சமீபத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரணி கல்லீரல் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு ஏற்பட்ட புற்றுநோயின் தீவிரத் தன்மை நான்காம் கட்டத்தை எட்டியதும்தான் அறிகுறிகள் தென்பட்டுள்ளது. இதற்கு சிகிச்சை அளிப்பதற்காக இலங்கைக்கு சென்ற நிலையில், சிகிச்சை தொடங்குவதற்கு முன்பாகவே அவரது உயிர் பிரிந்தது.
மக்களிடம் கல்லீரல் புற்றுநோய் சார்ந்த போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை. எனவே ஒருவருக்கு கல்லீரல் புற்றுநோய் ஏற்பட்டால் அதன் ஆரம்ப கட்ட அறிகுறிகள் எப்படி இருக்கும் என இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவு முழுக்க முழுக்க தகவல் நோக்கத்திற்காக மட்டுமே எழுதப்படுவதாகும். உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருப்பின் தகுந்த மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது நல்லது.
கல்லீரல் புற்றுநோய் என்பது ஒரு கொடுமையான நோயாகும். உலக அளவில் லட்சக்கணக்கான மக்கள் இதனால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக ஒவ்வொரு ஆண்டும் இந்த நோயினால் 8 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவதாக சொல்லப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மக்களின் இறப்புக்களில் கல்லீரல் புற்றுநோய் முக்கிய காரணமாக இருக்கிறது.
கல்லீரல் புற்றுநோய் என்றால் என்ன?
கல்லீரல் புற்றுநோய் என்பது, கல்லீரல் செல்களில் உருவாகும் ஒரு விதமான அபரிமிதமான வளர்ச்சியாகும். இதில் பலவகையான புற்று நோய்கள் உருவாகலாம். மக்களுக்கு ஏற்படும் கல்லீரல் புற்றுநோயில் ‘ஹெபடோசெல்லுலர் கார்சினோமா’ என்பது மிகவும் பொதுவான வகையாகும். இந்த வகை புற்றுநோய் கல்லீரலின் உயிரணுவில் உருவாகிறது. கல்லீரலில் தொடங்கும் புற்றுநோயை விட மற்ற இடங்களில் இருந்து கல்லீரலுக்கு பரவும் புற்றுநோய் அதிகம் என சொல்லப்படுகிறது. இப்படி மார்பகம், நுரையீரல், பெருங்குடல் என மற்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்பட்டு கல்லீரலுக்கு பரவினால், அதை மெட்டாஸ்டேட்டிக் புற்றுநோய் என அழைப்பார்கள்.
கல்லீரல் புற்றுநோயின் அறிகுறிகள்:
கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதன் அறிகுறி இல்லாமலேயே பல ஆண்டுகள் வாழ முடியும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இது பல தருணங்களில் அறியப்படாமலேயே இருக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும் சில அறிகுறிகளை வைத்து கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அறிய முடியும்.
மேல் வயிறு வலி.
வயிறு வீக்கம்.
திடீர் எடை இழப்பு.
பசி இல்லாமல் போவது.
மஞ்சள் காமாலை.
உடல் மஞ்சள் நிறமாக மாறுவது.
எப்போதும் சோர்வாக இருப்பது.
திடீரென உடல்நிலை சரியில்லாமல் போவது.
இந்த அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம். நீங்களாகவே ஏதாவது அனுமானித்துக் கொண்டு, பிற மருத்துவ உதவிகளை நாடுவதை தவிர்க்கவும். எந்த அளவுக்கு விரைவாக கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் தொடங்கப்படுகிறதோ, கல்லீரல் புற்றுநோயிலிருந்து விடுபடும் வாய்ப்புகள் அதிகம்.