கோடையில் கொத்து கொத்தாக உதிரும் தலைமுடி! தீர்வு என்ன?

summer hairfall
summer hairfallImg credit: AI Image
Updated on

கோடைக்காலம் ஏற்கனவே ஆரம்பித்து, உச்சி வெயில் மண்டையை பிளக்க தொடங்கி விட்டது. இதைவிட பலருக்கும் கவலையான ஒரு விஷயம் என்னவென்றால், கோடைகாலத்தில் முடி உதிர்தல் மிக அதிகமாக இருப்பது தான். பருவநிலை மாற்றம் முடியின் வளர்ச்சியிலும் கணிசமான அளவில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. அதனால், இந்த பருவ காலத்தில் முடியை பராமரிப்பது மிகவும் அவசியமான நடவடிக்கையாகும்.

கோடையில் முடி உதிர்தலுக்கு ஒரு சில காரணங்கள் உள்ளன.

அதிகப்படியான வியர்வை:

இந்த காலத்தில் நிகழும் அதீத வெப்பம் மற்றும் புழுக்கம் ஆகியவை உடல் மட்டுமல்லாது, உச்சந்தலையிலும் அதிக வியர்வையை வெளியேற்றுகின்றன. இதனால் சருமத்தில் எண்ணெய் பசை அதிகரித்து, முடி மீது ஒட்டிக்கொண்டு அதன் வேர்களை பலவீனமாக்குகிறது. அதிக வெப்பம் தலையில் உள்ள இயற்கையான ஈரப்பதத்தை உறிஞ்சி விடுகிறது. இதனால் தலைமுடியின் வெளிப்புற பாதுகாப்புக்கான கியூட்டிகல், வெப்பத்தால் சேதமடைகிறது.

கியூட்டிகல் சேதத்தினால் தலை முடி வறண்டு போய், அதன் பளபளப்பு தன்மையை இழந்து, சிக்கு சிக்காக மாறத் தொடங்கியிடும். இதனால் தலைமுடியை சீவும் போது அது உடைகிறது. தலைமுடிக்கு உள்ளிருந்தும் வெளியில் இருந்தும் ஈரப்பதத்துடன் பாதுகாப்பது மிகவும் அவசியம்.

சூரிய புற ஊதாக்கதிர்கள்: கடும் வெயில் முடியின் இயற்கையான புரதங்களை அழித்து, அதன் வேர்களையும் பலவீனப்படுத்துவதால் விரைவில் உதிரத் தொடங்குகிறது. இது பருவ கால மாற்றம் என்றாலும், கவனிக்கா விட்டால் அதிக முடி இழப்பை சந்திக்க நேரிடும். நமது சருமத்தை சூரிய ஒளியில் இருந்து பாதுகாப்பதற்கு சன்ஸ்கிரீனை பயன்படுத்துகிறோம். அதுபோலவே தலைமுடியையும் புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
பெண்களே உஷார்! முடி உதிர்வா? அதிக சோர்வா? இதுதான் காரணம்... உடனே கவனியுங்க!
summer hairfall

தலை முடியை பாதுகாக்கும் சில வழிமுறைகள்:

1. முடியின் ஆரோக்கியத்திற்கு தினசரி போதுமான அளவில் தண்ணீரை குடிக்க வேண்டும். உடல் எப்போதும் நீரேற்றத்துடன் இருக்க வேண்டும். நீர்ச்சத்து உடலில் குறைய தொடங்கினால் அதற்கான பாதிப்புகள் முதலில் தலைமுடியில் இருந்து தொடங்க ஆரம்பிக்கும். போதுமான அளவு தண்ணீர் அருந்துவது உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதனால் தலைமுடிக்கு உள்ளிலிருந்து ஈரப்பதம் கிடைக்கிறது. முடியின் வெளிப்புறத்திற்கு தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி எண்ணெய் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

2. தரமான ஹேர் சீரம்களை உபயோகிப்பதும் தலைமுடியில் ஈரப்பதத்தினை பராமரிக்க உதவுகிறது. மேலும் இவற்றில் உள்ள ஆரோக்கிய மூலப் பொருட்கள் தலைமுடியை உள்ளிலிருந்து வலுவாக்குகிறது.

3. வாரத்தில் ஒரு நாள் தலையில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொள்வது, உச்சந்தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்க செய்து முடியின் வேர்களுக்கு வலிமை அளிக்கிறது.

4. தலையில் வெப்பம் படாமல் தடுக்க தலைக்கு தொப்பி, குடை, துண்டு ஆகியவற்றின் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.

5. வாரம் இருமுறை தலைமுடியை மென்மையான ஷாம்பு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். இதனால் தலையில் படிந்துள்ள வியர்வை, எண்ணெய், அழுக்குகள் ஆகியவற்றை களைய முடியும்.

6. தலைமுடிக்கு ஹேர் ட்ரையர்கள் அல்லது முடியை நேராக்கும் சாதனங்களை பயன்படுத்தாமல் இருப்பது ஆரோக்கியமான செயலாக இருக்கும்.

7. அடிக்கடி உணவில் கீரை வகைகள், பச்சை காய்கறிகள், பாதாம், வால்நட், உலர் பழங்கள், பழங்கள் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள்.

8. வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும்.

கோடையில் சிறிதளவு முடி உதிர்தல், சாதாரணமான விஷயம் என்றாலும், அது கட்டுப்பாடு இல்லாமல் உதிரத் தொடங்கினால், உடனடியாக மருத்துவரை அணுகி தலைமுடியின் ஆரோக்கியத்தினை பராமரித்து கொள்ளவும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

logo
Kalki Online
kalkionline.com