டு மத்தி மீன்களை உட்கொள்ள வேண்டும்.
5. வைட்டமின் பி12: இது இரத்த சிவப்பு உருவாக்கம், நரம்பியல் செயல்பாடு மற்றும் டிஎன்ஏ தொகுப்புக்கு இன்றியமையாதது. பி12 வயது ஏற ஏற குறைகிறது. இது உடல் சோர்வு, இரத்த சோகை மற்றும் அறிவாற்றல் சிக்கல்களை ஏற்படுத்துகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் பலப்படுத்தப்பட்ட தானியங்கள் போன்றவற்றை உண்ண வேண்டும்.
6. இரும்பு: இரத்தத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்வதற்கும், இரத்த சோகையை தடுப்பதற்கும் இரும்பு அவசியம். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குறிப்பாக மாதவிடாய் நின்றவர்கள் சோர்வு மற்றும் பலவீனத்தை தவிர்க்க போதுமான இரும்பு அளவை பராமரிக்க வேண்டும். இது மெலிந்த இறைச்சிகள், பீன்ஸ், பருப்பு மற்றும் பலப்படுத்தப்பட்ட தானியங்களில் கிடைக்கிறது.
7. நார்ச்சத்து: செரிமான ஆரோக்கியத்திற்கு நார்ச்சத்து மிகவும் அவசியம். இது இதய நோய், வகை 2 நீரிழிவு மற்றும் சில புற்று நோய்களைத் தடுக்க உதவுகிறது. இது ஆரோக்கியமான எடையை பராமரிக்க உதவுகிறது. 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தினமும் குறைந்தது 25 கிராம் நார்ச்சத்துள்ள உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். இவை பழங்கள், காய்கறிகள் முழு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளில் காணப்படுகிறது.