
தற்காலத்தில் உறவினர்கள், நண்பர்கள் என யார் வீட்டிற்குப் போனாலும் அங்கே அவர்கள் வீட்டுத் தொலைக்காட்சி எதையாவது பேசிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருப்பதைக் காண முடிகிறது. அதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை யாராவது பார்க்கிறார்களா என்றால் அதுவும் இல்லை என்றே சொல்லலாம். ஆளாளுக்கு ஒருபுறம் சோபாவில் உட்கார்ந்து கைப்பேசியை வைத்துக்கொண்டு ஸ்டேட்டஸ் பார்ப்பதும், வாட்ஸ் அப் தகவல்களை யாருக்காவது பார்வேர்ட் செய்வது, யுடியூப் மற்றும் ஃபேஸ்புக் பார்ப்பது என பிஸியாக இருக்கிறார்கள்.
பலர் சாப்பிடும்போது கூட தொலைக்காட்சியை பார்த்தவாறோ, கைப்பேசியை கையில் வைத்துப் பார்த்துக்கொண்டேதான் சாப்பிடுகிறார்கள். வீட்டிற்கு வரும் உறவினர்கள் நண்பர்களை வாங்க என்று அன்பாகக் கூப்பிடுவது கூட இல்லை. வந்த விருந்தினர்களிடம் பேசும்போது அவர்களின் முகத்தைப் பார்க்காமலேயே ஒரு ரோபோவைப் போலவே உரையாடுகிறார்கள்.
தற்காலத்தில் வீட்டிற்கு வரும் விருந்தினர்கள் தர்மசங்கடமாக உணர்ந்து மன வருத்தத்துடன் புறப்பட்டுச் செல்லவேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது என்று ஆராய்வதை விட, இத்தகைய நிலைமை இனி ஏற்படாதவாறு இருக்க என்ன செய்யலாம் என்று யோசிக்க வேண்டும். இந்த சூழ்நிலையை மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்புபவராக இருந்தால் உங்கள் பிள்ளைகளுக்கு உபசரிப்பின் அருமைகளைக் கற்றுக்கொடுங்கள்.
வீட்டிற்கு விருந்தினர் யாராவது வந்தால், “வாங்க வணக்கம் உட்காருங்க” என்று விருந்தினர்களை உபசரிக்கும் வழக்கத்தை உங்கள் பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும். வந்தவர்களுக்கு முதலில் தண்ணீர் கொடுத்து உபசரிக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். இதன் மூலம் வந்தவர்கள் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள ஏதுவாகும்.
யாராவது வீட்டிற்கு வந்தால் நீங்கள் முதலில் தொலைக்காட்சியை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். தொலைக்காட்சியில் இருபத்தி நான்கு மணி நேரமும் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகிக்கொண்டேதான் இருக்கின்றன. அரை மணி நேரம் அதை அணைத்து வைப்பதால் ஒன்றும் ஆகிவிடப் போவதில்லை. இதைப் பார்க்கும் பிள்ளைகளும் பிற்காலத்தில் இந்த வழக்கத்தைக் கடைபிடிப்பார்கள்.
விருந்தினர்களுக்கு சாப்பிட ஏதாவது கொடுத்து அவர்களை உபசரிப்பதுதான் முறை. வீட்டில் ஏதும் இல்லை என்றால் குறைந்தபட்சம் பிஸ்கட் முதலான எளிமையான தின்பண்டங்களைத் தரலாம். இதை உங்கள் பிள்ளைகளிடம் கொடுத்து விருந்தினர்களை உபசரிக்கச் செய்யலாம். வந்தவர்களுக்கு ஏதாவது சாப்பிடக் கொடுத்து உபசரிக்க வேண்டும் என்ற பண்பை இதன் மூலம் உங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்ளுவார்கள்.
வந்தவர் இதுவரை உங்கள் வீட்டிற்கு வராத புதிய நண்பராக இருந்தால் அவரை உங்கள் பிள்ளைகளுக்கு அறிமுகம் செய்து வைக்க வேண்டும். உறவினர்களாக இருந்தால் அவர்கள் உங்கள் பிள்ளைகளுக்கு என்ன உறவு முறை என்பதை அவர்களுக்குப் புரிய வைக்க வேண்டும். உறவு முறையைச் சொல்லி அழைக்கும் வழக்கத்தைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
நீங்கள் உங்கள் உறவினர்கள் அல்லது நண்பர்களிடம் கலகலப்பாகப் பேச வேண்டும். அதைப் பார்க்கும் உங்கள் பிள்ளைகளும் இதைப் பின்பற்றுவார்கள். விருந்தினர்கள் புறப்படும்போது சேரில் உட்கார்ந்தபடியே, “போயிட்டு வாங்க” என்று விடைகொடுக்காமல் எழுந்து வீட்டின் வாசல் வரை சென்று கைகூப்பி வழியனுப்பி வைக்கும் வழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும். அப்படி விடை கொடுக்கும்போது “நேரம் கிடைக்கும்போது வீட்டிற்கு வாங்க” என்று சொல்லி விடை கொடுக்க வேண்டும்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் உங்கள் பிள்ளைகளை உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீட்டிற்குச் செல்லும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இரு தரப்பினரும் வந்து உரையாடிவிட்டுச் செல்லும்போதுதான் உறவும் நட்பும் பலப்படும் என்பதை உங்கள் பிள்ளைகள் புரிந்து கொள்ளும்படி செய்ய வேண்டும்.
விருந்தினர்களை உபசரிப்பது என்பது ஒரு மாபெரும் பண்பு. வீட்டிற்கு வரும் உறவினர்கள் மற்றும் நண்பர்களை உபசரிப்பது என்பது ஒரு மரபு. விருந்தோம்பல் என்பது தமிழர்களின் நெடுநாளைய பாரம்பரியம். இதை அடுத்த தலைமுறையினருக்குக் கற்றுக் கொடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.