இந்தியாவில் பலவிதமான தெருக்கடை உணவு வகைகள் மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றன. ஆனால், இத்தகைய பலதரப்பட்ட வண்ணமயமான சுவை மிகுந்த தெருக்கடை உணவுக் கலாச்சாரத்தால் நமது கல்லீரல் பாதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா?
தெருவோரங்களில் விற்கப்படும் பல்வேறு வகையான உணவுகளின் சுவையால் தூண்டப்பட்டு மக்கள் அதை அடிக்கடி வாங்கிச் சாப்பிடுகிறார்கள். முற்றிலும் ஆரோக்கியமற்ற முறையில் சமைக்கப்படும் இத்தகைய தெருக்கடை உணவுகளில் பயன்படுத்தப்படும் எண்ணெய்கள், மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுவதால் அதிக அளவில் கெட்ட கொழுப்புகள் உடலில் சேர்கிறது. இதுபோன்ற ஆல்கஹால் அல்லாத கொழுப்புகளால் கல்லீரல் பாதிக்கப்படுகிறது.
அதிகமாக தெருக்கடைகளில் விற்கப்படும் உணவை உட்கொள்வதால் அதில் உள்ள கொழுப்பு கல்லீரலில் சேர்கிறது. இதனால் கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு நிரந்தர உடல் பாதிப்புக்கான சாத்தியக்கூறுகள் ஏற்படுகின்றன. தெருக்கடை உணவை நோக்கி வாடிக்கையாளர்கள் அதன் நறுமணம் மற்றும் சுவை காரணமாக அதிகமாக ஈர்க்கப்படுகிறார்கள். இருப்பினும், அவை சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் சமைக்கப்படுவதால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் ஒன்றாக மாறிவிடுகிறது.
அதேசமயம், தெருவோரங்களில் விற்கப்படும் உணவுகளை அதிகமாக உட்கொள்வதால் கல்லீரல் மட்டுமின்றி, உடலுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற உணவுகளில் அதிக கலோரி நிறைந்துள்ளதால் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது. கொழுப்பு கல்லீரல் நோய் உருவானவர்களுக்கு உடற் பருமனால் ஆபத்து மேலும் அதிகமாகிறது. ஒரு உணவில் ஒளிந்திருக்கும் சுவையை மட்டும் ரசிக்காமல், அதில் மறைந்துள்ள ஆபத்துக்களை அறிந்து அதைத் தவிர்ப்பது நல்லதாகும்.
மேலும், தெருக்கடை உணவுகளை தினசரி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். என்றாவது ஒருநாள் ருசிப்பது தவறில்லை. ஆனால், தினசரி தெருக்கடை உணவை உண்பதால் அதனால் பல பாதிப்புகள் ஏற்படும். உங்களின் ஆரோக்கியமான உணவுத் தேர்வால் ஆரோக்கியமான வாழ்க்கையும் அமையும். இந்திய தெருக்கடை உணவுகளின் ஒப்பற்ற சுவை மற்றும் பல வகைகளில் கிடைக்கும் அனுபவத்தை நாம் தவற விடக்கூடாது என்றாலும், இதனால் கல்லீரல் ஆரோக்கியத்துக்கு ஆபத்து உள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.