நமது உடலின் செயல்பாட்டுக்கு தண்ணீர் மிகவும் முக்கியம். தினமும் உடலுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் போகும்போது, சிறுநீரகச் செயல்பாட்டில் பிரச்னைகள் ஏற்பட வழிவகுக்கும். இதுவே சிறுநீரகக் கற்கள் உருவாகக் காரணமாக அமைகிறது.
அதிக அளவு தண்ணீர் அருந்துவதும், கல் அடைப்பு உருவாகாமல் தடுக்கும் சத்தான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் சிறுநீரகத்தில் கல் உண்டாவதை தடுக்கலாம். சிறுநீரகக் கற்களில் கால்சியம் கற்கள் மற்றும் ஆக்ஸலேட் கற்கள் என இரு வகை உண்டு. அவற்றில் எந்த வகைக் கற்கள் வந்திருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டு அதற்கேற்ப திரவ உணவு அதிகமாக, திட உணவுகளை சாப்பிட பலன் கிடைக்கும். மூன்று லிட்டர் தண்ணீர், பால், மோர், ஜுஸ், சூப் குடிப்பது நல்லது. எடை அதிகமாக இருந்தால் குறைக்க வேண்டும்.
ஆக்ஸலேட் கல் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்: ஆக்ஸலேட் வகைக் கற்கள் உள்ளவர்கள் இறைச்சி, மீன் போன்றவற்றை சாப்பிடலாம். எல்லா வகை காய்கறிகள், நீர்ச்சத்து அதிகம் உள்ள காய்கள், பழங்களை சாப்பிடலாம்.
சோயா தயாரிப்புகள் மற்றும் கோகோ, சாக்லெட், பிளாக் டீ இவற்றை தவிர்க்க வேண்டும். ஸ்ட்ராபெர்ரி, ராஸ்பெர்ரி வகைப் பழங்களைத் தவிர்க்க வேண்டும். ஸ்பினாச் எனப்படும் பசலைக்கீரையையும் தவிர்ப்பது நல்லது.
கால்சியம் கல் இருப்பவர்களுக்கான உணவுப் பட்டியல்: பூசணிக்காய், வெள்ளரிக்காய், சுரைக்காய், சௌசௌ, பீர்க்கங்காய் போன்ற நீர்ச்சத்து உடைய காய்கறிகள் சூப், சாலட், பொரியல் போன்றவற்றைச் சாப்பிடலாம். தக்காளி, வெண்டைக்காய் ஆகியவற்றை தாராளமாக சாப்பிடலாம். அத்திப்பழம், விளாம்பழம் தவிர, எல்லா வகைப் பழங்களையும் உண்ணலாம்.
அசைவ உணவில் நண்டு தவிர, மற்ற அனைத்து இறைச்சி மற்றும் மீன் வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். அனைத்து தானிய வகைகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. பாலில் அதிக கால்சியம் இருப்பதால் குறைந்த அளவில் எடுத்துக் கொள்வது நல்லது. வாரம் ஒரு முறை கால்சியம் செறிந்த கேழ்வரகு, கீரை, கிழங்கு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம். அதேபோல், கால்சியம் அதிகம் உள்ள உணவுகளைத் தவிர்த்தல் நல்லது.