
பொதுவாக கோடைகாலத்தில் பலதரப்பட்ட உடல் உஷ்ண நோய்கள் ஏற்படுகின்றன. கோடை காலத்தில் 5 மணி நேரம் சூரிய ஒளியில் அலைந்து திரிந்து வருகின்றவர்களுக்கு நாள்பட்ட சிறுநீரக கோளாறுகள் தோன்ற வாய்ப்பு உள்ளதாக ஆய்வில் கண்டறிந்துள்ளனர். நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் சிறுநீரகங்கள் ரத்தத்தை சுத்தம் செய்வதில் சிரமத்தை சந்தித்து சுத்தமில்லாத ரத்தம் உடலில் பாய்வதற்கு வழிவகுக்கிறது. இதனால் உடலில் நச்சு சேர்கிறது. இதற்கு முக்கிய காரணம் அதிகப்படியான வெப்பநிலை, குறைந்த அளவில் தண்ணீர் குடிப்பது .
பொதுவாக நாள் பட்ட சிறுநீரக கோளாறுகள் கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் அதிகம் ஏற்படுகிறது என்கிறார்கள். இதனை தவிர்க்க தொடர்ந்து சூரிய ஒளியில் இருந்து வேலை பார்க்காமல், அவ்வப்போது நிழலான குளிர்ந்த பகுதிகளில் கொஞ்ச நேரம் இளைப்பாற வேண்டும். ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை தண்ணீர் குடிக்க வேண்டும்.
கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலத்தடி நீரை நம்பியே உள்ளனர். இதிலுள்ள நீர் கோடைகாலத்தில் கடினமான நீராக மாறி அதில் கால்சியம், மெக்னீசியம் உப்புக்கள் அதிகரித்து விடுகிறது. இதுவும் சிறுநீரக கோளாறுகள் உருவாக காரணமாகிறது. கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் மக்களில் 3 ல் ஒருவர் சிறுநீரக கோளாறுகளுடன் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். கிராமப்புறங்களில் 50 சதவீதம் இதில் பாதிக்கப்படுகின்றனர் என்கிறது ஆய்வு.
இந்தியாவில் 8 சதவீதம் பேர் இந்த நாள்பட்ட சிறுநீரகக் கோளாறுகளால் டயாலிசிஸ், சிறுநீரக மாற்று சிகிச்சையை எதிர் கொள்கிறார்கள். இதில் அதிகம் பாதிப்பை சந்தித்து வருவது விவசாயிகள் தான் என்கிறார்கள் கொலரோடா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள். இந்தியாவில் சிறுநீரக பாதிப்புகள் அதிகரிக்க காரணம், இங்கு நிலவும் வெப்ப காற்று தான் என்கிறார்கள். இந்தியாவில் இறக்கும் 12 பேரில் ஒருவர் நாள் பட்ட சிறுநீரக கோளாறுகள் காரணமாக இறக்கிறார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள். தற்போது இந்தியாவில் 115 மில்லியன் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோடை காலத்தில் சிறுநீரகங்களை காப்பாற்ற தினமும் குறைந்தது மூன்று லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதிகாலையில் தண்ணீர் குடித்தே அந்நாளை தொடங்க வேண்டும். குறைந்தது ஆறு மணி நேரம் எவ்வித இடையூறும் இல்லாமல் தூங்க வேண்டும். அதிகாலை நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
அதிகரிக்கும் வெப்பநிலையால் ஏற்படும் விளைவுகளைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது அவசியம். அந்த வகையில், உடலில் நீா்ச்சத்தை தக்க வைத்துக் கொள்வது முக்கியம். அதற்கு அதிக அளவு நீா் அருந்த வேண்டும். உப்பு-சா்க்கரை கரைசல், எலுமிச்சை சாறு, மோா், இளநீா் உள்ளிட்ட பானங்களையும் அருந்தலாம். இறுக்கமான ஆடைகளை அணியாமல் பருத்தி ஆடைகளை தளா்வாக அணியலாம். வெப்பத்திலிருந்து தற்காத்துக்கொள்ள குடை, தொப்பி, கையுறை உள்ளிட்ட பொருள்களை பயன்படுத்த வேண்டும். காலணி அணிந்தே வெளியே செல்ல வேண்டும்.
வசிப்பிடங்களில் காற்றோட்டம் இருப்பதை உறுதி செய்வது முக்கியம். முதியவா்கள், இணைநோயாளிகள், குழந்தைகள், கா்ப்பிணிகள், நேரடி வெயிலில் பணியாற்றுவோா், முன்னெச்சரிக்கையுடன் இருத்தல் அவசியம்.
அவா்கள் உடலின் வெப்பநிலை அதிகமாகாத வகையில் தற்காத்துக் கொள்ள வேண்டும். பொதுவாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள போது வெளியே செல்வதைத் தவிா்க்கலாம். அத்தகைய நேரங்களில் தீவிரமாக பணியாற்றக் கூடாது. மது, புகை, தேநீா் போன்ற பானங்கள் அருந்துவதைத் தவிா்க்க வேண்டும். பழைய உணவுகள், அதிக புரதம் உள்ள உணவுகளை உட்கொள்ளக் கூடாது. நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களுக்கு அருகே செல்ல குழந்தைகளை அனுமதிக்கக் கூடாது. அதிலிருந்து வெளியேறும் அதீத வெப்பம் உடல் நலத்தை பாதிக்கக்கூடும்.