

மனித உடலில் அதிக எடையுள்ள உறுப்பும், மிகப்பெரிய சுரப்பியும் கல்லீரலே ஆகும். இது அடிவயிற்றின் வலது பக்கத்தில் அமைந்துள்ள ஒரு பெரிய, முக்கிய உறுப்பாகும். இது ரத்தத்தை வடிகட்டுதல், நச்சுக்களை நீக்குதல், புரதங்களை உருவாக்குதல் மற்றும் உணவை ஆற்றலாக மாற்றுதல் போன்ற பல முக்கியமான செயல்பாடுகளை செய்கின்றது. இது வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்பு சக்தி, செரிமானம், நச்சு நீக்கம் மற்றும் வைட்டமின்களை சேமித்தல் போன்ற பணிகளுக்கும் உதவுகிறது.
கல்லீரல் அழற்சி (Liver cirrhosis) என்றால் என்ன?
கல்லீரல் அழற்சி (Hepatitis) என்பது கல்லீரலின் திசுக்களில் ஏற்படும் அலர்ஜி அல்லது வீக்கமாகும். இந்த அழற்சி கல்லீரலின் இயல்பான செயல்பாடுகளைத் தடுக்கிறது. மஞ்சள் காமாலை, சோர்வு, குமட்டல், அடிவயிற்றில் வலி மற்றும் வீக்கம் போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும். சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் நீண்ட கால கல்லீரல் சேதம், சிரோசிஸ் மற்றும் கல்லீரல் செயலிழப்புக்கு வழிவகுக்கும்.
காரணங்கள்
1. ஹெபடைடிஸ் A, B, C போன்ற வைரஸ்கள் கல்லீரல் அழற்சியை உண்டு பண்ணும். இந்த வைரஸ்கள் ரத்தம், அசுத்தமான உணவு அல்லது நீர் அல்லது பாதிக்கப்பட்ட நபருடன் நெருங்கிய தொடர்பு மூலம் பரவுகின்றன.
2. நீண்ட காலமாக அதிக அளவு மது அருந்துவது கல்லீரலை சேதப்படுத்தும். இது கல்லீரலில் வீக்கம், கொழுப்பு படிதல் மற்றும் வடுக்களை (சிரோசிஸ்) ஏற்படுத்தும்.
3. சில மருந்துகளின் நீண்டகால அல்லது அதிகப்படியான பயன்பாடு மற்றும் ரசாயன நச்சுக்களின் வெளிப்பாடு கல்லீரலில் பாதிப்பை ஏற்படுத்தி அழற்சியை உண்டாக்கும்.
4. சில மரபணு குறைபாடுகள் காரணமாகவும் கல்லீரல் அழற்சி ஏற்படும்.
5. உடல் பருமன், நீரிழிவு நோய் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கம் காரணமாக கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிவது அழற்சியை ஏற்படுத்தும்.
அறிகுறிகள்
1. வழக்கத்திற்கு மாறான கடுமையான சோர்வு மற்றும் உடல் பலவீனம் உணர்வது
2. குமட்டல் மற்றும் பசியின்மை ஏற்படுதல்
3. கண்கள் அல்லது சருமம் மஞ்சள் நிறமாகுதல்
4. வயிற்றின் மேல் வலது பகுதியில் வலி அல்லது அசௌகரியம், அத்துடன் அடிவயிற்றில் வீக்கம்
5. எடை இழப்பு
6. சிறுநீர் அடர் நிறமாக மாறுதல் மற்றும் சரும அரிப்பு
7. எளிதாக இரத்தப்போக்கு அல்லது சிராய்ப்பு ஏற்படுதல்.
தடுப்பு முறைகள்
1. கல்லீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முழு தானியங்கள், பருப்பு வகைகள், பழங்கள் குறிப்பாக சிட்ரஸ் பழங்கள் மற்றும் கீரை, கேல், ப்ராக்கோலி போன்ற காய்கறிகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
2. பூண்டு, மஞ்சள், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள்(வால்நட்ஸ்), சால்மன், கானாங்கெளுத்தி போன்ற மீன்கள் போன்றவற்றை சாப்பிடலாம். இவை நச்சுக்களை அகற்றவும், கல்லீரல் நொதிகளை மேம்படுத்தவும், வீக்கத்தை குறைக்கவும் உதவும்.
3. சர்க்கரை கலந்த பானங்கள் மற்றும் உணவுப் பொருட்கள், வறுத்த மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அவசியம்.
4. முக்கியமாக அதிகமாக மது அருந்துவதை தவிர்க்க வேண்டும்.
சிகிச்சைகள்
சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் கல்லீரல் அழற்சி கடுமையான கல்லீரல் நோய்களுக்கு வழிவகுக்கும். எனவே, நோயின் அடிப்படை காரணத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படும்.
இதில் மருந்துகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் (ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி) மற்றும் சில சந்தர்ப்பங்களில், கல்லீரல் கடுமையாக சேதம் அடைந்து மருந்துகளுக்கு பலன் அளிக்காத நிலையில் அறுவை சிகிச்சை அல்லது கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை போன்றவை பரிந்துரைக்கப்படலாம். எனவே, தகுந்த மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை பெறுவது அவசியம்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)