உடல் உழைப்பும் உணவுக் கட்டுப்பாடும் இல்லாத இக்காலத்தில் பெரும்பாலான நபர்கள் நோய்களின் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். அதிலும் நீரிழிவு நோய் என்பது தற்போது அனைவரிடத்தும் பொதுவாகக் காணப்படும் ஒரு பாதிப்பாக இருந்து வருகிறது. அத்துடன் சுகாதாரமற்ற துரித உணவுகளால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் போன்றவற்றின் விளைவுகளாக திடீர் மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல பாதிப்புகள் ஏற்படுவதைக் காண்கிறோம்.
இந்த பாதிப்புகளுக்கு நாம் தேடிப்போவது பெரும்பாலும் ஆங்கில மருத்துவத்தையே. ஆனால், பாரம்பரியமிக்க மருத்துவ முறைகளான ஆயுர்வேதமும், சித்த மருத்துவமும் சிறந்த மூலிகைகளை வைத்து பல்வேறு சிகிச்சைகளை அளிக்கின்றன. இயற்கையாகக் கிடைக்கும் மூலிகைகளால் நமக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.
அதில் ஒன்றுதான் Gymnema Sylvestre என்னும் சிறுகுறிஞ்சான் மூலிகை. இது ஆயுர்வேத மருத்துவத்தில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும், குறிப்பாக மலேரியா, நீரிழிவு போன்றவற்றுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது. சர்க்கரைக்கொல்லி என்று செல்லமாக அழைக்கப்படும் சிறுகுறிஞ்சானின் இலை சிறியதாகவும் முனை கூர்மையாக மிளகாய் போன்றும் காணப்படும்.
இதன் கூறுகளில் ஜிம்னிமிக் எனும் அமிலம் உள்ளதால் இது இனிப்பை அடக்கச் செய்கிறது. சர்க்கரை உணவுகள் உண்பதற்கு முன்பு இதை எடுக்கும்போது நாவில் உள்ள சுவை மொட்டுகளின் ஏற்கும் தன்மையைத் தடுத்து ருசிக்கும் திறனை குறைப்பதால் இனிப்பு உணவுகளின் மீதான ஈர்ப்புத்தன்மையை குறைப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. கணைய செல்களுக்குப் புத்துயிரும், புத்துணர்வும் அளித்து, இன்சுலின் சுரப்பை மேம்படுத்துவதன் மூலம் இம்மூலிகை, நீரிழிவை படிப்படியாகக் கட்டுக்குள் கொண்டு வர உதவுகிறது. மேலும், சர்க்கரையை உறிஞ்சுவதால் உணவுக்குப் பின்னான இரத்த சர்க்கரை அளவை குறைக்கும் வாய்ப்பு உண்டு. என்றாலும் மருத்துவக் கண்காணிப்பு அவசியம்.
மேலும், சிறுகுறிஞ்சான் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகள் மற்றும் ட்ரைகிளிசரைடுகள் அளவுகளைக் குறைக்க உதவும். சிறுகுறிஞ்சானை கஷாயமாகவோ பொடியாகவோ தகுந்த மருத்துவ நிபுணர் உதவியுடன் எடுக்கும்போது நமக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.
இந்த மூலிகை உடல் சூடு தணிய பெருமளவில் உதவும். கடுமையான காய்ச்சல் மற்றும் சளியால் பாதிக்கப்பட்டவர்கள் இந்தக் கீரையை கொதிக்க வைத்து வடிகட்டி அருந்தினால் வெப்பம் குறையும். எல்லாவிதமான விஷக் கடிக்கும் சிறுகுறிஞ்சான் கீரை கஷாயம் மற்றும் இலைகள் நிவாரணம் தருகிறது. மேலும், உடலில் உண்டாகும் சருமப் பிரச்னைகளுக்கு இதன் இலையை அரைத்து பூசி வர நிவாரணம் கிடைக்கும்.
இதன் கஷாயம் அருந்தினால் பசி உணர்வு தூண்டப் பெற்று, உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது. பெண்களின் மாதவிலக்கு பிரச்னை, சுவாசப் பிரச்னை போன்றவற்றுக்குத் தீர்வு தருகிறது. மேலும், நரம்புத்தளர்ச்சி போன்ற பாதிப்பு அகன்று நரம்பு மண்டலம் வலுவடையவும் இது ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
இத்தனை பலன்கள் தரும் சிறுகுறிஞ்சான் கீரையை வாரம் இரண்டு முறையாவது உணவில் சேர்த்துக் கொள்வோம்.