
மக்கானா என்று அழைக்கப்படும் தாமரை விதைகள் யூரியால் ஃபெராக்ஸ் என்ற செடிகளில் இருந்து பெறப்படுகிறது. எண்ணெய் இல்லாமல் ஊட்டச்சத்துகள் நிறைந்த சிறப்பான மொறு மொறு ஸ்நாக்ஸ் சாப்பிட விரும்புவோருக்கான சிறந்த சாய்ஸ்சாக இந்த மக்கானா என்கிற தாமரை விதை உள்ளது.
மக்கானா அல்லது தாமரை விதைகளை இந்தியாவில், பீகார் மாநிலம் தான் மிக அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. தாமரை விதைகள் தாமரையிலிருந்து கிடைக்கின்றன. தாமரைச் செடியானது விதைக் காய்களை உருவாக்குகிறது. ஒவ்வொரு காய் 40 நாட்களுக்குள் முதிர்ச்சியடையும் போது தோராயமாக 20 விதைகளைக் கொண்டுள்ளது. பின்னர் விதைகள் உலர்த்தப்பட்டு அதிக தீயில் வறுக்கப்படுகின்றன. வெளிப்புற கருப்பு ஓடு உடைந்து வெள்ளைப் பொரி (பஃப்ஸ்) வெளியே வரும். இந்த விதைகளைத்தான் தாமரை விதைகள்/மக்கானாக்கள் என்று அழைக்கிறோம்.
மக்கானாவில் புரதம், நார்சத்துகள் நிறைந்துள்ளன. இதனால் இவை எடை குறைப்புக்கு வழிவகுக்கிறது. அதிகமாக உணவு சாப்பிடுவதை தடுப்பதுடன், உங்கள் வயிற்றின் செயல்பாட்டை சீராக்குகிறது. தாமரை விதைகளில் பாஸ்பரஸ், புரதம், கால்சியம், மெக்னீசியம், நார்ச்சத்து, துத்தநாகம் போன்றவை நிறைந்துள்ளன. தீவிரச் சைவ உணவு உண்பவர்களுக்கு இது ஒரு சரியான தேர்வாகும்.
100 கிராம் தாமரை விதையில் பின்வருவன அடங்கும்:
கலோரிகள்: 347
புரதம்: 9.7 கிராம்
கொழுப்புகள்: 0.1 கிராம்
கார்போஹைட்ரேட்டுகள்: 76.9 கிராம்
நார்ச்சத்து: 14.5 கிராம்
மொத்த கொழுப்புகள் (கொழுப்புகள்): 0.1 கிராம்
கால்சியம்: 60 மி.கி
இரும்பு: 1.4 மிகி
இதில் நிறைந்திருக்கும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் ஏராளம். இந்த ஊட்டச்சத்துக்களின் உதவியுடன், மக்கானா ஏராளமான நன்மைகளைத் தருகிறது. மேலும் மக்கானா குறைந்த கலோரிகள் மற்றும் புரதச்சத்து நிறைந்ததாகக் கூறப்படுகிறது.
குறிப்பாக, ஆண்களுக்கு மக்கானா விதைகள் மிகுந்த அளவில் பயனளிக்கின்றன. இதை ஆண்கள் மக்கானா விதைகளை உட்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன என்பதை பார்க்கலாமா?
1. உடல் எடை மேலாண்மைக்கு:
எடை ஆரோக்கியத்தை நிர்வகிக்க ஆண்களுக்கு சிறந்த தேர்வாக மக்கானா அமைகிறது. ஏனெனில், இது குறைந்த கலோரிகள் மற்றும் அதிக நார்ச்சத்துக்கள் நிறைந்ததாகும். இதனை உட்கொள்வதால் வயிறு நிரம்பிய உணர்வைத் தருகிறது. மேலும் இதன் நார்ச்சத்து உள்ளடக்கம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தி, பசியைக் குறைக்கிறது. அதிகப்படியான உணவு உட்கொள்ளலைக் குறைக்கிறது. எனவே, எடை பராமரிப்பு நோக்கத்தில் உள்ள ஆண்களுக்கு மக்கானா சிறந்த சிற்றுண்டியாக அமைகிறது.
2. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த:
ஆண்கள் இதய பாதிப்பால் பெரிதும் பாதிப்படைகின்றனர். மக்கானாவில் கொலஸ்ட்ரால் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகள் குறைவாக உள்ளது. எனவே இது இதய ஆரோக்கியத்திற்கு ஏற்ற சிற்றுண்டியாகவும் அமைகிறது. இதில் மக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை இரத்த அழுத்தத்தை குறைக்கவும், மற்றும் ஒட்டுமொத்த இருதய ஆரோக்கியத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன. மக்கானாவின் வழக்கமான நுகர்வு ஆரோக்கியமான கொலஸ்ட்ரால் அளவை பராமரிப்பதுடன், இதயம் சார்ந்த பிரச்சனைகளின் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
3. தசை வளர்ச்சிக்கு உதவும்:
மக்கானாவின் தனிச்சிறப்புகளில் ஒன்றானது அதன் அதிக புரத உள்ளடக்கம். இது தசை வளர்ச்சிக்கு மிக முக்கியமான ஒன்றாகும். இது உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருக்க வைக்கவும், தசைகளை பராமரிக்கவும் உதவுகிறது. மேலும் இது ஆண்களுக்கு சிறந்த கூடுதலாக தசை வளர்ச்சியை அளிக்கும். அதிக சர்க்கரை அல்லது ஆரோக்கியமற்ற கொழுப்புகள் நிறைந்த தின்பண்டங்களைப் போலல்லாமல், மக்கானா தாவர அடிப்படையிலான புரதத்தை நல்ல அளவில் வழங்குவதால் இது ஆண்களின் தசை வளர்ச்சிக்கு மிகச் சரியான உணவாக இருக்கிறது.
4. நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க:
மக்கானாவில் ஃபிளாவனாய்டுகள் உள்ளிட்ட ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டதாகும். பொதுவாக ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் காரணமாக, செல்லுலார் சேதம் ஏற்படலாம். இது இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுடன் தொடர்புடையதாகும். இவை ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. மக்கானாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் உடலில் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், பல்வேறு நோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும் இது மனஅழுத்தம் தொடர்பான உடல்நலப் பிரச்சினைகளுக்கு ஆண்களுக்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.
5. எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த:
ஆண்களுக்கு வலுவான எலும்புகளை பராமரிப்பது மிகவும் அவசியமாகும். குறிப்பாக, ஆண்கள் வயதாகும் போது ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற எலும்பு தொடர்பான நிலைமைகளைச் சந்திக்கும் சூழல் அதிகரிக்கலாம். மக்கானாவில் கணிசமான அளவு கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளது. இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களுமே எலும்பு அடர்த்தி மற்றும் வலிமையை பராமரிக்க அவசியமாகும். ஆண்களுக்கு மக்கானாவின் வழக்கமான நுகர்வு எலும்பு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. மேலும், எலும்பு முறிவு தொடர்பான பிரச்சனைகளின் அபாயத்தையும் குறைக்கிறது.
ஆகவே, ஆண்கள் மக்கானாவை அன்றாட உணவில் எடுத்துக் கொள்வதன் மூலமாக ஆரோக்கியமான உடலைப் பெறலாம். குறிப்பாக இப்போதைய Gen Z ஆண்களுக்கு ஏற்ற அற்புதமான மற்றும் ஆரோக்கியமான உணவாக இந்த மக்கானா இருக்கிறது.
இதை நீங்கள் வறுத்து அப்படியே சாப்பிடலாம் அல்லது பாயசம் செய்து குடிக்கலாம். இதை வறுத்து பிறகு பொடி செய்து தயிரில் கலந்து உப்பு, மிளகுத் தூள், சீரகத் தூள் ஆகியவற்றை சேர்த்து மக்கானா ரைய்த்தா செய்து சாப்பிடலாம். எதாவது ஒரு விதத்தில் இதை தினமும் எடுத்து கொண்டால், ஆண்களே! உங்கள் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.