
உமிழ்நீர் என்பது நமது வாயில் உள்ள உமிழ்நீர் சுரப்பிகளால் உற்பத்தி செய்யப்படும் ஒரு தெளிவான நீர் நிறைந்த திரவமாகும். நமது வாய் ஆரோக்கியம் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் இது முக்கிய பங்கு வகிக்கிறது. உமிழ்நீரின் சில முக்கிய பயன்பாடுகள் இங்கே:
உமிழ்நீரில் அமிலேஸ் போன்ற நொதிகள் உள்ளதால் உணவாக நாம் உள்ளே தள்ளும் கார்போஹைட்ரேட்டுகளை எளிய சர்க்கரைகளாக மாற்றி செரிமானத்தை எளிதாக்குகிறது.
வறட்சி தன்மை கொண்ட உணவை ஈரப்படுத்தவும் மென்மையாக்கவும் செய்வதால் மெல்லவும் விழுங்கவும் எளிதாகிறது.
மேலும் உமிழ்நீர் புரதங்கள் மற்றும் கொழுப்புகளை கிரகிக்க உதவுகிறது. இதனால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை எளிதாக உறிஞ்சுகிறது.
செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துகளைப் பெற உதவும் உமிழ்நீர், வாய்வழி ஆரோக்கியம் காக்க பெரிதும் பயன்படுகிறது. வாயில் உள்ள பாக்டீரியாக்கள், உணவுத் துகள்கள் மற்றும் பிற கழிவுகளைக் கழுவ உதவி வாயை சுத்தப்படுத்துகிறது.
சுரக்கும் அமிலங்களை நடுநிலையாக்கி வாயில் pH சமநிலையை பராமரிக்க உதவுகிறது. இதில் உள்ள கால்சியம் மற்றும் பாஸ்பேட் போன்ற தாதுக்கள் பற்களை மீளுருவாக்கம் செய்கின்றன. பாதிக்கப்பட்ட பற்கள் மற்றும் பற்சிப்பியை மீட்டெடுக்கவும் வலுப்படுத்தவும் உதவுகின்றன.
மேலும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகளுடன் பாக்டீரியா மற்றும் பிற நுண்ணுயிரிகளுக்கு எதிராக போராட உதவும் ஆன்டிபாடிகள் மற்றும் என்சைம்கள் உள்ளன. இதில் வளர்ச்சி காரணிகள் மற்றும் காயம் குணப்படுத்துவதை ஊக்குவிக்கும் பிற புரதங்கள் உள்ளதால் காயங்களை குணப்படுத்த உதவும். குறிப்பாக மியூகோசல் பாதுகாப்பு எனப்படும் வாய் மற்றும் தொண்டையில் உள்ள சளி சவ்வுகளை எரிச்சல் மற்றும் தொற்றுநோயிலிருந்து பாதுகாக்க உதவுகிறது
உணவை ருசித்து உண்ண உமிழ்நீரே காரணமாகிறது. சுவை மூலக்கூறுகளை கரைப்பதன் மூலம் உணவின் சுவையை அனுபவிக்க அனுமதிக்கிறது.
குரல் நாண்களை ஈரப்படுத்தி நமது பேசும் திறனை ஊக்குவிக்கிறது.
தற்போது அதிகரித்து விட்ட நீரிழிவு பாதிப்பைத் தடுக்க உதவுகிறது. உமிழ்நீர் என்ற மருத்துவ கருத்தும் உண்டு. நீரிழிவிற்கு காரணமான இன்சுலின் சுரப்புக்கு கணையத்திலிருந்து இன்சுலினைச் சுரக்கத் தூண்டும் இயற்கை மருந்தாக நமக்குள்ளேயே உள்ளது உமிழ்நீர். தூண்டல், துலங்கல் என்ற விதியின் படி உமிழ்நீர் என்ற தூண்டுதலால் இன்சுலின் என்ற துலங்கல் சுரக்கப்படுகிறது என்கின்றன குறிப்புகள்.
மருத்துவர்கள் உமிழ்நீர் சுரக்குமாறு உணவை மெதுவாக மென்று உண்ணச் சொல்லும் காரணம் இதுதான். நீரிழிவு மட்டுமல்ல வாய்வழி ஆரோக்கியம் பராமரிப்பு, சீரான செரிமானம், தொற்று மற்றும் நோயிலிருந்து நம்மைப் பாதுகாப்பது என நம்மை பாதுகாக்கும் அரணாக உள்ளது உமிழ்நீர்.