நமது உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு கல்லீரலின் நலம் மிகவும் முக்கியம். நமது உடலின் உற்பத்தி மையமாக இருக்கிறது கல்லீரல்.
இதில் உள்ள நச்சுக்கள் நமக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றன. உங்கள் கல்லீரலின் ஆரோக்கியத்தை பாதிக்கும் மோசமான உணவுகள், பானங்களை நாம் முற்றிலும் தவிர்க்க வேண்டியது அவசியம். ஆரோக்கியமற்ற உணவு பண்டங்களை தொடர்ந்து சாப்பிடுவதால் கொழுப்பு கல்லீரல் பிரச்சனை ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.
அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கல்லீரலை பாதிக்கும் சில உணவுகளை தவிர்த்தால் ஆரோக்கியமாக இருக்கும்.
அதிக சர்க்கரை சேர்த்த உணவுகளை சாப்பிடுவது முதல், தினசரி மாத்திரைகளை எடுத்துக் கொள்வது வரை எனப் பல்வேறு வழிகளில் நமது கல்லீரல் பாதிக்கப்படுகிறது.
ஆரோக்கியமற்ற உணவு பண்டங்களை சாப்பிடக்கூடாது. நாம் சாப்பிடும் உணவை சேமித்து வைப்பதோடு செரிமானத்திற்கு உதவும் முக்கியமான உறுப்பாக இருக்கிறது கல்லீரல். உங்கள் கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த ஐந்து உணவுகளை தவிர்த்தால் ஆரோக்கியம் பெறலாம்.
1. உப்பு நிறைந்த உணவுகள்
உணவில் சுவையைக் கூட்ட அதிகமாக உப்பு சேர்ப்பதால் அது கல்லீரலின் செயல்பாட்டை பாதித்து உயர் ரத்த அழுத்தம் வருவதற்கு காரணமாக இருக்கிறது.
2. கொழுப்பு உணவுகள்
பர்கர் பீட்சா ஆகியவற்றை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இந்த உணவுகள் எளிதாக செரிமானம் ஆவதில்லை. அதோடு கொழுப்பு கல்லீரல் (fatty liver) ஏற்பட காரணமாக இருக்கிறது. டிரான்ஸ் கொழுப்புகள் கல்லீரலுக்கு ஆரோக்கியமற்றதாகும். வறுத்த உணவுகளில் அதிக அளவு கொழுப்பு உள்ளது. இந்த உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிடும்போது கல்லீரலில் வீக்கம் ஏற்பட்டு சிரோசிஸ் நோய் உண்டாகிறது. அதனால் இதை அளவாக சாப்பிட வேண்டும்.
3. சிவப்பு இறைச்சி
சிவப்பு இறைச்சியில் நம் உடலுக்கு தேவையான புரதங்கள் இருந்தாலும், இறைச்சி உணவுகள் செரிமானம் ஆவதற்கு நிறைய நேரம் ஆகும். மேலும் அதிகப்படியான புரதம் உடலில் சேர்வதால், கல்லீரல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் உருவாகின்றன.
4. மாவுச்சத்து உணவுகள்
உருளைக்கிழங்கு, வெள்ளை அரிசி , பிரட் போன்றவை எளிதாக செரிமானம் ஆனாலும், இந்த உணவுகள் நம் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கும். கல்லீரல் நோய் வருவதற்கு இதுபோன்ற உணவுகள் முக்கிய காரணமாக உள்ளது. ஆகவே மாவுச்சத்து நிறைந்த இந்த உணவுகளை குறைவான அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
5. அதிகமான வெள்ளை சர்க்கரை
அதிகப்படியான வெள்ளை சர்க்கரையை உண்டால் உங்களின் கல்லீரல் மிகவும் மோசமாக பாதிக்கும். சர்க்கரைக்கு மாற்றாக ஆரோக்கியமான நாட்டு சர்க்கரை உணவை உங்கள் தினசரி டயட்டில் சேர்த்துக் கொள்ளவும் . ஆரோக்கியமாக சாப்பிடும் போது இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படாது. தானியங்கள் /இனிப்புகள், கேக் போன்ற அனைத்தும் சர்க்கரை சேர்க்கப்பட்ட பொருட்களை முற்றிலும் தவிர்க்கவும் . இதனால் கல்லீரலில் ஏற்படக்கூடிய அழுத்தம் குறைவதற்கு உதவியாக இருக்கும்.
