சில நேரங்களில் நாம் சுகாதாரமற்ற, உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகளை உட்கொள்ளும்போது நம் உடலானது சிறிதும் தாமதமின்றி அவ்வகை உணவுகளை வயிற்றிலிருந்து வெளியேற்ற முயற்சிக்கும். அந்த செயலில் உதவிபுரிய உடலிலிருந்து அதிகளவு நீரை வயிற்றுக்குள் இழுத்து அதனுடன் சேர்த்து அந்த உணவுகளை வெளியேற்றும். இதனை நாம் பேதி அல்லது டையரியா (diarrhoea) என்கிறோம். அந்த மாதிரியான நேரங்களில் வயிற்றுப் போக்கைக் குணப்படுத்த நாம் உட்கொள்ளவேண்டிய உணவுகள் என்னென்ன என்பதைப் பார்க்கலாம்.
* ப்ராட் டயட் (BRAT) எனப்படும் பனானா, ரைஸ், ஆப்பிள் சாஸ் மற்றும் டோஸ்ட் ஆகியவை அடங்கிய உணவு. இதிலுள்ள வாழைப்பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. வயிற்றுப்போக்கினால் உண்டாகும் எலக்ட்ரோலைட் மற்றும் நீரிழப்பை சமன்படுத்தவும் நல்ல செரிமானத்துக்கும் உதவும் வாழைப்பழம்.
* ஒயிட் ரைஸ் சுலபமாக ஜீரணமாகக் கூடியது. மலத்தை கெட்டியாக்கவும் செய்யும்.
* ஆப்பிள் சாஸில் உள்ள பெக்டின் என்ற கரையக்கூடிய நார்ச்சத்தும், டோஸ்ட் செய்த பிரட்டும் வயிற்றுக்குள் மலத்தை கெட்டியாக்க உதவும்.
* யோகர்டில் உள்ள ஆக்ட்டிவ் ப்ரோபயோட்டிக்ஸ், வயிற்றிலிருந்து வெளியேறிய நல்ல பாக்டீரியாக்களின் அளவை மீண்டும் இட்டு நிரப்ப உதவும்.
* மாமிச எலும்புகள் உபயோகித்து தயாரிக்கப்படும் சாறு (Clear Broth) எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் நீரிழப்பை சரி செய்ய உதவும்.
* வேகவைத்த கேரட் உண்பது வயிற்றுக்கு மிருதுத்தன்மையை அளிக்கவும் செரிமானத்துக்கு உதவவும் செய்யும்.
* இஞ்சி ஆன்டி இன்ஃபிளமேட்டரி குணம் கொண்டது. இஞ்சி டீ குடிப்பதால் வயிற்றுப் போக்கினால் வயிற்றுக்குள் உண்டாகியிருக்கும் அசௌகரியங்கள் நீங்கும்.
மேற்கூறிய உணவுகளால் நோயின் தீவிரம் குறையவில்லையெனில் உடனடியாக மருத்துவரை அணுகுவது நலம்.