இன்றைய வேகமான உலகில் பல தனிநபர்கள் தங்களது நேரத்தை தனியாகவே செலவிட விரும்புகின்றனர். தனிமை என்பது புத்துணர்ச்சி மற்றும் சுய முன்னேற்ற வாய்ப்புகளை வழங்கும் அதே வேளையில், அதிகப்படியாக நேரத்தை தனிமையில் கழிப்பது நமது மனநிலை மற்றும் உடல் நலனில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் ஒரு நபர் அதிக நேரம் தனியாகவே இருக்க விரும்புவதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றி பார்க்கலாம்.
நீண்ட காலமாக தனிமையில் இருப்பது மனச்சோர்வு மற்றும் பதட்டம் போன்ற உணர்வுகளுக்கு பங்களிக்கும். மனிதர்கள் சமூகமாக வாழக்கூடியவர்கள். நல்ல மன ஆரோக்கியத்தை பராமரிக்க மனிதர்களுக்கு சமூகத் தொடர்பு மிகவும் முக்கியம். சமூகத் தொடர்பு இல்லாமல் இருப்பது ஒருவரின் ஒட்டுமொத்த மனநலையையும் பாதித்து அதிக ஆபத்துகளுக்கு வழிவகுக்கும்.
நாம் அதிக நேரம் தனியாக செலவிடும்போது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் விருப்பத்திற்குரிய நபர்களிடமிருந்து கிடைக்கும் உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்காமல் போகலாம். நமது எண்ணங்கள், கவலைகள் மற்றும் மகிழ்ச்சியான தருணங்களை பிறருடன் பகிர்ந்துகொள்வது நம்மை சிறப்பாக உணர வைக்கிறது. இந்த ஆதரவு இல்லாமல் நாம் வெறுமையாக இருப்பதால் வாழ்க்கையில் விரக்தி ஏற்படலாம்.
நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்வது நமது உடல் நலனில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். நாம் தனியாக அதிக நேரத்தை செலவிடும்போது, ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு மோட்டிவேஷன் குறைவாக இருக்கலாம். எனவே உடற்பயிற்சியின்மை, மோசமான உணவுப் பழக்கங்கள் காரணமாக எடை அதிகரிப்பு, நோய் எதிர்ப்பு சக்தி குறைவு மற்றும் நீரிழிவு, இதய நோய்கள் போன்ற அபாயங்கள் அதிகரிக்கும்.
நாம் பிறருடன் பழகும் போதுதான் நம்முடைய அறிவாற்றல் திறன்கள் மேம்படுவதாக சொல்லப்படுகிறது. எனவே அதிக நேரம் தனியாக செலவிடுவது அறிவாற்றல் குறைபாட்டுக்கு வழி வகுக்கலாம். மேலும் தனிமை என்பது உங்களது உறவுகளை சிதைத்து புதிய உறவுகள் உருவாக்குவதை கடினமாக்கும். எனவே மனிதத் தொடர்புகள் நம்முடைய வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவை. உங்களால் வாழ்நாள் முழுவதும் மனித தொடர்புகளில் இருந்து விலகி இருக்க முடியாது.
எப்போதாவது தனிமையாக இருப்பது பரவாயில்லை, ஆனால் எப்போதுமே தனியாக இருக்க வேண்டும் என நினைப்பது, உங்களை எல்லா விதங்களிலும் பாதிக்கும். எனவே, சமூகத் தொடர்பின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொண்டு, உறவுகளை உருவாக்கி ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முற்படுங்கள்.