கல்லீரலை பாதுகாக்கும் உணவுகள்
மஞ்சள்
மசாலா பொருளாக பயன்படுத்தப்படும் மஞ்சள் மருத்துவ பொருளாக பயன்படுத்தப்படுகிறது. மஞ்சளில் உள்ள குர்க்குமின் கல்லீரலில் ஆரோக்கியத்திற்கு பல்வேறு வகைகளில் உதவுகிறது. நச்சுத்தன்மையை நீக்கி சுத்தப்படுத்தப்படுகிறது. அதேநேரத்தில் ஆல்கஹால் அல்லாத கல்லீரல் நோய் கடுமையான மற்றும் நாள் பட்ட கல்லீரல் காயங்கள் ,சிரோசிஸ் நோய் ஆகியவற்றில் இருந்தும் பாதுகாக்கிறது.
பூண்டு
வேர் காய்கறியான பூண்டில் சல்பர் சேர்மங்கள் நிறைய உள்ளது. அவை கல்லீரலுக்கு தேவையானது ஆகும். மேலும் கல்லீரல் உடலில் இருந்து நச்சுக்கள் மற்றும் கழிவுகளை அகற்ற தேவையான என்சைம்களை செயல்படுத்தவும் பூண்டு உதவுகிறது.
முழு தானியங்கள்
உங்கள் உடலை நச்சுத்தன்மை அற்றதாக இருக்க பதப்படுத்த உணவு வகைகளை உட்கொள்வதை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக வைட்டமின் பி ,பாஸ்பரஸ், மாங்கனீசு.,மெக்னீசியம் போன்ற நச்சுத்தன்மையை நீக்க, கல்லீரலுக்கு வலிமை அளிக்கக்கூடிய தாதுக்கள் அதிகம் உள்ள முழு தானியங்களை உணவில் சேர்க்க வேண்டும். முழு தானியங்களான பழுப்பு அரிசி போன்றவற்றில் கல்லீரலை பாதுகாக்கும் செலினியம் அதிகம் உள்ளது.
பழங்கள்
பழங்கள் கல்லீரலின் செயல்பாடுகளைத் தூண்டுவதற்கு பயனுள்ளதாக இருக்கிறது . பழங்களாகவோ பழக்சாறாகவோ எந்த வடிவில் எடுத்துக் கொண்டாலும் அவை கல்லீரலுக்கு நன்மை பயக்கும். சிட்ரஸ் பழங்கள் கல்லீரலின் செயல்பாட்டினை தூண்டுவதற்கு நன்கு உதவுகின்றன.
உலர் பழங்கள்
பாதாம், வேர்க்கடலை மற்றும் சூரியகாந்தி விதைகளில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது. ஆய்வுகளின் படி வைட்டமின் ஈ ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகிறது. அக்ரூட் பருப்பில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் குளூட்டோன் போன்றவை கல்லீரலை சுத்தப்படுத்த பெரிதும் உதவுகிறது.
கொட்டைகள், முழு தானியங்கள், கடல் உணவுகள், பருப்பு வகைகள் காய்கறிகள், ஆலிவ் எண்ணெய் , கிரீன் டீ, பச்சை இலை காய்கறிகள், பீட்ரூட் ,கேரட் என அனைத்தும் கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது . எனவே கல்லீரலை பாதுகாக்க இந்த உணவுகளை உட்கொள்ளலாம்.