பெண்களுக்கு மாதவிடாய் நாட்களில், வலியுடன் கூடிய மாதாந்திர உதிரப்போக்கை சூதக வலி அல்லது டிஸ்மெனோரியா என்பர். எந்தக் காரணமும் இல்லாமல் சாதாரணமாக உதிரப்போக்கு ஆரம்பிக்கும்போது ஏற்படும் வலி முதல் வகை. இந்த வலி அதிகரிக்கும்போது புரொஸ்டாகிளாண்டிஸ் என்னும் ஹார்மோனால் பிரச்னைகள் ஏற்படும். கருப்பை நோய்கள், இடுப்பு மற்றும் அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் உறுப்புகளில் நோய்கள், பால்வினை நோய்கள் மற்றும் கருத்தடை சாதனங்களாலும், மன அழுத்தத்தாலும் ஏற்படுவது இரண்டாவது வகை.
இதற்கு நிவாரணம் தரும் சில எளிய சித்த வைத்திய முறைகளை முயற்சிக்க, வலியை தவிர்க்கலாம். இதன் மூலம் பக்க விளைவுகளையும் போக்கலாம்.
* கரியபோளம், பொரித்த பெருங்காயம் இரண்டையும் சம அளவு எடுத்து தேன் விட்டு அரைத்து அதை மிளகு அளவு உண்ணலாம்.
* ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணீர் விட்டான் கிழங்கு சாற்றை, கால் டீஸ்பூன் மிளகுத்தூள் சேர்த்து கலந்து அருந்த வலி குறையும்.
* சாதிக்காய், திப்பிலி, சீரகம் மூன்றையும் சம அளவு எடுத்து பொடித்து கால் டீஸ்பூன் மோரில் கலந்து குடிக்கலாம்.
* மலைவேம்பு வேர்ப்பட்டை பொடி கால் டீஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.
* சதக்குப்பை இலைச்சாறு ஒரு டீஸ்பூன் எடுத்து தேன் கலந்து அருந்தலாம்.
* பாகல் பழச்சாறு, தேவையெனில் சர்க்கரை கலந்து சாப்பிடலாம்.
* முருங்கைப்பூவை நெய் விட்டு வதக்கி உண்ணலாம்.
* மாசிப்பத்திரி இலைச்சாறு 15 மி.லி. அருந்தலாம்.
* கைப்பிடி அளவு ஆடாதொடை இலையில் இரண்டு டம்ளர் நீர் சேர்த்து அரை டம்ளராக வற்ற வைத்து அருந்தலாம்.
* கால் டீஸ்பூன் குங்குமப்பூவை எலுமிச்சம் பழச்சாறு, நீர் சேர்த்து அருந்தலாம்.
* ஓமம், கிராம்பு இரண்டையும் சம அளவு எடுத்து பொடித்து அதை கால் டீஸ்பூன் மோரில் கலந்து அருந்தலாம்.
* ஒரு டேபிள் ஸ்பூன் மூங்கில் இலைச்சாறை நீரில் கலந்து பருகலாம்.
* வெந்தயம் ஊறிய தண்ணீரையும், சோம்பு ஊற வைத்து அந்த தண்ணீரோடு அருந்த, வயிற்று வலி, தசைப்பிடிப்பு சரியாகும்.
* முடக்கத்தான் இலையை விளக்கெண்ணெயில் வதக்கி அடிவயிற்றில் பற்று போடலாம்.
* சிற்றாமணக்கு இலையை, சிற்றாமணக்கு எண்ணையில் வதக்கி அடிவயிற்றில் பற்று போடலாம்.
* நொச்சி இலையை நீரில் போட்டு காய்ச்சி இடுப்பு பகுதியில் ஒத்தடம் கொடுக்கலாம்.
* இந்நாட்களில் பால், பாலாடைக்கட்டி, மாமிசம், பதப்படுத்தப்பட்ட உணவுகள் பொரித்த உணவுகள் போன்றவற்றைத் தவிர்த்தல் நல்லது.
* பழம் மற்றும் கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.