மொசாம்பி ஜூஸ் குடிப்பதால் இத்தனை ஆரோக்கிய நன்மைகளா?

மொசம்பி ஜூஸ்
மொசம்பி ஜூஸ்https://www.quora.com

கோடை வெயிலுக்கு இதமாக நாம் அருந்தக்கூடிய பலன் தரும் பல வகை பழ ஜூஸ்களில் மொசாம்பி (Mozambique)யும் ஒன்று. இதை தமிழில் சாத்துக்குடி என்று கூறுகிறோம். இதை நாம் அடிக்கடி குடித்து வரும்போது பலவிதமான ஆரோக்கிய நன்மைகள் நம் உடலுக்குக் கிடைக்கின்றன. அவை என்னென்ன என்பதை இந்தப் பதிவில் காண்போம்.

மொசாம்பி ஜூஸில் வைட்டமின் C அதிகளவில் நிறைந்துள்ளது. இது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க பெரிதும் உதவக் கூடியது. இதனால் நம் உடலுக்குள் தொற்று நோய்க் கிருமிகள் ஊடுருவிப் பரவுவதைத் தடுக்க முடியும்; நோய்களையும் விரைவில் குணப்படுத்த முடியும்.

மொசாம்பியில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளது. இது கோடை வெப்பக் காலத்தில் உடலுக்குத் தேவையான நீர்ச்சத்தை சமநிலையில் வைத்துப் பாராமரிக்க உதவுகிறது. இதனால் உடலின் அனைத்து இயக்கங்களும் சரிவர நடைபெறவும் உடலின் உஷ்ண நிலை அதிகரிக்காமல் சமநிலையில் வைத்துப் பாதுகாக்கவும் முடியும்.

மொசாம்பி ஜூஸ் சீரான செரிமானத்துக்கு உதவுகிறது; வயிற்றில் ஏற்படும் வீக்கம், அஜீரணம் போன்ற கோளாறுகள் நீங்க உதவுகிறது; மலச்சிக்கல் உண்டாகாமலும் பாதுகாக்கும்.

மொசாம்பி ஜூஸில் ஃபிளவனாய்ட் மற்றும் லிமோனாய்ட் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இவை உடலில் ஃபிரிரேடிக்கல்களின் அளவை சமநிலைப்படுத்தி உடலைப் பாதுகாக்க உதவுகின்றன. மேலும், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ் மூலம் உண்டாகும் செல் சிதைவைத் தடுக்கின்றன. இதனால் உடலில் வீக்கங்கள் ஏற்படுவதும் அதைத் தொடர்ந்து இதய நோய், கேன்சர், நீரிழிவு நோய் போன்ற நாள்பட்ட வியாதிகள் வரும் அபாயமும் தடுக்கப்படுகின்றன.

மொசாம்பி ஜூஸில் உள்ள வைட்டமின் C மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் ஆரோக்கியமான சருமம் பெறவும் உதவுகின்றன. வைட்டமின் C கொலாஜன் உற்பத்தி அதிகரிக்க உதவுகிறது. இதனால் சருமத்தின் நெகிழ்வுத் தன்மையும் உறுதியும் மேன்மை அடைகிறது. இந்த ஜூஸை தொடர்ந்து அருந்தி வருவதனால் சரும சுருக்கங்கள் குறையும்; கறைகள் மறையும்; மூப்படைந்த தோற்றத்திற்கான அறிகுறிகள் நீங்கும்.

இதையும் படியுங்கள்:
வீட்டில் எப்போதும் லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க இதை செய்தாலே போதுமே!
மொசம்பி ஜூஸ்

மொசாம்பி ஜூஸ் ஓர் இயற்கை நச்சு நீக்கியாகவும் செயல்படுகிறது. இது கல்லீரலையும் கிட்னியையும் சுத்தப்படுத்தி, உடம்பில் சேரும் நச்சுக்கள் நல்ல முறையில் வெளியேற உதவி புரிகிறது. மொசாம்பியிலுள்ள சிட்ரிக் ஆசிட் கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்தவும், பித்த நீர் சுரப்பை அதிகரிக்கவும் உதவுகிறது. இதனால் செரிமானம் சீராகி கழிவுகள் நல்ல முறையில் வெளியேற்றப்படுகின்றன.

மொசாம்பியில் கலோரி அளவும் கொழுப்புச் சத்தும் குறைவு. நார்ச்சத்து அதிகம். இதனால் பசியுணர்வு ஏற்படுவதில் தாமதம் உண்டாகி உட்கொள்ளும் உணவின் அளவு குறைகிறது. இது உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க உதவுகிறது.

இத்தனை நன்மைகளை உள்ளடக்கிய மொசாம்பி, மற்ற பழங்களை ஒப்பிடும்போது, விலை குறைவாகவும் உள்ளது. இதை அனைவரும் அடிக்கடி உட்கொண்டு உடல் ஆரோக்கிய மேன்மை அடைவோம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com