

உங்கள் உணர்வுகளை மறைப்பதற்காக, போலியாகச் சிரிக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? ஜாக்கிரதை! இது உடல் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் பழக்கம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
உளவியல் ரீதியாக இந்த நிலைக்கு Smiling depression என்று பெயர். வெளியில் மகிழ்ச்சியாகவும் சுறுசுறுப்பாகவும் காட்சியளிக்கும் ஒரு நபர், உள்ளுக்குள் கடுமையான மன அழுத்தத்தோடு போராடுவதையே இந்தச் சொல் குறிக்கிறது.
உங்கள் உயர் அதிகாரி சொல்லும் மொக்கை ஜோக்குக்கு போலியாகச் சிரித்து வைக்கிறீர்களா?
மனதில் இருக்கும் வருத்தத்தை வெளிக்காட்டக் கூடாது என்பதற்காக, போலியாக நண்பர்கள் முன் சிரிக்கிறீர்களா?
இது மன அழுத்தத்தை மறைக்க உதவும் என்று நீங்கள் நினைத்தாலும், இதைத் தொடர்ந்து செய்வது உங்கள் உடலுக்கும் மனதுக்கும் கேடு விளைவிக்கும்.
நம் உணர்ச்சிகளை நாமே கட்டுப்படுத்தி வைப்பது, நம்மை நாமே தனிமைப்படுத்திக் கொள்ளும் அளவிற்குக் கொண்டு சென்றுவிடும். இது நாளடைவில் கடுமையான மன அழுத்தத்தில் கொண்டு போய் விட்டுவிடும். இதனால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், இதய ஆரோக்கியத்தில் பாதிப்பு, நாள்பட்ட வலி, எரிச்சல், தூக்கமின்மை, மனச்சோர்வு போன்ற உடல்நல மற்றும் மனநலப் பிரச்சனைகள் ஏற்படும்.
1. உணர்ச்சிகளை அடக்கிப் போலியாகச் சிரிக்கும் போது, உடலில் 'கார்டிசோல்' எனப்படும் அழுத்த ஹார்மோன் அதிகமாகச் சுரக்கிறது. இது இரத்த அழுத்தத்தை அதிகரித்து, இதயத்திற்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைப் பாதிக்கும்.
2. பணியிடங்களில் ஊழியர்கள் தங்களின் உண்மையான கோபம் அல்லது சோர்வை மறைத்துவிட்டு கட்டாயமாகச் சிரிக்க வேண்டியிருக்கிறது. இதற்கு 'எமோஷனல் லேபர்' என்று பெயர். இது பணியிடச் சோர்வை மிக வேகமாக உண்டாக்கும்.
3. உண்மையான புன்னகையின் போது நம் உதடுகள் மட்டுமல்லாமல், கண்கள் மற்றும் கண்ணத்தைச் சுற்றியுள்ள தசைகளும் சுருங்கும். ஆனால், போலியான சிரிப்பின் போது உதடுகள் மட்டுமே விரியும். இதை மற்றவர்கள் எளிதில் கண்டறிந்து விடுவார்கள் என்பதால், இது உறவுகளில் விரிசலையும், நம்பிக்கையின்மையையும் கூட ஏற்படுத்தலாம்.
இனி உங்கள் உணர்வுகளுக்கு நீங்கள் நேர்மையாக இருக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வலிக்கும் போது அழுவது, சிரிக்கப் பிடிக்காத போது சிரிக்காமல் இருப்பது போன்றவையே ஆரோக்கியமான மனநிலைக்கு அடையாளமாகும். அடுத்தவர்களுக்காகவும், சூழ்நிலை காரணமாகவும் போலியாகச் சிரிப்பதை விட்டுவிட்டு, உங்கள் மனம் மகிழும்போது சிரியுங்கள்.
உங்கள் உணர்வுகளைக் குறை கூறாமல் கேட்கும் ஒரு நல்ல நண்பரிடமோ அல்லது குடும்ப உறுப்பினரிடமோ மனக் குறைகளைக் கொட்டிவிடுங்கள். யாரிடமும் சொல்ல முடியாத விஷயங்களை ஒரு டைரியில் எழுதி வைப்பது மனப் பாரத்தைக் குறைக்கும். அதுவே உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.