

கால் பாதங்களில் அழுத்தம், சரியான காலணியை அணியாதது, பாதங்களை பராமரிக்காதது, நீரிழிவு என பல காரணங்களால் கால் ஆணி (Foot corn) உருவாகிறது. சிறிய அளவில் இருந்தால் சில வீட்டு வைத்திய முறைகளை பின்பற்றி குணமாக்கலாம்.
1. கால் ஆணி என உணர்ந்து தோல் தடித்து வலி ஏற்பட்டால், பூண்டை நசுக்கி காலில் வைத்து கட்டி காலையில் எடுத்து விடலாம். இது போல் ஒரு வாரம் செய்ய நல்ல நிவாரணம் கிடைக்கும்.
2. மல்லிகை செடியின் இலையை இடித்து சாறு பிழிந்து அதை ஆணி உள்ள இடத்தில் தடவி பத்து போடலாம். இதனால் கால் ஆணி மேலும் பரவாமலும், வலி கொடுக்காமலும் இருக்கும்.
3. மஞ்சள் ஒரு துண்டு, வசம்பு ஒரு துண்டு, மருதாணி ஒரு கைப்பிடி அளவு எடுத்து விழுதாக அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வர கால் ஆணி இருந்த இடம் மறையத் தொடங்கும்.
4. அம்மான் பச்சரிசி செடியை எடுத்து அதில் வரும் பாலை பூசி வர கால் ஆணி மறையத் தொடங்கும். தொடர்ந்து செய்து வர வலி குறைந்து கால் ஆணி முற்றிலும் குணமாகும்.
5. சித்திர மூலம் (கொடிவேரி) வேர்ப்பட்டையை ஒரு புளியங்கொட்டை அளவு எடுத்து அரைத்து தூங்குவதற்கு முன் கால் ஆணி மீது பூசி வர நல்ல பலன் கிடைக்கும்.
6. 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு, கைப்பிடி அளவு மருதாணி இலைகள் ஆகியவற்றை தண்ணீர் விட்டு அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் கனமாக பத்து போட்டு வர நல்ல மாற்றம் தெரியும். வெற்றிலையை இதன் மேல் வைத்தாலும் நல்ல பலன் கிடைக்கும்.
7. வேப்பிலை, மஞ்சளை அரைத்து கால் ஆணி உள்ள இடத்தில் தடவி பின் கழுவி வர நல்ல பலன் கிடைக்கும்.
8. விளக்கெண்ணெயை, மஞ்சள் தூளோடு கலந்து சிறிது படிகாரம் சேர்த்து கலந்து இதை கால் ஆணி உள்ள இடத்தில் தடவி பத்து போட்டு கழுவி வர நாளடைவில் ஆணி மறைந்து இதம் தரும்.
9. சரியான முறையில் நடப்பது, காலணியை சரியான அளவில் போடுவது, உடல் எடையை குறைப்பது போன்றவையும் கால் ஆணியை தவிர்க்க சில வழிமுறைகள்.
10. எருக்கன் பாலை சில சொட்டுகள் விடலாம். ஆனால், புண் இருந்தால் இவை பலனளிக்காது. கால் ஆணி வளராமல் புண் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
நவீன மருத்துவத்தில் கால் ஆணிக்கென பல மருத்துவ முறைகள் வந்து விட்டன. எளிய வைத்தியமாக மேற் சொன்னவை பலனளிக்காத போது மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை எடுக்கலாம். லேசர் சிகிச்சை முறையில் பூரண குணம் கிடைக்கும். தகுந்த மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)