கோடைகாலத்தில் நிம்மதியாகத் தூங்குவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்!

Tips for a Restful Sleep
Tips for a Restful Sleep

கோடைகாலத்தில் பகல் நேரங்களில் சூரிய வெப்பம் வாட்டியெடுக்கும் அதே வேளையில், இரவு நேரங்களிலும் அந்த வெப்பத்தை நாம் உணர்வதால், நிம்மதியான தூக்கத்தை அடைவது மிகவும் சவாலானதாகும். நமது ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் பங்களித்து, ஆற்றலுடன் இயங்க தரமான தூக்கம் அவசியம். எனவே, இந்தப் பதிவில் கோடை காலத்தில் எப்படி நிம்மதியாக தூங்குவது? எனப் பார்க்கலாம்.

  • கோடைகாலத்தில் நல்ல தூக்கத்தை பெற உங்கள் படுக்கை அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க வேண்டியது அவசியம். படுக்கை அறை நல்ல காற்றோட்டத்துடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். ஜன்னல் கதவுகளை வெயில் காலங்களில் திறந்தே வையுங்கள். முடிந்தால் ஒரு ஏசி வாங்கி மாட்டிக்கொள்வது நல்லது. பெட்ரூமில் நேரடி வெப்பத்தைத் தடுக்க, வாயிற்படியில் திரைச்சீலைகள் பயன்படுத்தி மூடவும். இதன் மூலமாக குளிர்ச்சியான படுக்கை அறையை பராமரிக்க முடியும். 

  • உங்கள் வீட்டின் அறையை குளிர்ச்சியாக வைத்திருக்க, டேபிள் ஃபேன் எதிரே ஒரு கிண்ணத்தில் ஐஸ் கட்டிகள் போட்டு வைக்கவும். இதன் மூலமாக குளிர்ந்த காற்று அறை முழுவதும் பரவி குளிர்ச்சியாக மாற்றும். அறையில் இருக்கும் வெப்பக் காற்றை வெளியே தள்ள, எக்ஸாஸ்ட் ஃபேன் பயன்படுத்தவும். 

  • கோடை காலத்தில் உங்கள் உறக்கத்தை மேம்படுத்த உடற்பயிற்சி அல்லது வெளியே சென்று வேலை செய்யும் உடல் செயல்பாடுகளில் ஈடுபடுங்கள். உறங்குவதற்கு முன் உடற்பயிற்சி செய்யக்கூடாது. இது உடலின் வெப்பநிலையை உயர்த்தி, தூக்கத்தை கெடுத்துவிடும். குறிப்பாக இரவு நேரங்களில் காபி, டீ, கார்பனேட்டட் பானங்கள் போன்றவற்றைக் குடிக்க வேண்டாம்.

  • ஒரு சீரான உறக்க நேரத்தை பின்பற்றுங்கள். இதன் மூலமாக உங்கள் உடல் இது தூங்குவதற்கான நேரம் என்பதைத் தெரியப்படுத்தி சரியான நேரத்திற்கு தூங்க வழிவகுக்கும். இரவு நேரத்தில் புத்தகங்கள் படிப்பது, குளியல், தியானம், மூச்சுப் பயிற்சி போன்றவை உங்கள் மனதை அமைதியாக்கி, தூக்கம் விரைவாக வர உதவும். 

  • இரவில் அதிக மின்சாதனப் பொருட்களைப் பயன்படுத்தாதீர்கள். குறிப்பாக உங்கள் அறையின் உள்ளே வரும் வெளிச்சத்தைத் தடுப்பது நல்லது. மின்சாதனப் பொருட்களில் இருந்து வெளிவரும் நீல ஒளி உங்களது தூக்கத்தை வெகுவாக பாதித்துவிடும். எனவே இரவில் உங்களது படுக்கை அறை இருட்டாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். தூங்கும் சமயத்தில் இடையூறு ஏற்படுத்தும் சத்தங்கள் கேட்காதபடி, இயர் ப்ளக் பயன்படுத்தலாம். மேலும், சரியான உணவை தேர்ந்தெடுத்து, தினமும் போதிய அளவு நீர் குடித்தாலே உங்களது தூக்கத்திற்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். 

இதையும் படியுங்கள்:
சுகாதாரத் துறையில் Wearable Technology-களின் ஆற்றல் என்ன தெரியுமா? உலகமே மாறப்போகுது! 
Tips for a Restful Sleep

மேலே குறிப்பிட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க முயற்சி செய்யுங்கள். நல்ல தூக்கம் உங்களது ஆரோக்கியத்தில் நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால், தூக்கத்திற்கு முன்னுரிமை கொடுக்க வேண்டியது அவசியம். எனவே, நன்றாகத் தூங்கி நிம்மதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com