
ஒவ்வொருவரும் தினசரி தூங்கி எழுந்ததும் அந்தநாள் வெற்றிகரமாக அமைய வேண்டுமென நினைப்பது இயற்கை. நம் இந்திய கலாச்சாரம், சில செயல்களை காலையில் முதன் முதலாக செய்யும்போது அந்த நாள் அதிர்ஷ்டமற்றதாகவும் எதிர்மறை விளைவுகளை உண்டுபண்ணக்கூடியதாகவும் அமையக்கூடிய வாய்ப்பு உண்டு என்று கூறுகிறது. அப்படி நாம் செய்யக்கூடாத 5
செயல்கள் என்னென்ன என்பதை இப்பதிவில் பார்க்கலாம்.
1. எழுந்தவுடன் முகம் பார்க்கும் கண்ணாடியில் உங்கள் முகத்தைப் பார்ப்பது அமங்கலமாகக் கருதப்படுகிறது. ஏனெனில், அப்போது உடலின் சக்தியானது சமநிலையற்று இருக்கும். தூக்கம் கலையாத சோர்வுற்ற முகத்தை கண்ணாடியில் பார்க்கும்போது எதிர்மறை எண்ணங்கள் மனதில் தோன்றும். மனத் தெளிவும் நம்பிக்கையும் உள்ளுக்குள் உண்டாகாது.
2.காலையில் எழுந்ததும், முதலில் துடைப்பத்தைப் பார்ப்பதோ அல்லது அதை கையில் எடுத்து சுத்தம் செய்ய ஆரம்பிப்பதோ அபசகுணம் என நம்பப்படுகிறது. அது பொருளாதார அபிவிருத்தியை முடங்கச் செய்து பணக் கஷ்டத்தை உண்டுபண்ணக்கூடும்.
3.காலையில் முதல் வேலையாக மொபைல் போனை திறப்பதும் செய்யக்கூடாத செயலாக கூறப்படுகிறது. ஏனெனில் அதில் ஏதாவது துக்கம் தரக்கூடிய செய்தி வந்திருக்கலாம் அல்லது எதிர்மறை விளைவுகளோடு உங்கள் மனதிற்குள் நஞ்சை கலக்கும் வகையில் ஒரு கட்டுரை வந்திருக்கலாம். மூளையானது எழுந்தபின் அரை மணி நேரத்திற்குள் பார்க்கும் விஷயங்களை ஆழமாக உட்கிரகித்துகொள்ளும் தன்மை கொண்டது. எதிர்மறை நிகழ்வுகளை மூளைக்குள் ஏற்றிக்கொண்டால் அந்த நாள் முழுவதும் அவைகளே மூளையை சுற்றிக்கொண்டிருக்கும்.
4.உணர்ச்சிகரமான சண்டை சச்சரவுகளை காலையில் பார்ப்பது உங்கள் ஆழ்மனதை பாதிப்புக்குள்ளாக்கவும் உடலில் சக்தியின் அளவை குறைக்கவும் செய்யும். இம்மாதிரியான கட்சிகளைப் பார்ப்பது அந்த நாள் முழுவதும் மனதுக்குள் வருத்தங்களையும் அமைதியின்மையையும் உண்டு பண்ணும்.
5.காலையில் எழுந்ததும் காலியான பாத்திரங்கள், உதிர்ந்த முடி மற்றும் சிதறிக் கிடக்கும் பொருட்கள் ஆகியவற்றைப் பார்ப்பது நல்லதல்ல. இவை ஏழ்மை மற்றும் ஒழுங்கின்மையை கொண்டு வருவதற்கான அறிகுறிகள். இவை உடலின் சக்தியையும் விரைவாக வற்றிப்போகச் செய்துவிடும். முந்தின நாள் படுக்கச்செல்லும் முன்பே அறையை ஒழுங்குபடுத்தி சுத்தமாக வைத்துவிட்டுப்படுப்பது ஆரோக்கியம்.
இப்போது உங்களின் நாட்கள் எப்பொழுதும் வெற்றிகர மானதாக அமைய நீங்கள் என்ன செய்யவேண்டும் என்பதையும் பார்க்கலாம்.
எழுந்தவுடன் உங்கள் உள்ளங்கைகளைப் பாருங்கள். லக்ஷ்மி, சரஸ்வதி, விஷ்ணு ஆகிய கடவுள்களின் ஆசிகளைப் பெறலாம். "இன்றைய தினம் அமைதியாகவும் வெற்றிகரமானதாகவும் கழியும்" என்ற வார்த்தைகளை உச்சரியுங்கள். சில நிமிடங்கள் சூரிய ஒளியில் நில்லுங்க. உடலும் மனமும் சக்தி பெறும். ஒரு டம்ளர் தண்ணீர் குடிங்க. உடலும் மூளையும் ஆக்டிவேட் ஆகும். இலக்கை நிர்ணயித்து கவனமுடன் செயலாற்றுங்கள். எல்லா நாளும் இனிமையானதாகும்.