
வெயில் காலம் வந்தாலே சிலர் எப்பொழுதும் சொரிந்து கொண்டே இருப்பார்கள். சொரிந்து சொரிந்து அந்த இடம் சிவப்பாக தடித்து போய்விடும். சில சமயங்களில் தோல் உரிவதும் ஏற்படும். இப்படி உடலில் ஏற்படும் அரிப்புக்கு பல காரணங்கள் உண்டு.
1. ஒவ்வாமை
ஒவ்வாமை காரணமாக அரிப்பு ஏற்பட்டால், எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதைக் கண்டறிந்து அந்தப் பொருளை தவிர்த்து விடுவது நல்லது.
2. சரும பிரச்சினைகள்
சருமம் எண்ணெய் பசையின்றி வறண்டு போவதும் காரணமாக இருக்கலாம். வறண்ட சருமம் அரிப்பை ஏற்படுத்தும்.
3. தொற்றுகள் மற்றும் சில மருந்துகள்
சருமத்தில் ஏற்படும் தொற்று காரணமாக அரிப்பு உண்டாகலாம். அதே போல் சில மருந்துகளின் பக்க விளைவுகள் காரணமாகக் கூட சருமத்தில் அரிப்புகள், தடிப்புகள் உண்டாகலாம்.
4. பூச்சிக்கடி மற்றும் மகரந்தம்
சில பூச்சிகள் கடிப்பது அரிப்பையும், எரிச்சலையும் ஏற்படுத்தும். பூக்களின் மகரந்தங்கள் கூட காற்றில் பறந்து உடலில் படும்போது அரிப்பை ஏற்படுத்தலாம். சில எரிச்சலூட்டும் ரசாயனங்கள், அழகுசாதனப் பொருட்கள் சருமத்தில் அரிப்பு மற்றும் எரிச்சலை உண்டாக்கும்.
சரும அரிப்புக்கான எளிய வீட்டு வைத்தியங்கள்:
1. அரிப்பு ஏற்படும் இடத்தில் சொறிவதோ, தேய்ப்பதோ கூடாது. கைகளை சுத்தமாக வைத்து கொள்ளவும். சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருக்க ஈரப்பதமூட்டும் கிரீம்களை தடவலாம்.
2. அலர்ஜி ஏற்படுத்தும் பொருட்களை கண்டறிந்து தவிர்த்து விடுவது நல்லது. தேங்காய் எண்ணெய் சிறந்த மாய்ஸ்சரைசராக பயன்படுகிறது. இதனை அரிப்பு உள்ள இடங்களில் தடவுவது அரிப்பை போக்க உதவும்.
3. குளிர்ந்த நீரில் குளிப்பதும், கற்றாழை ஜெல்லை அரிப்புள்ள இடங்களில் தடவுவதும் அரிப்பை போக்க உதவும்.
4. அரிப்பை போக்க மேல் பூச்சாக கேலமைன் லோஷன் போன்ற லோஷன்களை பயன்படுத்துவதும், மெடிகேடட் சோப்புகளை பயன்படுத்துவதும் பலன் தரும்.
5. அரிப்பு உள்ள பகுதியில் சில நிமிடங்கள் ஈரமான துண்டு அல்லது துணியில் சுற்றிய ஐஸ் கட்டிகளை வைப்பது நல்ல பலனைத் தரும்.
6. ஓட்ஸை சிறிது தண்ணீர் விட்டு நன்கு அரைத்து சருமத்தின் மேற்பரப்பில் தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவிட தோல் வறட்சி மற்றும் அரிப்புகள் நீங்கும்.
7. வெதுவெதுப்பான நீரில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து குளிக்க பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இவை அரிப்பை கட்டுப்படுத்தும்.
8. ஆப்பிள் சைடர் வினிகர் 1:1 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து தடவி உலர விட்டு பின்பு வெதுவெதுப்பான நீரில் குளிக்க, அரிப்பு நீங்கும்.
9. தளர்வான பருத்தி ஆடைகளை அணிவது சரும எரிச்சல் மற்றும் அரிப்புகளை குறைக்க உதவும்.
அதிகப்படியான அரிப்பு மற்றும் தொடர்ந்து ஏற்படும் அரிப்புக்கு தகுந்த மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக் கொள்வது நல்லது.