வைரஸ் தொற்று ஏற்பட்டு சளி, இருமலால் ஏற்படும் தொண்டை வலி மற்றும் வறட்சிக்கு (தொண்டைக் கட்டு) கஞ்சி போன்ற நீராகாரங்கள் எடுத்துக்கொள்வது நல்லது. வெந்நீரில் கல் உப்பு போட்டு கொப்பளிப்பதன் மூலம் ஓரளவுக்கு நிவாரணம் கிடைக்கும். இதுவே தொடர்ந்து இருந்தால் தொண்டையில் கட்டி அல்லது சதை வளர்ந்து இருக்கலாம். இதற்கு மருத்துவரை கலந்தாலோசிப்பது அவசியம்.
அதிகக் குளிர்ச்சியான பானங்களையோ, உணவுகளையோ எடுத்துக்கொள்வதும், அதேபோல் அதிக சூடு நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்வதும் தொண்டையை பாதிக்கும். மிதமான சூட்டில் உள்ள உணவுகள், பானங்களே தொண்டைக்கு பாதுகாப்பு.
சில சமயம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை வலியால் உணவை விழுங்க முடியாமல் கஷ்டப்படுவார்கள். இதற்கு தொண்டையில் உள்ள டான்சில்ஸ் சதை வீங்குவது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லது கழுத்துப் பகுதியில் ஏதேனும் வீக்கம் இருக்கலாம். இவை பாக்டீரியா தொற்றினால் ஏற்படக்கூடியவை. இதற்கு குளிர்பானங்கள் மற்றும் ஐஸ்கிரீம் வகைகளை உண்பதை தவிர்த்து, வெந்நீரை கொஞ்சம் கொஞ்சமாக நிதானமாகப் பருகுவதும், வெந்நீரில் கல் உப்பு சேர்த்து தொண்டையில் படும்படி கொப்பளிப்பதும் சிறந்த பலனைத் தரும். அத்துடன் வைட்டமின் சி சத்து நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை அதிகம் எடுத்துக்கொள்வதும் நல்லது.
அவசர அவசரமாக சாப்பிடுவது, தண்ணீர் குடிப்பது போன்ற காரணங்களால் விக்கல் ஏற்படும். இதற்கு அமைதியாக அமர்ந்து ஐந்து நிமிடங்கள் மூச்சை ஆழமாக இழுத்து வெளியே விட, விக்கல் நின்று விடும். இரண்டு மூன்று நாட்களுக்கு மேல் விக்கல் இருந்தால் இரப்பை புண் அல்லது நோய் தொற்று ஏதேனும் இருக்கலாம். இதற்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அவசியம்.
புகையிலை மெல்வதால் தொண்டையில் உள்ள திசுக்கள் பாதிக்கப்படும். எனவே, சிகரெட், புகையிலை போன்ற எந்த வடிவிலும் புகையிலையை எடுத்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.
மது அருந்துதல், புகைப்பிடித்தல், புகையிலை போடுதல் போன்ற செயல்களால் தொண்டைப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். எனவே, இவற்றைத் தவிர்ப்பது நல்லது.
சிலருக்கு அடிக்கடி ஏப்பம் வந்துகொண்டே இருக்கும். இப்படி வருவதற்குக் காரணம் வயிற்றுப்புண், அஜீரணம், அமில காரத்தன்மை அதிகமாகுதல் போன்ற காரணங்களாக இருக்கலாம். அதனால் ஏப்பம் அளவுக்கு மீறும்போது மருத்துவரை கலந்தாலோசிப்பது நல்லது. அதிக காரம், மசாலா நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது. அதேபோல் எண்ணெயில் பொரித்த உணவுகளை அளவுக்கு மீறி எடுத்துக் கொள்வது நெஞ்செரிச்சலை ஏற்படுத்துவதுடன் தொண்டையையும் பாதிக்கும்.
சிலர் தூங்கும்போது தூக்கத்தில் வாய் வழியாக மூச்சு விடுவதால் தொண்டை வறண்டு வலியுடன்கூடிய இருமல் ஏற்படும். இதனால் தூக்கம் கெடுவதுடன் தொண்டை வலியும் ஏற்படும். இதற்குக் காரணம் போதுமான அளவு நீர் எடுத்துக் கொள்ளாததும், குறட்டை விடுவதும் காரணமாக இருக்கலாம். இதற்கு உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்வதும் குறட்டைக்கு மருத்துவம் செய்து கொள்வதும் நல்லது.
தொண்டையில் ஏற்படும் பாக்டீரியா தொற்று காரணமாகவும், சைனசிட்டிஸ், ஆஸ்துமா போன்ற ஒவ்வாமைகளும் தொண்டை வலியை ஏற்படுத்தும். அத்துடன் தொண்டையில் அரிப்பு மற்றும் வறட்சியை ஏற்படுத்தும். இதற்கு தேனை இரண்டு ஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளலாம்.
தேனில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை தொண்டையில் பாக்டீரியா தொற்றை குறைக்கவும் வீக்கம், தொண்டை அரிப்பு மற்றும் அழற்சியை போக்கவும் உதவும்.
இஞ்சி டீ தொண்டைக்கு மிகவும் நல்லது. இஞ்சி அழற்சி எதிர்ப்புப் பண்புகளை கொண்டுள்ளது. இது தொண்டை நோய் தொற்றுக்கும், அரிப்பு, வீக்கம் ஆகியவற்றிற்கும் சிறந்த பலனளிக்கும். இஞ்சி டீ தயாரிக்கும்போது சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள், இலவங்கப்பட்டை சேர்த்து டீ தயாரித்து பருக தொண்டைக்கு இதம் அளிக்கும்.
தொண்டையை பாதுகாக்க அதிக இனிப்புகள் எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. சத்தமாகப் பேசுவது, கத்துவது போன்றவற்றை குறைத்துக் கொள்வதும், அலர்ஜி ஏற்படுத்தக்கூடிய தூசி நிறைந்த இடங்களில் பாதுகாப்பாக முகக்கவசம் அணிந்து கொள்வதும் தொண்டையை பாதுகாக்க உதவும்.