
நம் முன்னோர்கள் கூறிய உடல் நலத்தை பேணுவதற்கான வழிமுறைகளையும், ஆரோக்கியமான வாழ்க்கை பாடங்களையும் சில பழமொழிகள் அழகாக விளக்குகின்றன. ஆரோக்கியம் பற்றி சில அழகிய பழமொழிகள்.
1. சுத்தமான காற்று ஆயிரம் அவுன்ஸ் மருந்துக்கு சமம்- ஜப்பானிய பொன்மொழி
மாசுபடாத சுத்தமான காற்று சிறந்த மருந்துக்கு சமம்
2. சூரியன் போகாத இடத்திற்கு வைத்தியர் போகிறார் - இத்தாலிய பழமொழி
ஆரோக்கியமான வாழ்விற்கு சூரிய ஒளி அவசியம் என்பதை இப்பழமொழி வலியுறுத்துகிறது.
3. ஆற்று நீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இவை இரண்டையும் நீக்கும்.
ஆற்று நீரில் உள்ள தாது பொருட்கள் மற்றும் மூலிகை சத்துக்கள் வாத நோய் போக்கும் குணம் கொண்டது. அருவி நீர் மலைப்பகுதிகளில் இருந்து வருவதால், பித்த நோய்க்கு நன்மை பயக்கும் என்றும், உணவு நீர் வாதம், பித்தம் இரண்டையும் போக்கும் தன்மை கொண்டது என்று உணவின் முக்கியத்துவத்தையும், நோய்களை குணப்படுத்தும் ஆற்றலையும் குறிக்கிறது.
4. இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு
உடல் மெலிந்திருப்பவர்கள் அதாவது எடை குறைவாக இருப்பவர்கள் எள் உட்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும் என்றும், உடல் எடை அதிகமாக இருப்பவர்கள் கொள்ளு பயிரை உட்கொண்டு உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும் என்றும் கூறுகிறது.
5. தன் காயம் காக்க வெங்காயம் வேண்டும்
காயம் என்பது உடலைக் குறிக்கும். உடல் நலத்தை பாதுகாத்து ஆரோக்கியமாக வாழ்வதற்கு வெங்காயம் போன்ற உணவு பொருட்களை உட்கொள்வது அவசியம். வெங்காயம் பழைய காயங்களை ஆற்றும் தன்மை மற்றும் பல நோய்களை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டுள்ளது. உடல் நலத்தை சீராக வைத்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதாக இந்த பழமொழி அமைகிறது.
6. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்
உடல் மற்றும் மனதளவில் எந்தவிதமான நோய்களும் இல்லாமல் நலமாக வாழ்வதையே இது குறிக்கிறது. எந்தவிதமான நோயும் இன்றி ஆரோக்கியமாக இருப்பது தான் மிகச்சிறந்த செல்வம். அனைத்து செல்வங்களையும் பெற்றிருந்தாலும், உடல்நலம் இல்லையென்றால் எந்த நன்மையையும் அடைய முடியாது என்பதை இந்த பழமொழி அழகாக விளக்குகிறது.
அத்துடன் நம் திருவள்ளுவர்,
'யாக்கைக்கு அருந்தியது அற்றது போற்றி உணின்
மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு'
அதாவது உண்ணும் உணவு செரித்த பிறகு, அதை நன்கு உணர்ந்து உண்பவர்கள் உடலுக்கு மருந்து தேவைப்படாமல் நலமுடன் வாழலாம் என கூறுகிறார்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)