நம் உடலின் ஒவ்வொரு செயலையும் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிப்பவை ஹார்மோன்கள். இந்த ஹார்மோன்களின் சமநிலை குலையும்போது நம் உடலில் பல மாற்றங்கள் ஏற்படலாம். சில சமயங்களில் இந்த மாற்றங்கள் நமக்கு அதிக பிரச்சனைகளை ஏற்படுத்தும். இந்தப் பதிவில் ஹார்மோன் சமநிலையின்மையின் முக்கிய அறிகுறிகள் பற்றி விரிவாகக் காண்போம்.
ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறிகள்!
பெண்களில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படும்போது மாதவிடாய் சுழற்சி ஒழுங்காற்றதாக மாறும். மாதவிடாய் காலம் தவறியோ அல்லது மிகவும் அதிகமாகவோ இருக்கலாம். சிலருக்கு மாதவிடாய் இடைவெளியில் ரத்தப்போக்கு அதிகமாக ஏற்படலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக உடல் எடை அதிகரிப்பு குறிப்பாக வயிற்றுப் பகுதியில் கொழுப்பு சேர்ந்து எடை அதிகரிக்கும். ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை பின்பற்றினாலும் எடை அதிகரிப்பு ஏற்படுவது ஹார்மோன் சமநிலையின்மைக்கு ஒரு முக்கியமான அறிகுறி.
ஹார்மோன்கள் நம் மனநிலையையும் கட்டுப்படுத்துகின்றன. ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக மனசோர்வு, பதட்டம், கோபம், மனநிலை மாற்றங்கள் ஏற்படலாம். சிலருக்கு தூக்கமின்மை, அதிகப்படியான தூக்கம் போன்ற பிரச்சனைகள் உண்டாகும்.
ஹார்மோன் மாற்றங்களால் முகப்பரு, வறண்ட தோல், சருமத்தில் அதிக எண்ணெய் போன்ற சருமப் பிரச்சனைகள் ஏற்படலாம். சிலருக்கு சருமத்தில் அரிப்பு தடிப்புகள் போன்றவை கூட ஏற்படக்கூடும்.
ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக அதிகமாக முடி உதிரக்கூடும். சிலருக்கு தலைமுடி மெலிந்து போகும். ஒரு சிலருக்கு உடலில் பல பகுதிகளில் முடிகள் அதிகமாக வளரக்கூடும்.
உங்களுக்கு எப்போதும் சோர்வாகவே இருக்கிறது என்றால் அதற்கு ஹார்மோன் சமநிலையின்மை காரணமாக இருக்கலாம். தினசரி போதிய ஓய்வு எடுத்தாலும், சோர்வு நீங்காமல் இருந்தால் நிச்சயம் அது ஹார்மோன் பிரச்சனையாகத்தான் இருக்கும். சிலருக்கு ஹார்மோன் குறைபாடு காரணமாக பாலியல் ஆசை குறையக்கூடும். இதனால் பாலியல் சார்ந்த விஷயங்களில் எந்த ஆர்வமும் இல்லாமல் இருப்பார்கள்.
காரணங்கள்:
ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படுவதற்கு பல காரணங்கள் சொல்லப்படுகிறது. நீண்டகால மன அழுத்தம் ஹார்மோன் சுரப்பை பாதித்து அதன் உற்பத்தியை சீர்குலைக்கும். போதுமான அளவு தூக்கம் இல்லாமல் போனாலும் ஹார்மோன் பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.
ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் குறிப்பாக அதிக சர்க்கரை மற்றும் கொழுப்புள்ள உணவுகளை அதிகமாக உட்கொள்வது ஹார்மோன் சமநிலையை பாதிக்கும். பெண்களுக்கு பிறப்புறுப்பு தொற்றுகள் ஏற்பட்டால் அது ஹார்மோன் சமநிலையை பாதிக்கலாம்.
தைராய்டு சுரப்பிகள் சரியாக செயல்படாமல் போனாலும் ஹார்மோன்களின் அளவு பாதிக்கப்படும். பெண்களுக்கு ஏற்படும் PCOS நோய் காரணமாக ஹார்மோன்ஸ் பாதித்து மாதவிடாய் பிரச்சனைகள், அதிக முடி வளர்ச்சி போன்ற பாதிப்புகள் உண்டாகும்.
இப்படி, பல காரணங்களால் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படக்கூடும். மேற்கண்ட அறிகுறிகள் உங்களுக்கு இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறுவது அவசியம். மேலும், ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் மூலம் ஆரோக்கியமான ஹார்மோன் சமநிலையை பராமரிக்க முடியும்.