
கடும் வெயில் காலம் வந்தாலே, பலருக்கும் அடிக்கடி வெயிலில் சுற்றும் போது தலைவலி வரும். இதற்கு பெரும்பாலும் அதிக வெப்பம் காரணமாக உள்ளது. நேரடியாக அதிக சூரிய ஒளி நம்மை தாக்கும் போது வெப்பத்தைத் தாங்குவது கடினம்.
வெயிலில் உடலும் அதிக சூட்டை எதிர்கொள்ள வேண்டி உள்ளது. சூரிய ஒளி உடல் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இது தலையை நேரடியாக பாதிக்கிறது. வெயில் தாக்கத்தினால் மன அழுத்தம் மற்றும் சோர்வு காரணமாக உடலில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதன் விளைவாக தலைவலி வருகிறது. வெயில் அதிகமாக இருக்கும்போது தலைவலி வருவது இயல்பான ஒன்று தான்.
கோடைக்கால தலைவலியைத் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். கடும் வெயில் இருக்கும் 11மணி முதல் 2 மணி வரை கூடுமான வரையில் வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளியே செல்ல வேண்டியிருந்தால், ஒரு குடை பிடித்து செல்வது வெயிலில் இருந்து தப்பிக்க உதவும். குடை பிடிக்காமல் செல்ல விரும்பினால் தொப்பி போட்டுக் கொள்ளலாம். பெண்களாக இருந்தால் துப்பட்டாவை வைத்து தலையை மூடிக் கொள்ளலாம். இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தலைவலியைத் தடுக்க உதவும்.
கோடை காலத்தில் வரும் தலைவலியைத் தடுக்க சில இயற்கை வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்து பார்க்கலாம்.
கோடைக் காலத்தில் உடலை குளிர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் அவசியம். நல்லெண்ணெய் உடல் சூட்டை குறைப்பதில் மிகவும் பயன் உள்ளதாக இருக்கிறது. தினமும் உச்சந்தலையில் சிறிது நல்லெண்ணெய் தேய்த்து வந்தால் உடல் சூடு குறையும். மேலும் இது உடல் சோர்வு மற்றும் தலைவலியைப் போக்கும்.
வெயிலில் அதிக நேரம் இருப்பது தலைவலியை ஏற்படுத்தும். கூடுமானவரை நிழலான பகுதிகளில் இருக்க முயற்சி செய்யுங்கள்.
அடிக்கடி நீர் மோர் அல்லது மோர் குடிப்பது உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு புத்துணர்ச்சியையும் அளிக்கிறது. கோடையில் குளிர்ந்த மோரை குடிப்பது தாகத்தை கட்டுப்படுத்தும் மேலும் வயிறை குளுமையாக வைத்திருக்கும். மோர் உடலை குளுமையாகவும் நீரேற்றமாகவும் வைத்திருக்கும். இது நீரிழப்பை தடுப்பதால் தலைவலி குறையும். கோடையில் மதிய உணவில் மோரினை சேர்த்துக் கொள்ளுங்கள்.
அதனுடன் குளிர்ச்சியான பழங்கள் மற்றும் சாலடுகள் போன்ற உணவுகள் உடலை நீரேற்றமாக வைத்திருக்கின்றன. அவை உடல் வெப்பநிலையையும் கட்டுப்படுத்துகின்றன.
துளசி மற்றும் இஞ்சியிலிருந்து தேநீர் தயாரித்து குடிக்கவும். ஏனெனில் இந்த தேநீர் தலைவலியைப் போக்க ஒரு இயற்கையான மருந்தாக செயல்படுகிறது.
தினசரி யோகா மற்றும் பிராணாயாமம் செய்யுங்கள். இது உடலின் இரத்த ஓட்டத்தை சமநிலையாக வைக்க உதவும். இதனால் இரத்த ஓட்ட மாறுபாட்டால் கோடையில் ஏற்படும் தலைவலி வராமல் தடுக்க உதவும். தினசரி உடற்பயிற்சி செய்வதன் மூலம் இரத்த ஓட்டம் மேம்பட்டு தலைவலியை குறைக்கிறது. குறிப்பாக கோடையில் உடற்பயிற்சி செய்வது, உடல் அதிக வெப்பமடைவதைத் தடுக்கிறது
தினசரி போதுமான அளவில் ஓய்வெடுப்பதும் அவசியம். உடலுக்கு போதுமான ஓய்வு கொடுப்பதன் மூலம் தலைவலி வருவதை தடுக்க முடியும் . ஓய்வின் போது, உடல் உற்சாகமாகவும் அமைதியாகவும் இருக்கும். ஓய்வு தலைவலியின் தீவிரத்தைக் குறைக்கிறது.