ஓசிடி என்பது ஒரு சிக்கலான நீண்ட கால மனநலக் கோளாறைக் குறிக்கிறது. ஓசிடி உள்ள நபர்கள் ஒரு செயலை திரும்பத் திரும்ப செய்வது, அதீத சுத்தம் பார்ப்பது போன்ற நடத்தையைக் கொண்டிருப்பார்கள். ஓசிடியின் அறிகுறிகள் மற்றும் காரணங்கள் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
ஓசிடியின் காரணங்கள்: ஒரு நபருக்கு ஓசிடி எனும் கோளாறு ஏற்பட மரபணு, நரம்பியல் நடத்தை மற்றும் சுற்றுச்சூழல் காரணிகளின் கலவையை உள்ளடக்கிய பன்முகத் தன்மை காரணமாக இருக்கிறது.
மரபணு காரணிகள்: ஒருசில குடும்பங்களில் ஓசிடி பிரச்னை உள்ள நபர்கள் இருந்தால், அடுத்து வரும் தலைமுறையில் உள்ளவர்களையும் அது பாதிக்கும் என்று கூறுகிறார்கள். குறிப்பிட்ட மரபணு மாறுபாடுகள், கவலை மற்றும் கட்டாய நடத்தைகளுடன் தொடர்புடைய நரம்பியக் கடத்தி அமைப்புகளை பாதிக்கலாம்.
நரம்பியல் காரணிகள்: நியூரோ இமேஜிங் ஆய்வுகள், பயம் மற்றும் பதற்றம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துவதன் தொடர்புடைய மூளைச் சுற்றுகளில் அசாதாரணமான அமைப்புகளை அடையாளம் கண்டுள்ளன. மனதில் மகிழ்ச்சியை அதிகரிக்கும் செரட்டோனின் என்ற ஹார்மோன் மற்றும் பிற நரம்பியல் கடத்திகளின் சீர்குலைவு காரணமாக ஓசிடி தாக்கலாம் என்று தெரிகிறது.
அறிவாற்றல் நடத்தை காரணிகள்: ஓசிடி உடைய நபர்கள் பெரும்பாலும் பொறுப்புக் கட்டுப்பாடு மற்றும் அவர்களின் எண்ணங்களின் முக்கியத்துவம் பற்றிய தவறான நம்பிக்கைகளை கொண்டிருப்பதாக அறிவாற்றல் கோட்பாடுகள் தெரிவிக்கின்றன. இவர்கள் தங்கள் சொந்த எண்ணங்களைத் தவறாகப் புரிந்து கொள்ளும்போது ஓசிடி ஏற்படுகிறது.
சுற்றுச்சூழல் அழுத்தங்கள்: மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை நிகழ்வுகள் அல்லது அதிர்ச்சிகரமான சம்பவங்கள் இதை ஏற்படுத்தலாம். மேலும், கர்ப்பம் அல்லது பிரசவத்தின்போது ஏற்படும் சிக்கல்கள், வயது தொடர்பான இனப்பெருக்க மாற்றங்கள், சமூக பொருளாதாரப் பிரச்னைகள், அதிர்ச்சிகரமான காயங்கள் போன்றவையும் இந்தக் குறைபாட்டிற்கு வித்திடலாம்.
ஓசிடி இருப்பவர்களின் செயல்பாடுகள்: இவர்களுக்கு கிருமிகள், அழுக்கு அல்லது நோய் பற்றிய அதீத பயம் இருக்கும். எப்போதும் விஷயங்களை ஒழுங்கமைக்க வேண்டிய தேவை அல்லது துல்லியமாக ஒரு விஷயத்தை செய்ய வேண்டும் என்ற அக்கறை இருக்கும். அதனால் கைகளை அதிகப்படியாகக் கழுவுதல் அல்லது சுத்தம் செய்தல் போன்றவற்றை செய்வார்கள். கிருமிகள் பயத்தினால் கூட்டத்தில் செல்வதைக் கூட தவிர்த்து விடுவார்கள்.
வீட்டை மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்துவார்கள். கதவைப் பூட்டிவிட்டு பலமுறை சரி பார்ப்பார்கள். அடுப்பை அணைத்து விட்டோமா என்று அதையும் பலமுறை செக் செய்து கொள்வார்கள். சொற்கள் அல்லது சொற்றொடர்களை குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூறுவார்கள். பணிபுரியும் இடங்களில் ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்வார்கள். மின்னஞ்சலை மீண்டும் மீண்டும் சரி பார்ப்பார்கள். மதம் அல்லது தார்மீக நெறிமுறை தாக்கங்களைப் பற்றிய அதிகப்படியான கவலை இருக்கும். பெரும்பாலும் குற்ற உணர்வுக்கு இட்டுச் செல்லும்.
இவர்களுக்குத் திரும்பத் திரும்ப வரும் தேவையற்ற எண்ணங்களைத் தடுக்க முடியாத உணர்வு ஏற்படும். தங்களைத் தாங்களே காயப்படுத்திக் கொள்வது அல்லது பிறரைக் காயப்படுத்தும் எண்ணம் ஏற்படலாம். சிலருக்கு தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் ஏற்படலாம். இந்த எண்ணங்கள் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தும்.
சிகிச்சை முறைகள்: ஓசிடிக்கு உளவியல் சிகிச்சை தீர்வாக இருக்கும். சம்பந்தப்பட்ட நபரின் பயம் மற்றும் பதற்றத்தை குறைக்க உதவும். மீண்டும் மீண்டும் கவலைப்படும் இயல்பை குறைக்கும் செரட்டோனின் போன்ற மருந்துகள் தரப்படுகின்றன. இவை மன அழுத்த எதிர்ப்புக்கு மருந்தாக அமைகிறது. ஆழ்ந்த மூளை தூண்டுதல் போன்ற சிகிச்சைகள் மேலும் ஒரு கதிரியக்க சிகிச்சையும் கொடுக்கப்படும்.
வாழ்வியல் முறைகள்: சமச்சீரான உணவு, உடற்பயிற்சி, நிறைய தூக்கம், தனிமையில் இருக்காமல் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுதல், யோகா, தியானம் போன்ற தளர்வு நுட்பங்களை பயிற்சி செய்தல் போன்றவற்றை செய்ய வேண்டும்.