ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தமிழர்களின் மரபாக இருந்து வருகிறது. எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் முறையை சரகர் என்கிற பழைமையான இந்திய மருத்துவர் அறிமுகப்படுத்தினார். இவர் கி.மு.ஐந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்தவர். எண்ணெய் தேய்த்துக் குளிப்பதன் பலன்களைப் பற்றி தனது புத்தகமான, ‘சுஷ்ருத சம்ஹிதா’ என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்.
அந்தக் காலத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் குளித்தனர். நாம் இந்தக் காலத்தில் உச்சந்தலை, முகம், கழுத்து, கை, கால்களில் ஊற வைத்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும். எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலை மிகவும் ரிலாக்ஸாக வைத்திருக்கும். நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். மேலும், அதன் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. பளபளக்கும் சருமத்திற்கு உதவுகிறது: எண்ணெய்க் குளியல் நமது உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதுடன் சருமத்தை மென்மையாக்குகிறது. உடல் எங்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது. முகம், கைகளில் அங்கங்கே இருக்கும் சிறு துளைகளில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை நீக்கி உடலை பிரகாசிக்கச் செய்கிறது.
2. மன அழுத்தத்தையும் மனச்சோர்வையும் நீக்குகிறது: இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் பொறுமையாக நிதானமாக உடலுக்கும் தலைக்கும் எண்ணெய் தேய்த்து குளிப்பது மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருக்கும்.
3. நோய்களுக்கு அருமருந்து: மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, வயிற்று பிரச்னைகள், மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களுக்கு எண்ணெய் தேய்த்து; குளிப்பது அருமருந்தாக விளங்குகிறது. உடல் வலி, உடல் சோர்வுவையும் போக்குகிறது. நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும்.
4. இளமையான தோற்றத்தை அளிக்கிறது: நல்லெண்ணையில் நிறைய வைட்டமின்கள் இருக்கின்றன. முகத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் தேய்த்து விட்டு குளிப்பதால் வயதான தோற்றத்தைத் தடுத்து, இளமையான தோற்றத்தை அளிக்கிறது. முகச்சுருக்கம், கை, கால் சுருக்கத்தையும் போக்கி, இளமையாக வைக்கிறது.
5. சூரிய ஒளியில் இருந்து வைட்டமின் டி யைப் பெற்றுத் தருகிறது: எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் அது நமது சருமத்தை ஈரப்பதத்தோடும் மென்மையாகவும் வைத்திருக்கிறது. மேலும், அதில் உள்ள பேட்டி ஆசிடுகள் சருமம் உலர்ந்து போவதை தடுக்கிறது. நாம் வெளியில் செல்லும்போது உஷ்ணம் வெளியேறும் சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். சூரியனின் வெப்பம் நம்மை ஒன்றும் செய்வதில்லை. முகத்தில் சுருக்கம் தோன்றாமல் பாதுகாக்கிறது.
6. ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது: நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ இருப்பதால் அது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. மேலும், அது விரைவிலேயே நரை முடி வருவதையும் பொடுகு உருவாவதையும் தடுக்கிறது. பண்டைய காலத்தில் இது ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது. உலக அழகி கிளியோபாட்ரா பெற்ற தன்னுடைய அழகான சருமத்திற்காக நல்லெண்ணையைதான் பயன்படுத்தினார்.
பொதுவாக, அனைவரும் தீபாவளிக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கம். அப்படி இல்லாமல் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம். காஞ்சி மகா பெரியவரே இதன் பலன்களைப் பற்றி கூறியுள்ளார். அவரிடம் ஒருமுறை வந்த பக்தர் ஒருவர் நீண்ட காலமாக முதுகு வலியால் அவதிப்படுவதாகக் கூறியபோது வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்து வரச் சொன்னார். அதேபோல, அந்த பக்தரின் முதுகு வலி பிரச்னை மூன்றே மாதங்களில் சரியானது.