நுரையீரலை பாதிக்கும் நோய்களில் குறிப்பிடத்தக்கது ஆஸ்துமா. இதனால் மூச்சு விடுவதில் சிரமம், அதனைத் தொடர்ந்து நெஞ்சு இறுக்கம், தொடர் இருமல், மூச்சிரைப்பு ஏற்படும். இதை எளிய கை வைத்தியம் செய்து நிவாரணம் பெறலாம்.
* வெள்ளை பூண்டை நசுக்கி அதன் சாற்றை முகர்ந்துகொள்ள மூச்சுத் திணறல் மட்டுப்படும்.
* ஆடாதொடை வேர், கண்டங்கத்தரி வேர் ஆகியவற்றை கொதிக்க விட்டு அதில் திப்பிலி சேர்த்து வடிகட்டி குடிக்க இரைப்பு நீங்கும்.
* தூதுவளை கொடியை கழுவி காய வைத்து பொடியாக்கி அரை டீஸ்பூன் தினமும் சாப்பிட்டு வந்தால் சுவாச குழாயில் ஏற்படும் சளித்தொல்லை சட்டென விலகும்.
* இஞ்சியை தோல் சீவி பொடியாக்கி நீரில் போட்டு கொதிக்கவிட்டு இறக்கி தேன் சேர்த்துப் பருகிட சுவாச நோய் படிப்படியாக குணமாகும்.
* வில்வ இலை பல மருத்துவப் பலன்களைக் கொண்டது. வில்வ இலையுடன் மிளகு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கி வடிகட்டி சற்று ஆறியதும் தேன் கலந்து சாப்பிட்டால் இருமல் மூச்சிரைப்பு நிற்கும். சுவாசப் பாதை அடைப்பு சரியாகி மூச்சு விட எளிதாக இருக்கும்.
* ஆஸ்துமா இளைப்புக்கு நஞ்சறுப்பான் செடியின் 4 இலைகளை மிளகு சேர்த்து தினமும் அரைத்து உண்டால் இளைப்பு குணமாவதுடன் நல்ல சுவாசத்தையும் கொடுக்கும்.
* அரச மரத்தின் பழத்தை உலர வைத்து இடித்துப் பொடியாக்கி வெந்நீரில் கலந்து காலை, மாலை சாப்பிட நீடித்த பலனைக் கொடுக்கும்.
* துளசிச் சாற்றை 1 டீஸ்பூன் வீதம் மூன்று வேளை சாப்பிட சுவாசத்தை, சளி, இருமல் ஆகியவை தீரும். நான்கு அல்லது ஐந்து பூண்டு பற்களை தோலுரித்து பாலில் கொதிக்க விட்டு மஞ்சள் தூள், பனங்கற்கண்டு சேர்த்து தேனுடன் சாப்பிட இரவு நேர இழுப்பு, சுவாசப் பாதை அடைப்பை சரியாகும்.
* வெற்றிலையை சாறு எடுத்து இஞ்சி சாறுடன் தேன் கலந்து குடித்து வந்தால் இளைப்பு குணமாவதுடன் நல்ல நீடித்த பலனைத் தரும்.
* திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை ஆகியவற்றை பொடி செய்து வைத்துக் கொள்ளவும். இதை காலை, மாலை அரை டீஸ்பூன் தேனுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் கபத்தொல்லை நீங்கி மூச்சு விட எளிதாக இருக்கும்.
* அலர்ஜி தரும் சூழ்நிலைகளைத் தவிர்க்க வேண்டும். ஒவ்வாத உணவுகளை உண்ணாமல் சத்துள்ள, சமச்சீரான உணவுகளை சேர்த்துக்கொள்ள உடல் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். நோய் எதிர்ப்பாற்றல் வளர்ந்தாலே ஆஸ்துமா உபாதைகளுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்.