தொண்டைப்புண் குணமடைய சில எளிய வழிகள்!
தொண்டைப்புண் என்பது நாம் அனைவரையுமே ஏதோ ஒரு கட்டத்தில் பாதித்திருக்கும். இது பேசுவதை, உண்ணுவதை, தூங்குவதை கடினமாக்கி, நம் தினசரி வாழ்க்கையைக் கெடுத்துவிடும். இது பல காரணங்களால் ஏற்படக்கூடும். வைரஸ்கள், பாக்டீரியாக்கள், அலர்ஜி அல்லது அதிகமாக பேசுதல் போன்றவற்றால் இவை ஏற்படலாம். இந்த பாதிப்பு பொதுவாக தானாகவே குணமாகிவிடும் என்றாலும், வீட்டு வைத்தியங்கள் மூலம் அதன் வலியையும் குணமாகும் நேரத்தையும் குறைக்க முடியும். இந்தப் பதிவில் தொண்டைப்புண் குணமாக உதவும் எளிய வழிமுறைகள் பற்றி பார்க்கலாம்.
உப்பு நீர் கொண்டு கொப்பளிப்பத்தல் தொண்டை புண்ணுக்கு மிகவும் பயனுள்ள ஒரு வீட்டு வைத்தியம். உப்பு நீர் தொண்டையில் உள்ள வீக்கத்தைக் குறைக்கவும், பாக்டீரியாக்களைக் கொல்லவும் உதவும். ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை தேக்கரண்டி உப்பு கலந்து கொப்பளிக்கவும். இதை ஒரு நாளில் பலமுறை செய்தால், தொண்டைப்புண் விரைவில் குணமடையும்.
சூடான பானங்கள் அருந்துவது தொண்டைப்புண்ணால் ஏற்படும் வறட்சியைப் போக்கவும், வலியைக் குறைக்கவும் உதவும். இதற்கு வெந்நீர், மூலிகை தேநீர் மற்றும் சூடான பால் போன்றவற்றை குடிக்கலாம். இவற்றில் தேன் கலந்து குடிப்பது மேலும் பயனுள்ளதாக இருக்கும்.
வீட்டில் உள்ள ஈரப்பதத்தை அதிகரிப்பது தொண்டை வறட்சியைத் தடுக்க உதவும். இதனால், தொண்டையில் புண் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். இதற்காக வீட்டில் ஹீயூமிடிபயர் பயன்படுத்தலாம் அல்லது ஒரு பாத்திரத்தில் சூடான நீரை ஊற்றி அறையில் வைக்கலாம்.
தொண்டைப்புண் இருக்கும் போது காரமான, உப்பு அதிகமான மற்றும் கடினமான உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக சூப், பழச்சாறு, தயிர் மற்றும் ஆப்பிள் சாஸ் போன்ற மென்மையான உணவுகளை உண்ணுங்கள். மேலும் உடலுக்கு போதுமான ஓய்வு கொடுப்பது மிகவும் முக்கியம். இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து தொண்டைப் புண் விரைவில் குணமடைய உதவும்.
தொண்டைப்புண் மிகவும் கடுமையாக இருந்தால் மருத்துவரை அணுகி மருந்துகள் எடுத்துக் கொள்ளலாம். தொண்டைப் புண்ணின் காரணத்தை பொறுத்து மருத்துவர் ஆன்டிபயாட்டிக்குகள் அல்லது வலி நிவாரணிகள் பரிந்துரைப்பார்.
வீட்டு வைத்தியங்கள்:
இஞ்சியில் உள்ள வீக்கம் தடுக்கும் பண்புகள் தொண்டைப் புண்ணை குணப்படுத்த உதவும். எனவே, இஞ்சி தேநீர் அல்லது இஞ்சி சாறு குடிப்பது நல்லது. தேன், தொண்டை வலியைக் குறைக்கவும், பாக்டீரியாக்களைக் கொல்லவும் உதவும். எனவே, வெந்நீரில் தேன் கலந்து குடிக்கலாம். துளசி இலைகளைக் கொதிக்க வைத்து அந்த நீரைக் குடிப்பது தொண்டைப் புண்ணுக்கு நல்ல நிவாரணம் அளிக்கும்.
இந்த எளிய வீட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றி தொண்டைப் புண்ணை எளிதாக குணப்படுத்த முடியும். இவற்றை முயற்சித்தும் நீண்ட நாட்களாக அவை குணமாகவில்லை என்றால், உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது.