Shoe Bite
Shoe Bite

கடிக்கும் காலணிகள், எளிய வீட்டு வைத்திய முறைகள்!

Published on

புதிய காலணிகள் வாங்கி அணியும்போது ஏற்படும் ஒரு பிரச்சனைதான் 'கால் கடித்தல்' (Shoe Bites). புதிதாக வாங்கிய காலணிகள் அல்லது நீண்ட நாள் அணியாத காலணிகள் நமது கால்களைக் கடிப்பதன் மூலம் வலி, கொப்பளங்கள், சிவத்தல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். இது ஒரு சாதாரண விஷயமாகத் தோன்றினாலும், மிகுந்த அசௌகரியத்தையும், சில சமயங்களில் நடக்க முடியாமல் செய்வதையும் உருவாக்கும். 

இந்த வலியைத் தவிர்க்கவும், ஏற்கனவே ஏற்பட்ட காயங்களுக்குச் சிகிச்சை அளிக்கவும் சில எளிய வீட்டு வைத்தியங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்ப்போம்.

1. தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய்: காலணி கடிக்கும் பகுதியில் அல்லது காலணியின் கடினமான உட்புறப் பகுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெயை போன்றவற்றைத் தடவுங்கள். எண்ணெய் தடவுவதால் காலணி மென்மையாகும், மேலும் உங்கள் கால்களில் ஏற்படும் உராய்வு குறையும். இரவில் இதைச் செய்து காலணியை விட்டுவிட்டால், அடுத்த நாள் அணியும்போது சற்று வசதியாக இருக்கும். 

2. உருளைக்கிழங்கு, கற்றாழை: காலணிகள் கடிக்கும் இடத்தில் ஒரு மெல்லிய உருளைக்கிழங்கு துண்டை வைத்துத் தேய்க்கலாம். உருளைக்கிழங்கு இயற்கையாகவே குளிர்ச்சி பண்புகளைக் கொண்டிருப்பதால், இது எரிச்சல் மற்றும் வலியைப் போக்க உதவும். கற்றாழை ஜெல்லை நேரடியாகக் கடித்த இடத்தில் தடவுவது, வீக்கத்தைக் குறைத்து, காயத்தை விரைவாக ஆற்றும். 

3. ஐஸ் ஒத்தடம்: காலணி கடித்து வீக்கம், வலி ஏற்பட்டால், ஒரு சுத்தமான துணியில் சில ஐஸ் கட்டிகளை வைத்து, கடித்த இடத்தில் மெதுவாக ஒத்தடம் கொடுக்கவும். இது இரத்த நாளங்களைச் சுருக்கி, வீக்கம் மற்றும் வலியை உடனடியாகக் குறைக்க உதவும். 

4. பெட்ரோலியம் ஜெல்லி (Vaseline): உங்கள் காலணிகள் எந்தப் பகுதியில் பொதுவாகக் கடிக்கும் என்று தெரிந்தால், காலணியின் உட்புறம் அல்லது உங்கள் காலின் அந்தப் பகுதியில் பெட்ரோலியம் ஜெல்லியைத் தடவலாம். இது ஒரு பாதுகாப்புப் படலத்தை உருவாக்கி, காலணிக்கும் காலுக்கும் இடையே உள்ள உராய்வைக் குறைக்கும். 

இதையும் படியுங்கள்:
‘பெண்களின் காலணி’ வகைகள் எவ்வளவு இருக்கு தெரியுமா?
Shoe Bite

5. சாக்ஸ் (Socks) அணிவது: புதிய காலணிகள் அல்லது இறுக்கமான காலணிகள் அணியும்போது, கட்டாயம் சாக்ஸ் அணியுங்கள். சாக்ஸ், காலணிக்கும் காலுக்கும் இடையே ஒரு மென்மையான தடையாகச் செயல்பட்டு, உராய்வைத் தடுத்து, கொப்பளங்கள் ஏற்படுவதைக் குறைக்கும். பருத்தி சாக்ஸ் சிறந்த தேர்வாகும்.

6. காலணிகளைச் சரிசெய்தல்: சில சமயங்களில், காலணிகள் இறுக்கமாகவோ, சரியாகப் பொருந்தாமலோ இருக்கலாம். காலணிகள் மிகவும் இறுக்கமாக இருந்தால், அதை ஒரு ஷூ ஸ்ட்ரெட்சர் (Shoe Stretcher) பயன்படுத்தி சற்று விரிவுபடுத்தலாம். சில சமயம், காலணிகளின் ஓரங்கள் கூர்மையாக இருந்தால், அவற்றை மென்மையாக்கிக் கொள்ள வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

logo
Kalki Online
kalkionline.com