

"நொறுங்கத் தின்றால் நூறு வயது" என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது, நாம் உண்ணும் உணவை நன்கு மென்று கூழாக்கி விழுங்குவதை பழக்கமாக்கிக் கொண்டால் நமது இரைப்பை குடல் போன்ற ஜீரண உறுப்புகளின் செயல்பாடுகள் சுலபமாகி சத்துக்கள் நல்ல முறையில் உடலுக்குள் உறிஞ்சப்படும். அதனால் ஆரோக்கியம் மேம்படும் ஆயுளும் கூடும் என்பதுதான் இதன் பொருள்.
இதற்கும் மேலாக, இந்தப் பழக்கம் மூளையை சுறு சுறுப்பாக்கவும், சிலரின் மன அழுத்தத்தைக் குறைத்து அமைதி பெற உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். உணவை நன்கு அழுத்தி மெல்லும்போது அதன் தாளநயமிக்க அசைவுகள், தாடையிலிருந்து மூளை வரை சென்று கொண்டிருக்கும் பல தரப்பட்ட நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை தூண்டிவிடுகின்றன.
இதனால் மூளைக்குச் செல்லும் நரம்புகளில் இரத்த ஓட்டம் அதிகரிக்கவும் நரம்புகள் கூடுதல் விழிப்புணர்வு பெறவும் வாய்ப்பாகிறது. வாயிலிட்ட உணவுகளை நன்கு மெல்லும்போது நம் கவனம், கூர்நோக்கு மற்றும் நினைவாற்றல் சம்பந்தப்பட்ட செயல்பாடுகள் மேம்பாடடைவதாக ஆராய்ச்சிகள் மூலம் கண்டு பிடித்திருப்பதை நரம்பியல் நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
மூளை சுறு சுறுப்புடன் இயங்க, அதற்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் நிறைந்த இரத்த ஓட்டம் மற்றும் புலனுணர்வுத் தூண்டுதல் (Sensory Stimulation) தேவை. இச்செயல்பாடுகள் சிறப்பாக நடைபெற, வாயில் உணவை மெல்லும்போது உண்டாகும் அசைவுகளும் ஒரு காரணியாகிறது.
சாப்பாட்டை அவசர கதியில் அள்ளிப்போட்டு விழுங்காமல் மெதுவாக மென்று விழுங்குபவர்கள் மற்றும் சூயிங்கம் மென்று கொண்டிருப்பவர்களிடம் விழிப்புணர்வு சற்று கூடுதலாக இருக்கு மெனவும் கூறப்படுகிறது. முறையாக உணவை மெல்லும்போது அது வாயிலேயே உடைபட்டு, உமிழ் நீரில் உள்ள ஜீரணத்திற்கு உதவும் என்சைம்களோடு கலந்துவிடுகிறது. அதனால் உணவின் ஜீரணம் வாயிலிருந்தே தொடங்கிவிடுகிறது.
பின் உணவில் உள்ள ஊட்டச் சத்துக்கள் முழுவதுமாக உடலுக்குள் உறிஞ்சப்பட்டுவிடுவதால், உடலுக்கு அதிகளவு சக்தி கிடைக்கிறது. மூளையின் ஒட்டு மொத்த செயல்பாடுகளும் மேன்மையடைகிறது. குடல் மற்றும் மூளை ஆகிய இரண்டு உறுப்புகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டு செயல் புரியும்போது, குடல் ஆரோக்கியம் மூளையின் கூர்நோக்கும் சக்தி, அமைதியான மனநிலை போன்றவை தொடர்ந்து நிலைக்க உதவி புரிகிறது.
இன்றைய வாழ்வியல் முறையில் அவசரமாக உண்டு முடிப்பது, போனில் மூழ்கியபடி அல்லது டிவி பார்த்துக் கொண்டே சாப்பிடுவது போன்ற பழக்கங்களை நாம் சகஜமாக காண முடிகிறது. இவ்வாறான பழக்கங்கள் சிறப்பான ஜீரணத்திற்கும் மன நிறைவிற்கும் உதவாது.
மாறாக வயிற்றுக்குள் வீக்கம் மற்றும் அஜீரணம் போன்ற அசௌகரியங்களை உண்டு பண்ணும். கவனச் சிதறல் இருக்கும் போது தன்னை அறியாமலே அதிகமாக சாப்பிட்டுவிடுவதும் உண்டு. அதனால் உடல் எடை கூடவும் மூளை மந்த நிலை பெற்று அதன் சுறுசுறுப்பு குறையவும் வாய்ப்பு உண்டாகும்.
உணவை மென்று விழுங்குவதால் மட்டுமே மூளையின் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும் என்று நம்புவதும், ஆரோக்கியம் தரும் சரிவிகித உணவை தவிர்ப்பதும் தவறு. மெல்லுதல் என்பது ஆரோக்கியமான வாழ்வியலின் ஒரு சிறிய பகுதி மட்டுமே. மூளை உள்ளிட்ட உடலின் ஒட்டு மொத்த உறுப்புகளும் முழுமையான ஆரோக்கியம் பெற ஊட்டச் சத்துக்கள் நிறைந்த சரிவிகித உணவு, நீரேற்றம், போதுமான தூக்கம், உடற்பயிற்சி, மன நிறைவோடு மகிழ்ச்சியுடன் ஓய்வாக அமர்ந்து உண்ணுதல் போன்ற நல்ல பழக்கங்களே அவசியம் தேவை.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)