ஞாபக சக்தியை பெருக்குவதற்கு என்னென்ன செய்ய முடியும் என்பது பலரின் கவலைகளில் ஒன்று. ஞாபக மறதியாக பிரிஃட்ஜில் குக்கர் வெய்ட்டை வைத்துவிட்டு பாடுபடும் இல்லத்தரசிகளும் ஆஃபிஸ் பைலை லஞ்ச் பேக்கில் போட்டுக் கொண்டு தேடும் கணவன்மார்களும் இருப்பார்கள்.
50 வயதுக்கு மேற்பட்டவர்கள் திடீரென்று தாங்கள் எதை எடுக்க வந்தோம், என்ன பேச வந்தோம் என்பதை மறந்து தடுமாறுவதை பார்த்திருப்போம். என்னென்ன வழிமுறைகளைப் பின்பற்றினால் ஞாபகசக்தி சீராக இருக்கும்? இதோ இங்கு பார்ப்போம்..
நமது உடல் பாகங்களில் மிக முக்கியமானதாக இருப்பது மூளை. நினைவுகளை சேமித்து நம்மை உயிர்ப்புடன் வாழவைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் மூளையானது மனித உடலின் மொத்த எடையில் 2.5 சதவீதம் தான் என்றாலும், அது மனிதனின் சக்தி மூலத்தில் 20 சதவீதத்தை பயன்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஆகவே நாம் நமது மூளைத் திறனை பெருக்கி ஞாபகசக்தி பெற மூளையை சரியான ஆரோக்கியத்தை அளிக்க வேண்டும் என்கிறது மருத்துவம்.
என்னது தேமேனு இருக்கிற இடம் தெரியாமல் இருக்கும் மூளைக்கு ஊட்டம் தரணுமா ? ஆம் கண்டிப்பாக..
அப்போதுதான் எந்த வயதிலும் நாம் நல்ல நினைவுகளுடன் வாழ முடியும்.
சரி மூளைக்கு எப்படி போதுமான ஆரோக்கியத்தை அளிப்பது ?
நம்மை களைப்படையவும், சோர்வடையவும் வைப்பது அதிக உழைப்பு மட்டும் அல்ல குறைவான உழைப்பும்தான். இதை புரிந்து தேவையான உழைப்பு மற்றும் ஓய்வைத் தந்தால் மூளை களைப்பாகாது.
எந்த நேரம் மூளை உற்சாகமாக இயங்கும்?
இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 மணிக்கு 4:00 மணிக்கிடையில் மனிதனின் நினைவாற்றல் மிகவும் பலவீனமாக இருக்கும் என்றும், அதே போன்று பகலிலும் மதியம் 12 மணியிலிருந்து 2 மணி வரை பலவீனமான நேரம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். எனவே இந்நேரங்களில் முக்கிய பணிகளை செய்வதை தவிர்க்கலாம்.
காலை 8 மணியிலிருந்து 12 மணி வரையும், மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணி வரையும் மனிதனின் திறமைகள் மிக உயர்ந்த நிலையில் உள்ளதாக ஆய்வில் தெரிய வருகிறது. மூளை உழைப்பின் தீவிரமும் வேலை நேரத்தில் மாற்றமடையக் கூடும்.
தீவிரமான வேகத்துடன் மூளையால் எந்த நேரத்தில் பணிபுரிய முடிகிறதோ அந்த நேரத்தை நாம் நமது பணிகளை முடிக்க அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் நமது கவனத்தை அலைபேசி, இணையதளம் போன்றவற்றில் அலைய விடக்கூடாது. முக்கியமான தேவைப்படுகிற வேலையில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும்.
அதீத பணிகளால் களைப்படைந்து சிந்திக்கும் திறனற்று சோர்ந்து போகும் மூளைக்கு சில வேலைகளில் மருத்துவ கண்காணிப்பில் மருந்து கொடுப்பதும் அவசியமாகலாம். ஏனெனில் மூளை தளர்ச்சி என்ற பாதிப்புக்கு மருத்துவரின் ஆலோசனை மற்றும் அதற்கேற்ற மருத்துவம் அவசியமாக தேவைப்படுகிறது.
குளுக்கோஸ் என்பது மூளைக்கு முக்கியமாக போஷாக்கு அளிக்கக்கூடிய ஒரு திரவம். அதாவது மூளை களைப்பு ஏற்படுவதை தடுக்க சில அமினோ அமிலங்களும் அவசியம் தேவை. மூளையின் வளர்சிதை மாற்றத்தை சீராக்க வைட்டமின் பி1 பி2 பி6 உள்ளிட்ட சத்துகளும் அவசியமாகிறது.
மிகத் தீவிரமான உழைப்புக்கு பிறகு சோர்வு உண்டாவது இயற்கை. நம் மூளை விரும்பிய சாதகமான சூழ்நிலையை தோற்றுவிப்பதன் மூலம் நமது திறனை அதிகரிக்க முடியும் என்பது ஆய்வாளர்கள் கருத்து. மூளையும் உடம்பும் களைத்திருக்கும் போது உற்சாகமூட்டும் இசை, பாடல்கள் அல்லது சிவப்பு சார்ந்த வண்ணத் தூண்டல்கள் நல்ல பலனளிக்கும் .
பழைய மகிழ்வான சம்பவங்களை மீண்டும் நினைவுப்படுத்திப் பார்த்தல் மற்றும் தொடர்ச்சியான கற்றலே ஞாபக சக்தியின் அடிப்படை. அன்றாடம் நினைவில் கொள்ள வேண்டிய விஷயங்களை படுக்கைக்கு போகும் முன்பும் படுக்கையில் இருந்து எழுந்த பின்பும் ஞாபகப்படுத்தி பார்ப்பது நல்ல பலனளிக்கும் என்கின்றனர் மனோவியல் பயிற்சியாளர்கள்.
நினைவில் கொள்ள வேண்டிய விஷயத்தோடு அது தொடர்பான இன்னொன்றை நினைவுக்கு கொண்டு வந்து நிலை நிறுத்துவது மூளையின் திறனுக்கு நல்ல பலம் தரும்.
இத்துடன் குழந்தைகள், இளைஞர்களுடன் பழகுவதும் அவர்கள் குறித்த விஷயங்களை கலந்து உரையாடி நினைவில் கொள்வதும் மிகவும் சிறப்பானது.
குழந்தைகளுடன் வார்த்தை புதிர், விளையாட்டு புதிர் போன்றவைகளை மேற்கொள்வது நினைவு சக்தி பெருக நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)