நீண்ட நாட்களாக நீரிழிவால் அவதிப்படுகிறீர்களா? உஷார்!

நீண்ட நாட்களாக நீரிழிவால் அவதிப்படுகிறீர்களா? உஷார்!

நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் இல்லாத வீடே இல்லை எனும் நிலையில் இந்தியா உள்ளது. அது மட்டுமின்றி, இந்த நீரிழிவு பிரச்னை வயது வித்தியாசமின்றி அனைவரிடத்திலும் தற்காலங்களில் பெருகிக் கொண்டிருக்கிறது. நீரிழிவு என்பது ஒரு சைலன்ட் கில்லர். அதனைக் கட்டுக்குள் வைக்கத் தவறினால் உடல் உறுப்புகளை மோசமாக பாதிக்கும். குறிப்பாக, கண் பார்வை பாதிக்கப்படலாம். ஏன், பார்வை இழப்பே கூட ஏற்படலாம். நீரிழிவு பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்கள் பார்வையிழப்பை தவிர்க்க தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை இந்தப் பதிவில் பார்ப்போம்.

கட்டுப்பாடற்ற நீரிழிவு இதயத்தையும், சிறுநீரகத்தையும் பாதிக்கும் என்று பலருக்கு தெரியும். அது கண்கள் மீதும் கருணை காட்டுவதில்லை. இந்தியாவில் கண் மருத்துவமனைகளுக்கு வரும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 45 சதவிகிதம் பேர் பாதிப்பு கண்டறியும் முன்னரே பார்வையை பறிகொடுத்து விடுகின்றனர். நீரிழிவு தொடர்பான பார்வை இழப்பு மாகுலர் எடிமா மற்றும் ரெட்டினோபதி என்று இரண்டு வகைகளாக உள்ளது. இது மட்டுமின்றி, நீரிழிவு பிரச்னை கண்புரை மற்றும் கிளைகோமா போன்ற பிற கண் பிரச்னை ஆபத்துகளையும் அதிகரிக்கிறது.

நீரிழிவை கட்டுக்குள் வைக்கத் தவறும்போது, கண்கள் உட்பட, உடல் முழுவதும் உள்ள சிறிய ரத்த நாளங்களையும் இது பாதிக்கிறது. இதனால் ரத்த ஓட்டம் குறையும். ரத்த ஓட்டம் குறைவதால் விழித்திரை (கண்ணின் பின் பகுதி) பாதிக்கப்படுகிறது. இந்த நிலை நீரிழிவு ரெட்டினோபதி (DR) என்று அழைக்கப்படுகிறது. இது முக்கியமாக விழித்திரையின் மையப் பகுதியில் (மாகுலா) வீக்கமாக வெளிப்படுகிறது. இது நீரிழிவு மாகுலர் எடிமா (DME) என்று அழைக்கப்படுகிறது.

நீரிழிவு ரெட்டினோபதியின் ஆரம்ப கட்டங்களில் அறிகுறிகள் இல்லாமல் இருக்கலாம். எனவே, உங்கள் பார்வையில் எந்தப் பிரச்னையும் இல்லாவிட்டாலும், வழக்கமான கண் பரிசோதனைகளை செய்துகொள்வது மிகவும் முக்கியம். செய்தித்தாள்கள் அல்லது சிறிய எழுத்துக்களைப் படிப்பதில் சிரமம், அடிக்கடி கண்ணாடியை மாற்றுதல், மங்கலான பார்வை, கருப்பு அல்லது சிவப்பு நிற காட்சிகள் தோன்றுவது, இருண்ட திரையைப் பார்ப்பது போன்றவை நீரிழிவால் ஏற்படும் கண் நோயின் ஆரம்ப நிலை அறிகுறிகளாகும். ஆப்டிகல் கடையில் கண் பார்வையை பரிசோதனை செய்தால் நீரிழிவு ரெட்டினோபதி இருக்கிறதா என்பது தெரியாது. விழித்திரை பரிசோதனை மூலம் மட்டுமே இதைக் கண்டறிய முடியும்.

சர்க்கரை வியாதி எனும் நீரிழிவால் பாதிக்கப்பட்டவர்கள் உங்கள் கண்கள் மீது கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டியது அவசியம். மனித வாழ்க்கையில் கண் பார்வை இல்லாமல் வாழ்வது என்பது எவ்வளவு கடினம் என்பது பார்வை பறிபோனவர்களுக்கு மட்டுமே தெரியும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com