
நம் அனைவருக்கும் அடிக்கடி மனதில் எழக்கூடிய கேள்வி, ‘கர்மா என்பது உண்மை என்றால், கெட்டவர்கள் ஏன் தொடர் வெற்றிகளைப் பெறுகிறார்கள்? ஒருவர் செய்த பாவங்கள், அவரை எவ்வாறு தண்டிக்காமல் உள்ளது. அவர் மிகவும் நன்றாக, மகிழ்ச்சியாக இருக்கிறாரே, எப்போதும் நல்ல செயல்களைச் செய்தும், புண்ணியங்கள் சம்பாதித்தும் நம்மால் அவ்வளவு வெற்றி பெற முடியவில்லை’ என்ற எண்ணம் பெரும்பாலானவர்களுக்கு உண்டு. கர்மா குறித்து இந்தப் பதிவில் சில விஷயங்களைப் பார்ப்போம்.
கர்மா: ‘கர்மா இஸ் பூமராங்’ என்றுதான் இந்து மதம் சாராத வெள்ளைக்காரர்களும் சொல்கிறார்கள். உலகில் பெரும்பாலான மக்கள் கர்மாவை நம்புகிறார்கள். உலகில் பூர்வகுடி ஆன்மிகக் கோட்பாடுகள் அனைத்தும் செய்த பாவங்களுக்கு ஏற்ப தண்டனை கிடைக்கும் என்பதை வலியுறுத்தியுள்ளன. கர்மா என்பது நமது செயல்களின் விளைவுகளைக் குறிக்கிறது. நாம் ஒரு நல்ல செயலை செய்தால், நமக்கு அதன் வினையாக நல்ல செயல்கள் நிகழும். அதே நாம் ஒரு தீய செயல் செய்தால், அதன் பாவங்கள் நம்மை சூழ்ந்து துன்பப்பட வைக்கும். நல்ல செயல்கள் நன்மையும் தீய செயல்கள் துன்பத்தையும் தருகின்றன.
தீயவர்கள் அதிகாரத்திற்கு வருகிறார்கள், ஊழல்வாதிகள் அமைச்சர்களாக இருக்கிறார்கள், பேராசை பிடித்தவர்கள் செல்வத்தைக் குவிக்கிறார்கள், இரக்கமற்றவர்களிடம் பதவி இருக்கிறது. நேர்மையான ஒருவரால் அதிகாரத்திற்கு வர முடியவில்லை, ஊழலை எதிர்ப்பவனால் அரசியலில் வெற்றி பெற முடியவில்லை, உதவி செய்ய நினைப்பவர்கள் வறுமையில் வாடுகிறார்கள், சேவை மனப்பான்மை உள்ளவர்களுக்கு எந்தப் பதவியும் கிடைப்பதில்லை. சிலர் தங்கள் வாழ்க்கை முழுவதும் போராட்டத்தையும் துன்பத்தையும் எதிர்கொள்கின்றனர். அதனால், கர்மாவின் மீது சந்தேகம் எழுகிறது பலருக்கும்.
கர்மாவை பற்றி புரிந்துக்கொள்ள வேண்டும் என்றால், அது எப்போதும் செயலில் இருக்கிறது. வேகமான எதிர்வினையை அது உடனடியாகத் தருவதில்லை. கர்மாவின் வினைப்பயன் ஒருவரின் அந்தப் பிறவியில் மட்டும் முடிவதில்லை, அது தனது வினை தீரும் வரையில் அடுத்த பிறவியில் கூட தொடர்கிறது. இதையே தமிழில் ‘ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்’ என்று சிலப்பதிகாரம் கூறியுள்ளது.
மகாபாரதத்தில் பீஷ்மர் அரச பதவி பெறக் கூடாது, பீஷ்மரின் சந்ததிகள் ஆட்சியில் பங்குக்கு வந்து விடக் கூடாது, அவர் இறுதிவரையில் பிரம்மச்சாரியாகவே இருக்க வேண்டும் என்று அவரது மாற்றாந்தாய் சத்தியவதி வாக்கு பெற்றுக் கொள்வாள். அதன் பின்னர் அரசுக்குரிய, சத்தியவதியின் மகன்கள் இருவரும் அற்ப ஆயுளில் இறந்து விடுவார்கள். சத்தியவதியின் வம்சாவளிகள் மகாபாரதப் போரில் பெருமளவில் அழிந்து விடுவார்கள். சத்தியவதி பீஷ்மரின் வம்சம் அரசாளக் கூடாது என்று பெரும் பாவத்தினை செய்தாள். அதன் பலனாக அவளது சந்ததிகள் யாரும் நிம்மதியாக அரியானையில் இருக்க முடியவில்லை. இந்த கர்ம வினை பரீட்சித்து மன்னர் வரை தொடர்ந்தது.
ஒருவரின் கர்ம வினைகள் இப்படித்தான், அது நீண்ட காலம் அவரை பாதிப்பது மட்டுமல்லாது, அவரது சந்ததிகளையும் பாதிக்கும். பாவ செயல்களின் மூலம் கிடைத்திருக்கும் அந்த வருவாயை அனுபவித்த அனைவருக்கும், அந்தப் பாவத்தின் பங்கில் இடம் இருக்கும். இராமாயணத்தில் தசரதன், கண் தெரியாத பெற்றோரின் மகனை அறியாமல் அம்பெய்தி கொன்றிருப்பான். அந்தப் பாவத்தின் பலனால் அவனும் தனது மகன் ராமனை பிரிந்து புத்திர சோகத்தால் உயிரிழந்திருப்பான்.
ஒரு தீயவன் நிறைய செல்வமும் செல்வாக்கும் விரைவில் பெற்று பேரும் புகழோடு வாழ்கிறான் என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் அவன் தனது கர்ம வினையின் தீய பலன்களை அதிகமாக்கிக்கொண்டே இருக்கிறான் என்றுதான் உணர்ந்துகொள்ள வேண்டும். ஒரு நல்லவன் நிறைய துன்பங்களை அனுபவிக்கும்போது அவனுக்கான விடிவு காலத்தினை அவன் நெருங்கிக் கொண்டிருக்கிறான் என்று புரிந்து கொள்ளவும். அவன் முக்தி நோக்கி சென்று கொண்டிருப்பான் அல்லது இந்தப் பிறவியில் அவன் செய்த நல்வினைக்கு ஏற்ப அடுத்த பிறவியில் அவன் மகிழ்ச்சியாக இருப்பான். இதுதான் கர்மா!