முன்பெல்லாம் அதிகமாக சாப்பிடுபவர்களைக் கேலியும் கிண்டலும் செய்வார்கள். ஆனால் பலரும் தற்போது, ‘நான் ஒரு ஃபுட்டி’ என்று சொல்லுவதை பெருமையாக நினைக்கிறார்கள். எப்படி இருந்தாலும் அதிகமாக தேவையில்லாமல் உண்ணும்போது அது ஆரோக்கியக் கேட்டிற்கு வழி வகுக்கும். தேவையில்லாமல் உண்ணும் பழக்கத்தை மாற்ற உதவும் சில வழிகளைப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
தண்ணீர் குடித்தல்: நிறைய நேரங்களில் தாகத்தை பசி என்று தவறாகப் பலரும் நினைத்துக் கொள்கிறார்கள். லேசாக பசிக்கும்போது அல்லது தேவையில்லாத உணவுகளை உண்ணத் தோன்றும்போது ஒரு கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும். அது பசியையும் தள்ளிப்போடும். ஏதாவது உண்ண வேண்டும் என்ற எண்ணத்தையும் தள்ளிப்போடும்.
சமச்சீரான உணவுகள்: தேவையில்லாத வறுத்துப் பொறித்த உணவுகளை உண்ணுவது ஆரோக்கியக் கேட்டை உண்டாக்கும். ஆரோக்கியமான கொழுப்புகள், புரதச்சத்துள்ள உணவுகள், கார்போஹைட்ரேடுகள் போன்றவற்றை சரியான விகிதத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும். இது நீண்ட நேரம் பசிக்காமல் வைத்திருக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவை உறுதிப்படுத்தும்.
கவனத்துடன் உண்ணுதல்: சாப்பிடும்போது டிவி பார்த்துக்கொண்டு, மொபைல் பார்த்துக் கொண்டு சாப்பிடாமல், ஒவ்வொரு கவளத்தையும் ரசித்து ருசித்து சாப்பிட வேண்டும். இதனால் அதிக திருப்தியை உணர முடியும்.
ஆரோக்கியமான தின்பண்டங்கள்: இனிப்பு, காரம் என்று ஏதாவது தின்பண்டங்கள் சாப்பிட விரும்பினால் ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.
வழக்கமான நேரத்தில் உண்ணுவது: எப்போதும் வழக்கமான நேரத்தில் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். இது உடல் எடையை கட்டுக்குள் வைத்திருப்பது மட்டுமல்லாமல், தேவையற்ற தின்பண்டங்களை உண்ணுவதைத் தவிர்க்க உதவும்.
உடல் செயல்பாடு: வழக்கமான உடற்பயிற்சி, நடைப்பயிற்சி போன்றவை மனநிலை மற்றும் உடல் ஆற்றலை சரியாக வைத்திருப்பதன் மூலம் பசியையும் நிர்வகிக்க உதவுகிறது. தேவையில்லாத குப்பை உணவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது.
மன அழுத்த நிர்வாகம்: மனச்சோர்வு, மன அழுத்தம் போன்றவை அடிக்கடி பசி உணர்வுக்கு வழிவகுக்கும். ஆறுதல் தேடி சிலர் உணவுகளை நாடுவார்கள். இவற்றைத் தவிர்ப்பதற்காக ஆழ்ந்த சுவாசப் பயிற்சி, தியானம் அல்லது யோகா போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்ய வேண்டும்.
போதுமான தூக்கம்: சரியாகத் தூங்காவிட்டால் அது பசியுடன் தொடர்புடைய ஹார்மோன்களை சீர்குலைக்கும். இரவு 7லிருந்து 8 மணி நேரம் வரை தரமான தூக்கத்தை மேற்கொள்ள வேண்டும்.
மனதை திசை திருப்புதல்: தேவையில்லாத உணவுகளை உண்ணத் தோன்றும்போது ஒரு குட்டித் தூக்கம் போடலாம் அல்லது ஒரு வாக் போகலாம். நேரில் அல்லது போனில் நண்பர்களை அழைத்து சிறிது நேரம் பேசலாம். இளம் சூடான நீரில் குளிக்கலாம். இவை தேவையில்லாத உணவை உண்ணுவதைத் தள்ளிப்போடும்.
வயிறை நினைத்துப் பார்த்தல்: குப்பைக் கூடையில் குப்பையைத் தள்ளுவது போல கண்டதையும் வயிற்றில் போட்டால் அது உடல் பருமன் உள்ளிட்ட பலவித நோய்களை வரவழைக்கும் என்பதை கருத்தில் கொண்டு சமயோசிதமாக தேவையில்லாத உணவுகளை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.
உண்ணும் முறைகள்: நன்றாகப் பசித்த பிறகுதான் உண்ண வேண்டும். அமைதியான சூழ்நிலையில் கீழே அமர்ந்து உண்ணுவது நல்லது. கவனச் சிதறல்கள் இல்லாமல் இருக்க வேண்டும். உடலுக்கு எவ்வளவு தேவையோ அதை மட்டும் உண்ண வேண்டும். முழு வயிறு உண்ணக்கூடாது.