
நம்மில் பலர் காலை, மாலை என குறைந்தது இரண்டு வேளையாவது காபி அல்லது டீ அருந்தும் பழக்கமுடையவராய் இருப்போம். சூடான பானத்தை அருந்துவது மட்டுமின்றி, அதனுடன் பிஸ்கட், ரஸ்க் போன்ற ஸ்னாக்ஸ்களை எடுத்துக் கொள்வதையும் தற்போது வழக்கமாக்கிக் கொண்டுள்ளோம். அப்படி எடுத்துக்கொள்ளும் ஸ்னாக்ஸ் எந்த வகையாய் இருப்பது ஆரோக்கியம் என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
ரோஸ்டட் மக்கானா, ரோஸ்டட் பிரவுன் கொண்டைக் கடலை, ரோஸ்டட் ஸ்வீட் பொட்டட்டோ, ஏர் பாப்ட் (air-popped) பாப்கார்ன், சோள அவல், கம்பு அவல் மற்றும் முழு தானிய க்ராக்கர்ஸ் போன்றவற்றை குறைந்த அளவில் காபி அல்லது டீ போன்றவற்றுடன் சேர்த்து உண்ணலாம்.
பூசணி விதை, பாதாம் பருப்பு, முந்திரி, வால்நட், பேரீச்சம் பழம் போன்றவை சேர்ந்த கலவையை ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளலாம். அவற்றிலுள்ள அன்சாச்சுரேடட் கொழுப்புகள் மற்றும் நார்ச் சத்துக்கள் இதய ஆரோக்கியம் மேம்பட உதவும்.
தெப்லா, காக்ரா அல்லது வீட்டில் தயாரிக்கப்படும் டோக்ளா போன்ற பாரம்பரிய ஸ்னாக்ஸ்களை உட்கொள்வது சிறந்த தேர்வாகும். மேலும் வீட்டுத் தயாரிப்புகளான கோதுமை, கேழ்வரகு மற்றும் குயினோவா பிஸ்கட்கள், வறுத்த வேர்க்கடலை போன்றவையும் தீங்கு தராதவைகளாகும்.
காய்கறி மற்றும் சட்னி சேர்த்த பேல்பூரி, முளை கட்டிய பயறு சேர்த்த சாட் ஐட்டம், மற்றும் வேக வைத்த மக்காச் சோளம் அல்லது கொண்டைக் கடலை சாலட் ஆகியவையும் டீயுடன் சேர்த்து உண்ண ஏற்றவையே.
டீ காபியுடன் சேர்த்து உண்பதை தவிர்க்க வேண்டிய உணவுகள்:
பக்கோடா, சமோசா, பஜ்ஜி மற்றும் சிப்ஸ் போன்ற எண்ணெயில் பொரித்த ஸ்னாக்ஸ்களை தவிர்ப்பது நலம். நம் உள்ளுணர்வின் தூண்டுதலுக்காக, வாரத்தில் ஒன்று அல்லது இரண்டு முறை இந்த மாதிரி உணவுகளை குறைந்த அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
பிஸ்கட், ரஸ்க் போன்ற முழு கோதுமை மாவில் தயாரிக்கப்பட்ட ஸ்னாக்ஸ்களையும் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு துண்டுகள் என்ற அளவில் நிறுத்திக்கொள்வது நன்று.
ஸ்பைசி ஸ்னாக்ஸ், சர்க்கரை அதிகம் சேர்த்த பேஸ்ட்ரீஸ் ஆகியவையும் தவிர்க்கப்பட வேண்டியவையே. இரும்புச் சத்து அதிகம் உள்ள உணவுகளை டீயுடன் எடுத்துக் கொள்வதும் நல்லதல்ல. ஏனெனில், டீயில் உள்ள டேனின்(tannin) என்ற கூட்டுப்பொருள் இரும்புச் சத்து உடலுக்குள் உறிஞ்சப்படுவதை தடுக்கும் குணம் கொண்டது.
காபி மற்றும் டீ யுடன் சேர்த்து உண்ண பரிந்துரைக்கப் பட்டிருக்கும் ஆரோக்கியம் நிறைந்த ஸ்னாக்ஸ்களை குறைந்த அளவில் உட்கொள்வதே உடம்புக்கு நல்லது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)