

நம் தினசரி சுகாதாரத்தில் பயன்படுத்தப்படும் சோப்புகளும், பாடி வாஷ்களும் வெறும் நம் விருப்பத்தைப் பொறுத்து தீர்மானிக்கக்கூடாது. சரும ஆரோக்கியத்திற்கும் (skin care) முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சோப்புகள் சபோனிஃபிகேஷன் (saponification) மூலம் தயாரிக்கப்படுகின்றன; இறுதியில் இது 9–11 pH கொண்ட அல்கலைன் சோப்புகளாக உருவாகிறது. இது சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றி, நமக்குத் தேவையான சரும அமில சமநிலையை (pH 4.5–5.5) சீர்குலைக்கக்கூடும்.
இதற்குமாறாக பாடி வாஷ்கள் நம் சருமத்தின் இயற்கையான அமிலத்தன்மைக்கு ஏற்றவாறு உருவாக்கப்படுகின்றன. அவை பெரும்பாலும் கிளிசரின், ஹைலூரோனிக் (hyaluronic) அமிலம் அல்லது நியாசினமைடு போன்ற ஈரப்பதமூட்டும் பொருட்களால் உருவாக்கப்படுகின்றன. இதனால் அவை மிகவும் மென்மையாகவும், சருமத்திற்குப் பாதுகாப்பானதாகவும் அமைகின்றன.
வயது சார்ந்த பரிசீலனைகள்:
பதின்ம வயதினர் முதல் முதியவர்கள் (15–90 வயது) வரை தங்கள் உடலைச் சுத்தப்படுத்தும் பொருளைத் தேர்ந்தெடுக்கும்போது வயதை மட்டும் கருத்தில்கொள்ளாமல்; அவரவரின் சருமத்தின் நிலையைப் புரிந்துகொண்டு தேர்ந்தெடுக்க வேண்டும்.
எண்ணெய் பசை சருமம் அல்லது முகப்பரு பாதிப்புள்ள இளம் வயதினருக்கு, வேம்பு அல்லது தேயிலை மரம் அடங்கிய பாக்டீரியா எதிர்ப்பு அல்லது மூலிகை சோப்புகள் பயன் அளிக்கலாம்.
வறண்ட அல்லது சென்சிடிவ் சருமம் உள்ள நடுத்தர வயதினருக்கு சல்பேட்டுகள், நறுமணங்கள் இல்லாத பாடி வாஷ்கள் மிகவும் பொருத்தமானதாக இருக்கலாம்.
மெல்லியதாகவும், வறண்டதாகவும் காணப்படும் வயதானவர்களின் சருமம் செராமைடுகள் (ceramides) அல்லது பாதாம் எண்ணெய் கொண்ட ஈரப்பதமூட்டும் பாடி வாஷ்களுக்குப் பொருந்தும்.
காலநிலை மற்றும் பிராந்திய வேறுபாடுகள் இதற்குப் பொருந்துமா?
குளிக்கும் பொருட்களைத் தேர்ந்தெடுப்பதில் காலநிலை ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இந்தியக் கோடைக் காலம், ஈரப்பதமான பருவமழைக் காலங்களில், வியர்வை, ஈரப்பதக் காரணங்களால் தொற்றுகளின் அபாயம் அதிகரிக்கின்றன.
அந்நேரங்களில் பாக்டீரியா எதிர்ப்பு சோப்புகள் அல்லது ஆன்டிசெப்டிக் பாடி வாஷ்கள் பயனுள்ளதாக அமைகின்றன. குளிர்காலத்தில் எண்ணெய்கள் (added oils) அல்லது ஷியா வெண்ணெய் சேர்க்கப்பட்ட பாடி வாஷ்கள் சரும வறட்சியைத் தடுக்க உதவுகின்றன.
டெல்லி, பெங்களூரு போன்ற இந்திய மெட்ரோ நகரங்களில் பொதுவாகக் காணப்படும் கடின நீர் (Hard water), சோப்புடன் பயன்படுத்தக்கூடாது. இது குளித்தப் பின்பும் சருமத்தில் சோப்பின் எச்சத்தை விட்டுச் செல்கிறது. ஆனால் பாடி வாஷ் இந்த பகுதிகளில் சருமத்திற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இதற்கு மாறாக மென்மையான நீர் (Soft water) உள்ள நாடுகளில் இந்த வேறுபாடுகள் ஏற்படாமல் இருக்கலாம். இதனால் அங்கெல்லாம் சோப்பை தாராளமாகப் பயன்படுத்தலாம்.
எது 100% சுத்தம் தரும்?
ஆக, என்னதான் பல பொருட்களை பயன்படுத்தினாலும் ‘100% சுத்தம்’ என்று உறுதிசெய்யும் ‘ஒரு பொருள்’ என்று எதுவும் இல்லை. சோப்பு என்பது மலிவு விலை, சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை மற்றும் சிறந்த சுத்திகரிப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்குகிறது. அதேசமயம் பாடி வாஷ் சிறப்பான ஈரப்பதம், pH சமநிலை மற்றும் அனைத்து தட்பவெப்ப நிலைகளுக்கும், வயதுக்குமான பன்முகப் பயன்பாட்டை வழங்குகிறது. எனவே, அன்றாடக் குளியலுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட சிண்டெட் பார் (syndet bar) சோப்புகளையும், குறிப்பிட்ட ஈரப்பதத்திற்குப் பாடி வாஷையும் பயன்படுத்தும் ஒரு கலப்பு அணுகுமுறையே மிகவும் சமச்சீரான தீர்வாக அமையலாம்.
அதோடு சிறந்தத் தேர்வு என்பது தனிநபரின் சரும வகை, உள்ளூர் நீரின் தரம் மற்றும் பருவக்கால நிலைமைகளைப் பொறுத்து அமைகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)