இன்றைய காலத்தில் தூக்கமின்மை பிரச்சனை அதிகரித்துவிட்டது. அதுவும் பலர் இப்போதெல்லாம் அதிகமாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதால், தூக்கத்தின் தரம் மோசமாகிவிட்டது. தரமான தூக்கம், உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானது. தூக்குமின்மை பல உடல்நலப் பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். இதற்கு தீர்வாக, இயற்கையாகவே கிடைக்கும் சில பொருட்களை பயன்படுத்தி, தூக்கத்தை தூண்ட முடியும். அவற்றுள் சில அற்புத பானங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
இரவில் தூக்கத்தை தூண்டும் சில அற்புதமானங்கள்:
வெந்நீர்: இரவில் தூங்குவதற்கு முன் வெந்நீர் குடிப்பது தூக்கத்தைத் தூண்டும் ஒரு எளிதான வழியாகும். வெந்நீர் உடலை இளகச் செய்து மனதை அமைதிப்படுத்தும். இது தூக்கத்துக்குத் தேவையான உடல் வெப்பநிலையை சமன் செய்ய உதவும். வெந்நீரில் கொஞ்சம் தேன் அல்லது இஞ்சி சேர்த்து குடித்தால் மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.
பால்: பால் ஒரு இயற்கையான தூக்க மாத்திரை. இரவில் பால் குடிப்பது மனதிற்கு இதமளித்து தூக்கத்தை வர வைக்கும். பாலில் சிறிதளவு முந்திரி, ஏலக்காய் சேர்த்து குடித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
லாவண்டர் தேநீர்: லாவண்டர் சேர்த்து தயாரிக்கப்படும் தேநீர் மனதை அமைதிப்படுத்தி, தூக்கத்தைத் தூண்டும் பண்புகளைக் கொண்டுள்ளது. இது மன அழுத்தத்தைக் குறைத்து தலைவலியை போக்கும் தன்மை கொண்டது. இது தூக்கமின்மை மற்றும் பதட்டத்திற்கு ஒரு சிறந்த தீர்வைக் கொடுக்கும்.
வாழைப்பழ மில்க் ஷேக்: வாழைப்பழத்தில் திரிப்டோபன் என்ற அமினோ அமிலம் உள்ளது. இது செரட்டோனின் மற்றும் மெலடோனின் என்ற தூக்க ஹார்மோன்களைத் தூண்டி விரைவாக தூக்கம் உண்டாக வழிவகுக்கும். வாழைப்பழ மில்க் ஷேக் குடிப்பது மனதை இளக்கச் செய்து, தரமான தூக்கத்தை வர வைக்கும்.
செர்ரி ஜூஸ்: செர்ரி பழ ஜூஸ் மெலடோனின் என்ற தூக்க ஹார்மோனை அதிகரிக்கச் செய்யும். இது உடலில் பயாலஜிக்கல் கடிகாரத்தை சரி செய்து, தூக்கத்தை ஒழுங்குபடுத்தும். தூக்கமின்மை மற்றும் ஜெட்லேக் பிரச்சனை இருப்பவர்கள் ஜெர்ரி ஜூஸ் குடிப்பது நல்லது.
இந்த இயற்கை பானங்கள் உங்களுக்கு தூக்கத்தை வரவைத்து தரமான தூக்க அனுபவத்தை அளிக்கும். இவற்றை தினமும் படுக்கைக்கு செல்வதற்கு முன் குடிப்பதால் நல்ல பலன் கிடைக்கும். இருப்பினும் நீண்ட காலமாக தூக்கமின்மை பிரச்சனையால் நீங்கள் அவதிப்பட்டு வந்தால், மருத்துவரை அணுகுவது நல்லது.