வயதானால்தான் உடல் வலி, மூட்டு வலி வரும் எனச் சொல்லும் நிலை மாறி, தற்போது இளம் வயதினரும் பெரும்பாலானோர் மூட்டு வலியால் அவதிப்படுகின்றனர். வளர் பருவத்தில் சரியான முறையில், சத்தான உணவு எடுத்துக்கொள்ளாமை, உடற்பயிற்சி செய்யாததன் விளைவு நடுத்தர வயதிலேயே மூட்டு வலி, இடுப்பு வலி என பல உபாதைகளால் கஷ்டப்பட வேண்டி வந்து விடுகிறது. இதனைத் தவிர்க்க சில ஆலோசனைகளை இந்தப் பதிவில் காண்போம்.
உருளைக் கிழங்கை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கப் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் ஊற விட்டு, பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். உருளைக் கிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டுவலிக்கு மிகச் சிறந்த நிவாரணம் தருகிறது.
தினமும் மதிய உணவிற்குப் பின் வெற்றிலையையும், சுண்ணாம்பையும் சேர்த்து சாப்பிட்டு வர, மூட்டுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்கலாம்.
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் இரண்டையும் கலந்து சிறிது கற்பூரம் சேர்த்து வலியுள்ள மூட்டில் தேய்த்து வந்தால் விரைவில் மூட்டு வலி குறையும்.
ஒரு டீஸ்பூன் கறுப்பு எள்ளை கால் கப் தண்ணீரில் ஊற விட்டு, அதை காலையில் வெறும் வயிற்றில் குடிக்க மூட்டு வலி பெருமளவு குறையும்.
இரண்டு டீஸ்பூன் விளக்கெண்ணெயை லேசாக சுட வைத்து, வலி உள்ள இடத்தில் தடவி வர, நாளடைவில் மூட்டு வலி குணமாகும்.
ஒரு டீஸ்பூன் பாசிப்பருப்புடன் நான்கைந்து பூண்டு பற்கள் சேர்த்து நன்கு குழைவாக வேக விட்டு அதை காலை, மாலை இரு வேளை அருந்த மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.
எலும்பு தேய்மானம் ஏற்படாமல் இருக்க சத்தான உணவுகள், உடற்பயிற்சி, யோகா போன்றவையே உதவும்.
மூட்டு வலி உள்ளவர்கள் காரமான வறுத்த உணவுகள், தேநீர், காபி, பகல் தூக்கம், மனக் கவலைகள், புளிப்பான உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும். பிரண்டை துவையல், முடக்கத்தான் கீரை, வாத நாராயணா இலை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள மூட்டுகளுக்கு ஆரோக்கியம் தருவதாகும்.
அதிக இனிப்பு, தவறான ஜிம் பயிற்சிகள்கூட சில சமயம் மூட்டுகளை பாதிக்கும். மூட்டு வலி உள்ளவர்கள் தாங்கள் அணியும் காலணிகளிலும் கவனமாக இருக்க மூட்டு வலி, கால் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.