இந்திய சமையலில் வெங்காயம் ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. பலர் இதை பச்சையாகவே உண்கிறார்கள். வெங்காயத்தை பச்சையாக உண்பதால் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. அதைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. அதில் சின்ன வெங்காயம்தான் பெரிய வெங்காயத்தை விட சத்துக்கள் நிறைந்தது. அதைத்தான் பச்சையாக உண்ண வேண்டும். இதில் வைட்டமின்கள், தாதுக்கள், நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் வைட்டமின் சி, வைட்டமின் பி 6, பொட்டாசியம், மாங்கனீசு மற்றும் தாமிர சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை ஆரோக்கியத்துக்கு மிகவும் நன்மை பயக்கும்.
1. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது: குளிர்காலத்தில் தொற்று நோய்களான சளி, காய்ச்சல், இருமல் போன்றவை மக்களிடையே அதிகமாகப் பரவும். பச்சை வெங்காயத்தில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து வைரஸ்களை எதிர்த்துப் போராட உதவுகிறது. இதனால் சளி, காய்ச்சல், இருமலிலிருந்து பாதுகாக்கிறது. இருமலுக்கு வெங்காயத்தை வதக்கி வெல்லம் கலந்து சாப்பிடலாம்.
2. இரத்த சர்க்கரையை கட்டுக்குள் வைக்கிறது: வெங்காயத்தில் கிளைசெமிக் அளவு குறைவாக உள்ளது. இது நீரிழிவு மற்றும் பிரீ டயாபட்டீஸ் உள்ளவர்களுக்கு நன்மை பயக்கும். இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் அதன் அளவு உயர்வதை தடுக்கவும் உதவுகிறது.
3. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: வெங்காயத்தில் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்கவும் உதவுகிறது. மேலும், கெட்ட கொழுப்பை குறைப்பதில் வெங்காயம் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே, மாரடைப்பு மற்றும் இதய நோயின் அபாயத்தைக் குறைக்கிறது.
4. பளபளப்பான சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியம் தருகிறது: தினமும் ஒன்று, இரண்டு பச்சை வெங்காயத்தை உண்டு வந்தால் சருமம் பளபளப்பாக இருக்கும். தலை முடியும் ஆரோக்கியமாக இருக்கும். இதில் உள்ள இரும்புச்சத்து முடி உதிர்தலை குறைத்து நன்கு வளரச் செய்யும். வெங்காயத்தை அரைத்து சாறெடுத்து முடியில் தடவினாலும் முடி உதிர்வுப் பிரச்னை நின்று முடி நன்கு வளரும்.
5. மூல நோய்க்கு கண்கண்ட மருந்து: சிலருக்கு மலச்சிக்கல் பிரச்னையால் மூல நோய் கண்டு மிகுந்த அவதிப்படுவார்கள். அவர்கள் தினமும் பச்சை வெங்காயத்தை உண்டு வரலாம். இதனால் நல்ல தீர்வு கிடைக்கும். 50 கிராம் வெங்காயத்தை சாறு எடுத்து தண்ணீர் சேர்த்து அதனுடன் சர்க்கரை சேர்த்து அருந்தி வந்தால் சில நாட்களிலேயே மூல நோய் குணமாகும்.
பிற பயன்கள்: இது நுரையீரலுக்கு நல்ல பலம் தருகிறது. சுவாசப் பிரச்னைகளை சீராக்குகிறது. தலை வலியால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை அரைத்து பற்று போட்டால் நல்ல தீர்வு கிடைக்கும். வெட்டுக்காயம் ஏற்பட்டால் வெங்காயத்தை வதக்கி காயத்தில் வைத்து வந்தால் சரியாகும். முகப்பரு உள்ள இடத்தில் வெங்காயத்தைத் தேய்த்தால் முகப்பரு நீங்கும் .விஷ ஜந்துக்கள் கடித்துவிட்டால் வெங்காயத்தை நசுக்கி தேய்த்தாலும் விஷம் இறங்கும்.