மியூகஸ் நீர்க்கட்டி என்று அழைக்கப்படும் வாய் நீர்க்கட்டி என்பது சிறிய திரவம் நிறைந்த பையாகும். இந்த நீர்க்கட்டிகள் பாதிப்பில்லாதவை மற்றும் வலியற்றவை. இவை பொதுவாக கீழ் உதட்டின் உட்புறத்தில் தோன்றும்.
அறிகுறிகள்:
a) வலியற்ற சிறிய நீர்க்கட்டிகள் பெரும்பாலும் கீழ் உதட்டின் உட்புறத்தில் காணப்பட்டாலும் கன்னத்தின் உட்புறம், குறிப்பாக உதடு, நாக்கு என எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
b) வலியற்ற நகரக்கூடிய நீர்க்கட்டிகள் மென்மையாகவும், வட்டமாகவும் இருக்கும். பெரும்பாலும் நீல நிறத்தில் காணப்படும். இவை சில நேரங்களில் வெள்ளை நிறத்திலும் காணப்படும்.
c) ரனுலா (Ranula): நாக்கின் அடியில், வாயின் தரைப்பகுதியில் தோன்றும் சளி நீர்க்கட்டிகள்.
d) எபுலிஸ் (Epulis): ஈறுகளில் தோன்றும் சளி நீர்க்கட்டிகள்.
காரணங்கள்:
a) உதடு அல்லது வாயின் உட்புறத்தில் உள்ள திசுக்கள் சேதம் அடைந்தால், சளி வெளியேற முடியாமல் திசுக்களில் தேங்கி நீர்க்கட்டி உருவாகின்றன.
b) பொதுவாக உதட்டை கடித்து காயம் ஏற்படும் போது உமிழ்நீர் சுரப்பி சேதம் அடைந்து, வெளியேறும் உமிழ்நீர் படிந்து நீர்க்கட்டியாக உருவாகிறது.
c) உணவை மெல்லும் பொழுது தவறுதலாக உதட்டைக் கடிப்பது காரணமாக இருக்கலாம். உள்கன்னத்தை உறிஞ்சுதல் காரணமாகலாம்.
d) புகைப்பிடித்தல் அல்லது புகையிலை பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படும் நாள்பட்ட வீக்கம் காரணமாகலாம்.
சிகிச்சை மற்றும் தீர்வுகள்:
a) சளி நீர்க்கட்டிகள் பெரும்பாலும் தானாகவே சரியாகி விடும். அவற்றை அழுத்தி உடைக்கவோ, எடுக்கவோ முற்பட்டால் தொற்று ஏற்படலாம். அப்படி செய்யவும் கூடாது.
b) உப்பு நீரில் நீர்க்கட்டிகளை கொப்பளித்து சுத்தம் செய்வது தொற்றுநோயை தடுக்க உதவும்.
c) நீர்க்கட்டிகள் உள்ளவர்கள் உதடுகள், கன்னங்களை கடிப்பதையோ, உறிஞ்சுவதையோ தவிர்க்க வேண்டும்.
d) பெரிய நீர்க்கட்டிகள் பேசுவது, மெல்லுவது, விழுங்குவதில் சிரமத்தை ஏற்படுத்தும். அரிதான சந்தர்ப்பங்களில் ரனுலாக்கள் சுவாசிப்பதில் சிரமத்தை உண்டு பண்ணலாம். இதற்கு தகுந்த மருத்துவரை கலந்தாலோசித்து சிகிச்சை எடுத்துக் கொள்வது பிரச்சினையை எளிதில் தீர்க்க உதவும்.
e) நீர்க்கட்டிகளை அகற்ற கிரையோதெரபி, லேசர் சிகிச்சை மற்றும் சிறு அறுவை சிகிச்சை போன்றவை மருத்துவர்களால் மேற்கொள்ளப்படுகின்றன.
f) மீண்டும் மீண்டும் வரும் நீர்க்கட்டிகளுக்கு தகுந்த சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லது. சில சமயங்களில் இந்த சளி நீர் கட்டிகள் பெரியதாகி வலியை உண்டு பண்ணினால் பல் மருத்துவரை அணுகி தகுந்த சிகிச்சை பெறுவது நல்லது.
முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.