
கோடைக்காலம் தொடங்கிவிட்டால் இரண்டு விஷயங்கள் தடைப்படாமல் வந்துகொண்டே இருக்கும். ஒன்று சோர்வு, மற்றொன்று வியர்வை. இதை சாதாரண நேரங்களில் சமாளித்துவிடலாம். ஆனால், தூங்கிக் கொண்டிருக்கும்போது நேர்ந்தால் அது அசௌகரியத்தைத் தரும். அதை எப்படிச் சமாளிக்கலாம்?
தூங்கும்போது அதிகமா வேர்க்குதா? எப்படிச் சமாளிக்கலாம்?
நல்ல தூக்கத்திற்கு முதலில் அதற்கேற்றச் சூழலை நாம் உருவாக்க வேண்டும். பருத்தி அல்லது மூங்கில் போன்ற இயற்கையான துணிகளால் செய்யப்பட்ட இலகுரக படுக்கைகளைத் தேர்வு செய்யலாம். இது சிறந்த காற்றோட்டத்தை (Ventilation) தர அனுமதிக்கிறது. நம் உடலின் வெப்பம் (Heat) தக்க வைக்கப்படுவதையும் குறைக்கிறது. திறந்த ஜன்னல்களுக்கு அருகில் ஈரமான துணி அல்லது துண்டை வைப்பது அறைக்குள் நுழையும் காற்றைக் குளிர்விக்க உதவும். கூடுதலாக, படுத்து தூங்கும் சுற்றுப்புறத்தைக் குளிர்விக்க, தண்ணீரால் நிரப்பப்பட்ட மண் பானைகளை நாலாபுறமும் பயன்படுத்துவது அறையில் வெப்பம் அதிகரிப்பதைத் தடுக்கும்.
வியர்வையை நிர்வகிப்பதில் நீரேற்றம் முக்கியப் பங்கு வகிக்கிறது. என்னதான் உங்களுக்கு வியர்வை அதிகரித்தாலும், நாள் முழுவதும் நிறைய தண்ணீர் குடிப்பது உடல் வெப்பநிலையைச் சீராகப் பராமரிக்க உதவுகிறது. நீரிழப்பு (Dehydration), தூக்கத்தில் உடலில் ஏற்படும் அசௌகரியமும் தடுக்கப்படுகிறது.
தர்பூசணி, வெள்ளரி, இளநீர் போன்ற நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது உடலுக்குக் குளிர்ச்சியை மேலும் மேம்படுத்தும். படுக்கைக்கு போகுமுன் காரமான அல்லது அதிகமான உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம். ஏனெனில் அவை உங்கள் உடல் வெப்பநிலையை உயர்த்தும். மற்றும் வியர்வை வருவதை அதிகமாகத் தூண்டும்.
படுப்பதற்கு முன் குளிப்பது, உடல் வெப்பநிலையைக் குறைத்து சருமத்தைப் புத்துணர்ச்சி அடையச் செய்கிறது. வியர்வை அதிகம் உள்ள பகுதிகளில் டால்கம் பவுடரைப் (Talcum powder) பயன்படுத்துவதும், ஈரப்பதத்தை உறிஞ்சும் துணிகளால் ஆன தளர்வான ஆடைகள் (Wearing loose clothes) அணிவதும் அந்நேரங்களில் உண்டாகும் அசௌகரியத்தைக் குறைக்கும். கற்றாழை ஜெல் (Aloe vera gel) அல்லது சந்தன பேஸ்ட் (Sandalwood paste) போன்ற இயற்கையான பொருட்களைச் சருமத்தில் பயன்படுத்துவது குளிர்ச்சியான உணர்வை அளிக்கும்.
இதுபோக பேட்டரியால் இயக்கப்படும் மின்விசிறிகள் அல்லது தூங்குவதற்கான கூலிங் பேடுகள் (Cooling pads) போன்ற புதுமையான விஷயங்கள் மின்சாரம் தடைப்படும்போது நமக்கு உதவும். இதனால் நம் தூக்கத்தின் தரத்தைக் கணிசமாக மேம்படுத்த முடியும்.
தூக்கம் வருவது இயல்பான ஒன்று ‘ஒரு தடவ முடிவு பண்ணிட்டனா என் பேச்ச நானே கேட்க மாட்டேன்’ என்று நடிகர் விஜய் சொல்வதுபோல், நமக்கு தூக்கம் வந்துவிட்டால் எந்தச் சூழ்நிலையிலும் தூங்கி விடுவோம். ஆனால், இது எல்லோருக்கும் பொருந்தாது. அதுவும் இந்த மின்சார தடை ஏற்பட்ட நேரங்களில் சற்று கடினம்தான்.
எனவே, மேலே குறிப்பிட்ட இந்த விஷயங்களைப் பின்பற்றி ஒரு சௌகரியமான தூக்கத்தை வர வைத்துக் கொள்ளுங்கள்.