

‘மனிதர்கள் தூங்குவதைப் போல் மிருகங்களும் பறவைகளும் தூங்குமா?’ என்று பலரும் நினைப்பதுண்டு. நாம் வீட்டு விலங்குகள் தூங்குவதை கவனித்திருப்போம். சில வகை விலங்குகளும் பறவைகளும் தூங்கும் விதம் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
கோழி தூக்கத்திற்குப் பெயர் போனது. சட்டென்று தூங்கி விழிப்பவர்களை, ‘கோழித் தூக்கமா?’ என்று கிண்டலாகக் கூறுவதுண்டு. குஞ்சுகளின் பாதுகாப்புக்கு பெயர் போன கோழி உட்கார்ந்த வண்ணம் கண்களை மூடி குரல்வளையை உடலோடு தாழ்த்தி வைத்துக்கொண்டு உறங்கும். லேசான சத்தம் கேட்டாலும் சட்டென்று விழிக்கும். இறகுகளில் குஞ்சுகளைப் பாதுகாக்கும்பொழுது சிறு சத்தம் கேட்டாலும் விழித்து விடும். ஆதலால் ஆழ்ந்த தூக்கம் என்பது கோழிகளுக்குக் கிடையாது.
குறும்புத் தனத்திற்குப் பெயர்போன ராக்கூன் என்னும் ஒரு வகை கீரிப்பிள்ளை போன்ற பிராணி சுவாரஸ்யமாக குறட்டை ஒளியுடன் நிம்மதியாக உறங்குகிறது. அத்துடன் மனிதரைப் போல் பிராணிகள் கனவும் காண்கின்றன என தூங்கும்போது இவற்றின் உடல் அசைவைக் கொண்டு விஞ்ஞானிகள் கருத்து வெளியிட்டு இருக்கிறார்கள்.
யானை மற்றும் குதிரை போன்ற விலங்குகள் தூங்கும்போது படுப்பதே இல்லை. நின்றுகொண்டே தூங்கும். யானை தூங்கும்போது அதன் எடை முழுவதையும் ஒவ்வொரு காலுக்கும் மாற்றி மாற்றி வைத்துக் கொள்ளுமாம். குதிரை அப்படி செய்வதில்லை. சில வகை மான்கள் தூங்கும்போது சுவாச சக்தியின் மூலம் பகை விலங்குகளின் நடமாட்டத்தை உணரும் அற்புத சக்தி கொண்டவைகளாக இருப்பதாகக் கூறுகின்றனர்.
நாய், பூனை போன்ற வீட்டு விலங்குகள் தூங்கும்போது உடம்பை சுருட்டி கொண்டு தலையை உடலின் உள்பதித்தவாறு தூங்கும். இதனால் உடலின் வெப்பம் சமச்சீராக காப்பாற்றப்படுகிறது என்கின்றனர். ஆடு, மாடு, மான் போன்றவை நான்கு கால்களையும் மடித்து தலையை உடலின் மேல் பாகத்தில் வைத்துத் தூங்குவதைக் கவனித்து இருக்கிறோம். ஈ, கொசு போன்றவை அதன் மீது வந்தால் தலையை ஆட்டி விரட்டும்.
பாம்பு வகையைச் சேர்ந்தவை அனைத்தும் தூங்கும்போது கண்களைத் திறந்துக் கொண்டு, உடலை ஸ்பிரிங் போல சுருட்டிக் கொண்டு தூங்கும். வாத்து தரையில் நின்று கொண்டும் தண்ணீரில் ஓய்வாக நீந்தியவாறும் தூங்கும். எறும்புகள் 3 மணி நேரம் உறங்கும் தன்மை உடையது. அவை கால்களை உடலுடன் அழுத்தி வைத்துக்கொண்டு, மண்ணில் ஏற்படுத்தி வைத்திருக்கும் மணற்படுக்கையில் ஒய்யார தூக்கம் போடுகிறது.
பறவை இனங்களில் ஆந்தை மாத்திரம் பகலில் தூங்கி, இரவில் இரை தேடும் பணியைத் தொடர்கிறது. பெரும்பாலான பறவைகள் பகலில் விழித்து இரவில் உறங்குவதை வழக்கமாக வைத்திருக்கின்றன.