

'வரும் நாட்களில் வெப்பத்தின் அளவு அதிகரிக்கும்' என்பதே தற்போது ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக வலம் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நாம் ஒவ்வொருவரும் செய்ய வேண்டிய முக்கியமான கடமை, உஷ்ணத்தின் காரணமாக உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடாமல் பாதுகாப்பதுதான். உடலில் நீர்ச்சத்து குறைந்து வருவதை முன்கூட்டியே எச்சரிக்கும் ஆறு விதமான அறிகுறிகள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
நம் உடலிலுள்ள நீர்ச்சத்தின் அளவை மிகத் துல்லியமாகக் காட்டும் அளவுகோல் நம் சிறுநீர் என்று தாராளமாகக் கூறலாம். சிறுநீரின் நிறம் வெளிர் மஞ்சள் (pale straw-yellow) நிறமாக இருந்தால் உடலில் போதுமான அளவு நீர்ச்சத்து உள்ளது என்று எடுத்துக் கொள்ளலாம். சிறுநீரின் நிறம் அடர் மஞ்சளாக இருக்குமானால் உடல் தண்ணீரை அவசரத் தேவைகளுக்காக சேமித்து வைத்துக்கொண்டு சிக்கனமாக செலவழிக்கிறது என்று பொருளாகும். ஒரு நாளில் நான்கு முறைக்கும் குறைவாக சிறுநீர் கழிப்போமானால் உடல் அபாய கட்டத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது என்று அர்த்தமாகும்.
உடலில் நீர்ச்சத்து குறையும்போது 'டீ-ஹைட்ரேஷன்' உண்டாகும். அப்போது, தற்காலிகமாக மூளை சுருங்க ஆரம்பிக்கும். அதன் விளைவாக தலைவலி உண்டாகும். வெயில் அதிகமாக இருக்கும்போது, வேறெந்த காரணமுமின்றி இந்த தலைவலி தொடர்ந்து இருக்குமானால், உங்கள் மூளை தண்ணீர் குடிக்கக் கேட்பதாக அர்த்தம்.
அதிகளவு வெயில் காரணமாக உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது இரத்தத்தின் அடர்த்தி குறையும். அதனால், உடலின் உள்ளுறுப்புகள் மற்றும் தசைகளுக்கு போதுமான அளவு ஆக்ஸிஜனை அனுப்ப இதயம் கடினமாக வேலை செய்ய வேண்டிய தேவை ஏற்படும். அதன் விளைவாக, நன்கு தூங்கி எழுந்தாலும் உடல் சோர்வடைந்து காணப்படும். சக்தி குறையும்.
நமது உமிழ்நீர் ஆன்டி பாக்ட்டீரியல் குணம் கொண்டது. உடல் 'டீ-ஹைட்ரேட்' ஆகும்போது உமிழ்நீர் உற்பத்தி குறையும். அப்பொழுது வாய்க்குள் பாக்ட்டீரியாக்களின் உற்பத்தி பெருகும். அதன் காரணமாக வாயிலிருந்து துர்நாற்றம் வரும். நா வறட்சி உண்டாகி வாய் உலர்ந்து போகும்.
உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது இரத்த அழுத்தம் குறையும். அப்போது மூளைக்கு குறைந்த அளவு இரத்தமே சென்று சேரும். உட்கார்ந்த நிலையிலிருந்து எழுந்திருக்கும்போது தலை சுற்றல் வரும். வெளியே சென்றிருக்கும்போது இவ்வாறு நேருமானால் உடனடியாக தண்ணீர் குடிப்பதும் நிழல் உள்ள இடத்திற்கு சென்று அமர்ந்து கொள்வதும் அவசியம்.
உஷ்ணத்தின் காரணமாய் உடலிலிருந்து வேர்வை மூலம் நீர் மட்டுமின்றி எலக்ட்ரோலைட்ஸ் எனப்படும் சோடியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்களும் வெளியேறி விடுவதுண்டு. இவ்விதமாக உடலில் கனிமச் சத்துக்கள் சமநிலையற்றுப் போவதால், கால் மற்றும் பாதத்து தசைகளில் பிடிப்பு உண்டாவதற்கான வாய்ப்பு உருவாகும்.
மேலே கூறிய அறிகுறிகளில் ஏதாவது ஒன்றிரண்டு தென்பட்டாலும் உடனடியாக தேவையான அளவு நீர் அருந்தி, கோடையில் ஆரோக்கியத்தைப் பேணிக் கொள்வது நலம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)