தோப்புக்கரணம் போடுவது நமது ஆன்மிகக் கலாசாரத்தில் ஊறிய ஒரு பண்பாகும். விநாயகப் பெருமானை தரிசிக்கும்போது தோப்புக்கரணம் போட்டுத்தான் அவரை வழிபாடு செய்வோம். சென்ற தலைமுறையினர் பள்ளிகளில் படிக்கும்போது ஆசிரியர்கள் அவர்களுக்கு தண்டனை தரும் விதமாக தோப்புக்கரணம் போடச் சொல்லுவார்கள். உண்மையில் தோப்புக்கரணம் போடுவது தண்டனை அல்ல, அது அவர்களது உடல்நலனுக்கு நன்மை செய்யும் ஒரு உடற்பயிற்சி என்பதை அறிந்தே ஆசிரியர்கள் தோப்புக்கரணம் போடச் சொல்லி இருப்பார்கள் போல.
தோப்புக்கரணம் போடுவதன் நன்மைகள்:
தோப்புக்கரணம் போடுவதை சூப்பர் பிரெய்ன் யோகா என்று அழைக்கிறார்கள். இது மூளை மற்றும் யோகா பயிற்சிகளின் கலவையாக இருக்கிறது. மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் செறிவை அதிகரிக்கவும் ஒட்டுமொத்த மன ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகிறது.
தினமும் ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் இந்த பயிற்சியை செய்தாலே கவன மேம்பாட்டை அதிகரிக்கும். செய்யும் பணிகளில் ஆழ்ந்த ஈடுபாடும் கவனமும் உருவாகி விரைவில் அதை செய்து முடிக்கும் தன்மையும் உருவாகும்.
ஒருவருடைய மெமரி பவர் எனப்படும் ஞாபக சக்தியின் திறன் கூடும். நினைவகத்தை தக்க வைத்தல் மற்றும் கடினமான விஷயங்களைக் கூட நினைவு கூற உதவும். குறிப்பாக. மாணவர்களுக்கும் அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த விரும்பும் எவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தப் பயிற்சியை தினமும் செய்யும்போது மன அழுத்த அளவை குறைக்கவும் உடல் தளர்வை மேம்படுத்தவும் உதவும். மேலும், மனம் ரிலாக்ஸாக இருப்பதை கண்கூடாகக் காணலாம். மனதை உற்சாகப்படுத்தி, சோம்பல் மற்றும் சோர்வை எதிர்த்துப் போராடுகிறது.
இந்தப் பயிற்சி உடல் இயக்கங்களின் மோட்டார் திறன்கள் மற்றும் ஒருங்கிணைப்பை மேம்படுத்த உதவும். கடினமான உடற்பயிற்சிகள் செய்ய முடியாதவர்களுக்கு, தினமும் 10 அல்லது 15 நிமிடங்கள் தோப்புக்கரணம் போட்டாலே போதும். மூளையின் ஆற்றல் மேம்படுவதால் சிந்தனைத் தெளிவு உண்டாகும். முடிவெடுப்பதில் மற்றும் சிக்கலை தீர்ப்பதில் ஆற்றல் அதிகரிக்கும். நினைவாற்றல் அதிகரிப்பதால் கற்றல் திறன்களை மேம்படுத்த உதவும். குறிப்பாக மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் பயிற்சி இது.
இது பல வகையான உடற்பயிற்சிகளைப் போலவே மேம்பட்ட உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. சீரான குடல் இயக்கம், பருமனான உடல் மெலிவது, அடி வயிறு குறைவது, தொடைப்பகுதியில் சதை குறைவது, மூட்டு வலி குறைவது என்ற பலன்கள் கிட்டும். மிகுந்த கவனத்துடன் இந்தப் பயிற்சியை செய்யும்போது இது உணர்ச்சி கட்டுப்பாட்டுக்கு உதவும். சட்டென்று கோபம் ஆத்திரம் மற்றும் வேகமாக செயல்படும் தன்மை மாறி எதிலும் நிதானமும் பொறுமையும் கைகூடும்.
காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது. உடல் முழுவதும் இரத்த ஓட்டம் சீராகும். கால் தசைகளும் நன்றாக இயங்கும்.
முறையாக தோப்புக்கரணம் போடுவது எப்படி?
ஒரு விரிப்பின் மீது நின்று கொண்டு கால்களை சற்றே பிரித்து வைத்துக்கொள்ள வேண்டும். இடது கையால் வலது காது மடலையும் வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும். வலது கட்டைவிரல் இடது காதின் வெளிப்புறமும், ஆட்காட்டி விரல் உட்புறமும் இருக்க வேண்டும். வலது கையை இடது கையின் குறுக்கே வைத்து, இடது காதைப் பிடிக்க வேண்டும். முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும். மூச்சுக்காற்றை உள் இழுத்தவாறே அமர வேண்டும், மூச்சுக்காற்றை வெளியிட்டுக் கொண்டே எழுந்து நிற்க வேண்டும்.