ஒருவருடைய உடலில் இருந்து மீன் வாசனை வந்தால் அவர்களுக்கு ‘ட்ரைமெதிலமினுரியா’வாக (Trimethylaminuria) இருக்கலாம். இது ஒரு மரபணு அரிய வகை கோளாறாகும். இது அழுகும் மீனைப் போலவே மிகவும் வலுவான வாசனையைக் கொண்டது. இது ஒரு நபருடைய உடலில் ட்ரைமெதிலமைன் என்னும் வேதிப்பொருளை அதிகமாகக் கொண்டிருக்கும்.
அறிகுறிகள்: இதன் முக்கிய அறிகுறி ஒரு வலுவான மீன் போன்ற வாசனையை நம் உடல் வெளியிடும். வியர்வை, மூச்சுக்காற்று, சிறுநீர் போன்றவற்றில் இதன் வாசனையை நன்கு அறிய முடியும். இதற்கான காரணம் தெரியாவிட்டாலும் பொதுவாக இது ஆண்களை விட பெண்களை அதிகம் பாதிப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது. பெண்கள் மாதவிடாய் காலத்திலும் மாதவிடாய்க்கு சற்று முந்திய காலத்திலும் இதனை உணர முடியும். இதற்கென்று தனியாக சிகிச்சை எதுவும் இல்லை.
காரணங்கள்: மீன் வாசனை நோய்க்குறி ஒருவரின் இளமைக் காலத்தில்தான் அதற்கான அறிகுறிகளை அதிகம் காட்டும். நம் உடல் ட்ரைமெதிலமைனை உற்பத்தி செய்யும் பொழுது சில என்சைம்கள் அதை உடைக்கிறது. அந்த வகையில் ரசாயனம் நம் செரிமான அமைப்பிலிருந்து நம் இரத்த ஓட்டத்தில் நகரும்பொழுது துர்நாற்றம் வீசாது. அது சரிவர நடக்காதபொழுது ட்ரைமெதிலமைன் நம் உடலில் உருவாகி, இறுதியில் நம்முடைய சுவாசம், வியர்வை, சிறுநீர் போன்றவற்றில் அழுகிய மீன்களைப் போன்ற நாற்றத்தை உண்டுபண்ணும்.
இவை நம் வாழ்க்கை முறையில் சில சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால் மனச்சோர்வு, கவலை, மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் உண்டாகும். இதற்கு தகுந்த மருத்துவரை அணுகி ஆலோசனை பெறலாம்.
தீர்வுகள்: இதற்கு எந்த சிகிச்சையும் இல்லை. ஆனால், நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் சில மாற்றங்களை செய்வதாலும், சில சோப்புகள் மற்றும் லோஷன்களை பயன்படுத்துவதும், அதிக மன அழுத்தம் இன்றி இருப்பதும் இந்நோயை குறைக்க உதவும். இதற்கு கடல் உணவுகள், முட்டை, பசும்பால், பீன்ஸ், வேர்க்கடலை போன்ற சில உணவுகளை தவிர்த்து விடுமாறு சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
மன அழுத்த பாதிப்பு: இப்பிரச்னை உள்ளவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டால் அவர்களுடைய நிலை இன்னும் தீவிரமாகும். எனவே, மனதை அதிகம் அலட்டிக்கொள்ளாமல் வைத்துக்கொள்வது நல்லது.
கடுமையான உடற்பயிற்சிகளை தவிர்ப்பது: மீன் வாசனை நோய்க்குறி பிரச்னை உள்ளவர்கள் கடுமையான உடற்பயிற்சிகள் செய்வதைத் தவிர்த்து விடுவது நல்லது. அதிக அளவில் வியர்வை வராத உடற்பயிற்சிகளை மட்டுமே செய்யலாம்.
சுகாதாரத்தில் கவனம்: சுத்தமாகக் குளித்து, சுத்தமான துணிகளை உடுத்தி, அமிலத்தன்மை சற்று அதிகம் உள்ள சோப்புகள் மற்றும் ஷாம்புகளை பயன்படுத்த துர்நாற்றத்தில் இருந்து விலகி இருக்க உதவும்.
வீட்டு வைத்தியங்கள்: இதற்கு சில எளிய வீட்டு வைத்தியங்களும் பயன் தரும். குளிக்கும் நீரில் சிறிதளவு எலுமிச்சை சாற்றை கலந்து குளிக்கலாம். சிறிதளவு எலுமிச்சை சாற்றை கைகளில் தேய்த்துக் கழுவலாம். வினிகருடன் சிறிதளவு நீர் கலந்து அந்த கரைசலில் கைகளை கழுவலாம். தக்காளி சாறுடன் சிறிதளவு எலுமிச்சை சாறும் கலந்து கைகளை தேய்த்துக் கழுவலாம்.
நீரில் சிறிதளவு கல் உப்பை சேர்த்து கரைத்து அதில் கைகளைக் கழுவ பலன் கிடைக்கும். அதேபோல் காபித்தூள் அரை ஸ்பூன் அளவில் எடுத்து கைகளில் நன்றாக தேய்த்து பின் குளிர்ந்த நீர் கொண்டு கழுவ பலன் கிடைக்கும். என்ன செய்தும் மீன் நாற்றம் போகவில்லை எனில் தகுந்த மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம்.